அக்ஷய் கதவைத் தட்டியவுடன், தூக்கக் கலக்கத்துடன் உள்ளேயிருந்து குரல் கேட்டது. "யாரது?"
அக்ஷய் அமைதியாகச் சொன்னான்,"போலீஸ்". சொல்லிக் கொண்டே தன் கண்ணாடியைக் கழற்றி சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். தலைமுடியை பழையபடி வாரிக்கொண்டான்.
விளக்கைப் போட்டு அவசர அவசரமாக ஒரு ஆள் கதவைத் திறந்தான். அந்தச் சிறுவனின் தந்தையாக இருக்க வேண்டும் என்று அக்ஷய் அனுமானித்தான். அந்த ஆள் வந்தது போலீஸ் அல்ல என்று உணர்வதற்குள் அக்ஷயின் வலது கை, அவன் கழுத்துப் பகுதிக்கு மின்னல் வேகத்தில் விரைந்தது. அடுத்த கணம் அந்த ஆள் கழுத்து ஒரு பக்கமாய் சாயச் சிலையாய் நின்றான். அவன் கண்கள் பயத்துடன் வெறித்துப் பார்த்தன. சத்தம் தொண்டையில் இருந்து எழவில்லை. தாங்க முடியாத வலியில் அவன் துடிப்பது விகாரமாய் மாறிய அவன் முக பாவத்திலிருந்து தெரிந்தது.
அவன் மனைவியும் மகனும் பீதியுடன் அவனையும் அக்ஷயையும் பார்த்தனர்.
அக்ஷய் அமைதி மாறாமல் வீட்டுக் கதவை உள்ளே இருந்து தாள் போட்டான். சமையலறையையும் சேர்த்து மூன்றே சிறிய அறைகள் உள்ள அந்த வீட்டில் சாமான்கள் நிறைந்திருந்தன. நடப்பதற்கும் படுப்பதற்கும் மட்டுமே தேவையான இடம் விடப்பட்டிருந்தது. அங்கிருந்த ஒரு நாற்காலியில் அக்ஷய் உரிமையுடன் உட்கார்ந்தான்.
சிறுவனின் தாய் பயத்துடன் கேட்டாள், "நீங்கள் யார்?"
"நான்தான் உங்கள் பகுதியில் வெடிகுண்டு வைத்தவன். உங்கள் மகனுக்கு என்னை நன்றாய்த் தெரியும்"
தாய், மகன் இருவர் முகத்திலும் கலவரம் குடியேறியது.
"அவரை நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர் ஏன் இப்படி நிற்கிறார்?"
"என்ன செய்தேன் என்பதை உங்கள் மகனிடமும் செய்து காட்டவா?"
அவள் பயத்தின் உச்சத்திற்கே சென்று மகனைத் தன்னருகில் இழுத்துக் கொண்டாள். "நான் இப்போது சத்தம் போட்டால் எங்கள் பகுதியில் உள்ள ஆட்கள் அத்தனை பேரும் கூடி விடுவார்கள். தெரியுமா?"
"தாராளமாய் சத்தம் போடு. உன் கணவனை பழையபடி ஆக்க என் ஒருவனால்தான் முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு சத்தம் போடு. டெல்லியின் பெரிய பெரிய ஆஸ்பத்திரிகளில் கூட சேதாரமில்லாமல் அவனை சரி செய்ய முடியாது." அவன் அமைதி குறையாமல், குரலை சிறிதும் உயர்த்தாமல் சொன்னான்.
அவள் தன் கணவனைப் பார்த்தாள். அவன் பரிதாபமாக அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் வேதனை தெரிந்தது. லேசாக நகர முயற்சித்தான். ஆனால் வலியில் உயிரே போவது போல் இருந்தது. கழுத்து சிறிது அசைந்தாலும் அவனால் வலி தாங்க முடியவில்லை. அதை உணர்ந்த அவள் அக்ஷயிடம் அவசரமாகக் கேட்டாள், "ஏன் அவரை இப்படிச் செய்தீர்கள்?"
"வெடிகுண்டு வைக்கிற தீவிரவாதி என்ன வேண்டுமானாலும் செய்வான். இப்போது நான் செய்தது வெறும் ஒரு சின்ன வித்தைதான். இதை ஒரு நொடியில் சரி செய்து விட முடியும். இன்னும் எத்தனையோ எனக்குத் தெரியும். இப்போது நான் திருகி விட்ட நரம்பையே சிறிது பலப்பிரயோகம் செய்து செயல் இழக்க வைத்து விட்டால் அவன் காலம் பூராவும் ஒரு ஜடமாய் படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும். செய்யட்டுமா?"
அவன் குரலில் கோபம் இருக்கவில்லை. குரல் உயரவில்லை. முகத்தில் குரூரம் இருக்கவில்லை. ஆனால் அந்த அமைதியே ஒரு இனம் புரியாத திகிலை அவளுள் ஏற்படுத்தியது. "நீங்கள் யார்? மந்திரவாதியா?"
அவளைப் பொறுத்த வரை மந்திரவாதி ஒருவனால்தான் இப்படியெல்லாம் செய்ய முடியும். அக்ஷய் ஒன்றும் சொல்லாமல் அந்தச் சிறுவனையே பார்க்க, அந்தச் சிறுவன் தந்தைக்கேற்பட்டிருந்த நிலையைப் பார்த்திருப்பதால் லேசாக நடுங்கினான்.
மகன் நடுக்கத்தையும் பார்த்த பிறகு அக்ஷயின் மௌனத்தையே கேள்வியாக எடுத்துக் கொண்ட அந்தப் பெண் மெல்லிய குரலில் சொன்னாள், "நாங்கள் என்ன செய்ய முடியும். போலீஸ் இவரிடம் இப்படி சொல்லா விட்டால் பொய் வழக்கு பதிவு செய்து விடுவோம் என்று பயமுறுத்தினார்கள்…."
அவள் எதையும் ஒளிக்காமல் சொன்னாள். அவள் கணவன் சிறு சிறு திருட்டுக் குற்றங்களில் ஈடுபட்டு ஓரிரு முறை சிறைக்கும் போய் வந்தவன். நேற்று இரவு இரண்டு போலீசார் வந்து அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தாங்கள் கூறியபடி மகனைக் கூற வைக்க வேண்டும் என்றும், தவறினால் பத்து வருடங்களுக்கு வெளியே வர முடியாதபடி வழக்கு பதிவு செய்து விடுவோம் என்று காவல் நிலைய போலீஸ் அதிகாரி கூறியதால் வேறு வழியில்லாமல் அவள் கணவன் ஒத்துக் கொண்டிருக்கிறான். அவள் மகன் தெரு நாடகங்களில் நன்றாக நடிக்கக் கூடியவன். அவனுக்கு டிவியில் எல்லாம் வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக இருந்ததால் அவர்கள் சொன்னபடி சொல்லி கச்சிதமாகத் தன் வேலையைச் செய்து முடித்திருக்கிறான். மற்றபடி அவர்கள் வெடிகுண்டைப் பார்க்கவுமில்லை. வைக்கவுமில்லை. அதை போலீசிற்கு வேண்டப்பட்ட யாரோதான் செய்திருக்க வேண்டும் என்பது அவளுடைய கருத்தாக இருந்தது.
அக்ஷய் கேட்டான், "அப்படி சொல்லச் சொன்ன போலீஸ் அதிகாரி பெயர் என்ன?"
அவள் திகிலுடன் சொன்னாள். "அதை வெளியே சொன்னது தெரிந்தால் அந்த ஆள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்"
அக்ஷய் எழுந்து கிளம்பத் தயாரானான். அதைக் கண்ட மூவர் கண்களிலும் மேலும் திகில் கூடியது. அவள் சொன்னாள்,"இவரை சரி செய்து விட்டுப் போங்கள்"
அவன் ஒன்றும் சொல்லாமல் கதவருகே சென்றான். அவள் அவசரமாகச் சொன்னாள், "அந்த அதிகாரி பெயர் ப்யாரி லால்"
"எந்த காவல் நிலையம் அந்த ஆள்?"
அதையும் அவள் அவசரமாகச் சொன்னாள். அதை மனதில் குறித்துக் கொண்ட அவன் சொன்னான், "ஒரு வேளை நான் போன பிறகு சத்தம் போட்டாலோ, நான் இங்கே வந்து விட்டுப் போனதை நீங்கள் யாரிடமாவது சொன்னீர்கள் என்று தெரிந்தாலோ நான் மறுபடி வருவேன். வந்தால் உங்கள் மகனை நான் நல்ல முறையில் கவனிக்க வேண்டியிருக்கும்."
போவதற்கு முன் மறுபடி மின்னல் வேகத்தில் சிலையாக நின்றிருந்த மனிதன் கழுத்தில் லேசாகத் தட்டினான். இயல்பு நிலைக்கு உடனடியாக வந்த அந்த மனிதன் நடந்ததை நம்ப முடியாமல் தன் கழுத்தைத் தடவிக் கொண்டு திரு திருவென்று விழித்தான். அதிர்ச்சியில் இருந்து மீள அவர்களுக்கு நிறைய நேரம் ஆயிற்று.
**********
"சஹானா என்னதான் ஆயிற்று? நீ போனில் கூட சரியாக ஒன்றும் சொல்லவில்லை"
கேட்ட தன் நண்பனைக் களைப்புடன் சஹானா பார்த்தாள். மது அவளுடைய கல்லூரி நண்பன். இப்போது கூட வேலை பார்ப்பவனும்தான். அவர்கள் இருவருக்கும் இடையே ஒளிவு மறைவு இருந்ததில்லை. அவன் அவளுடைய நலம் விரும்பி. தேவைப்பட்டால் அவன் அவளுக்குத் தன் உயிரையும் கூடக் கொடுக்கத் தயங்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். அவனிடம் அவள் எதையும் எப்போதும் மறைத்ததில்லை. மனம் விட்டு அவனிடம் பேசியது போல் அவள் இது வரை தன் வாழ்க்கையில் வேறு ஒருவரிடம் பேசியதில்லை.
இரவெல்லாம் சரியாக அவள் சரியாக உறங்கியிருக்கவில்லை. அக்ஷய் திரும்பி வரும் வரை அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. அவன் போகும் வழியில் யாரிடமாவது அகப்பட்டுக் கொள்வான் என்று பயமா, இல்லை அவனைத் தேடி யாராவது இங்கே வந்து விடுவார்கள் என்ற பயமா என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் நள்ளிரவு மூன்று மணிக்கு வந்தான். வந்தவுடன் சென்று படுத்துக் கொண்டான். பின்தான் அவள் லேசாகக் கண் மூடினாள்.
சஹானா மதுவிடம் வருணுக்கு நேரவிருந்த விபத்திலிருந்து ஆரம்பித்து வெளியே சென்ற அக்ஷய் இரவு மூன்று மணிக்கு வந்து சேர்ந்தது வரை விவரித்து சொன்னாள்.
அவனுக்கு எதோ ஆங்கில நாவல் படிப்பது போல் இருந்தது. "சஹானா, அவனை ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று தெரிந்த பின்னும் அவனை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தது போல ஒரு முட்டாள்தனம் வேறில்லை"
"இருக்கலாம் மது. அவனை வழியிலேயே இறக்கி விட்டு வருவதே புத்திசாலித்தனமாக இருக்கலாம். அவனும் அதையேதான் பல தடவை என்னிடம் சொன்னான். ஆனால் நிர்க்கதியாய் அவனை அப்படியே வழியில் இறக்கி விட்டு வந்திருந்தால் அது இதயமில்லாத தன்மையாய் இருந்திருக்கும். அதை விட முட்டாள்தனமே தேவலை இல்லையா?"
தன் சிநேகிதியை அவன் கனிவாகப் பார்த்தான். அவள் தன் மகன் மீது உயிரையே வைத்திருக்கிறாள். அவன் இறந்திருந்தால் அவள் வாழ்க்கையில் எல்லாம் அஸ்தமனம் ஆகியிருக்கும் என்பதை அவன் அறிவான். அந்த நன்றிக்காகத்தான் அவள் அக்ஷய் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மனிதனை தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் போலீஸ் வலை வீசித் தேடும் ஆசாமியை அவள் வீட்டுக்குள் வைத்திருப்பது அபாயமே என்று அவனுக்குத் தோன்றியது.
"சஹானா ஒரு வேளை அவன் தீவிரவாதியாகவே இருந்தால்?"
"மது, ஒளிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒருவன் ஒரு உயிருக்கு ஆபத்து என்று வந்த போது கொஞ்சம் கூட யோசிக்காமல் திரை மறைவிலிருந்து வெளியே வந்து காப்பாற்றுகிறான் என்றால் அவன் கண்டிப்பாக தீவிரவாதியாக இருக்க முடியாது. அதுவும் போலீஸ் நேற்று அவன் குண்டு வைத்தான் என்று சொல்வது பச்சைப் பொய். அதற்கு நானே சாட்சி"
"ஆனாலும் அவன் அந்தப் பையன் வீட்டுக்குப் போய் விட்டு வந்தது முட்டாள்தனம். போலீஸ் அவனைப் பின் தொடர்ந்து வந்திருந்தால் உன் நிலைமை என்ன தெரியுமா, சஹானா?"
சஹானா ஒன்றும் சொல்லவில்லை.
"சரி அந்தப் பையன் வீட்டுக்குப் போய் விட்டு வந்தவன் என்ன நடந்தது என்றாவது சொன்னானா?"
"காலையில் நான் என்ன ஆயிற்று என்று கேட்டேன். எதையும் குறைவாகத் தெரிந்து கொள்வது எனக்கு நல்லது என்றான். நான் அதற்கு மேல் கேட்கவில்லை"
அவள் வீட்டில் இருந்து கொண்டு தன்னிஷ்டப்படி நடந்து கொள்ளும் அந்தப் புதிய மனிதனை மதுவிற்குப் பிடிக்கவில்லை. "சஹானா நான் அவனைப் பார்க்க வேண்டும்" என்றான்.
(தொடரும்)