அமானுஷ்யன் (19)

அவன் ஒரு மேக்கப் சாதன கடையருகே காரை நிறுத்தச் சொல்லி உள்ளே போய் சில பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தான். வரும் போது ஒரு காதில் இக்காலக் கல்லூரி இளைஞர்கள் போடும் ஒரு சிறு வளையம் இருந்தது. அவன் நடையே மாறி இருந்தது. மிக இளையவனாகத் தெரிந்தான். அவன் காரில் ஏறும் முன் யாரோ ஒரு வழிப்போக்கன் ஏதோ கேள்வி கேட்க நுனிநாக்கு ஆங்கிலத்தில் ஏதோ பதில் சொன்னான்.

அவனிடம் ஏற்பட்டிருந்த மாறுதலைக் கண்டு சஹானா திகைத்தாள். முன்பு காரில் ஏறிய மனிதனே வேறு இப்போது தெரியும் மனிதனே வேறு என்று சொல்லும்படி இருந்தான். போட்டுக் கொண்ட கண்ணாடியாலும், தலை வாரிய விதம் மாறியதாலும் மட்டுமல்ல… எத்தனையோ சிறு சிறு வித்தியாசங்கள் அவனிடம் தெரிந்தன. மேலும் பேச்சும், நடையும், பாவனையும் ஒரு புதிய மனிதனாகவே அவனைக் காட்டின. வயது இன்னும் குறைந்தது போலவும், பட்டணத்துப் பகட்டான இளைஞன் போலவும் தெரிந்தான்.

வீடு நெருங்க ஆரம்பித்த போது அவனிடம் சஹானா சொன்னாள், "உங்களுக்கு ஒரு பெயர் இப்போது அவசியமாகத் தேவைப்படுகிறது. என்ன பெயர் வைத்துக் கொள்ளலாம்"

"இந்த வயதில் பெயர் வைத்துக் கொள்கிற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்" என்று சொன்ன அவன் புன்னகையுடன் வருணிடம் கேட்டான், "எனக்கு ஒரு பெயர் தேர்ந்தெடு வருண்"

வருண் தனக்குக் கிடைத்த முக்கியத்துவத்தில் மகிழ்ந்தான். யோசித்து விட்டுச் சொன்னான், "அக்ஷய். அது என் வகுப்பில் படிக்கும் என் நெருங்கிய நண்பனின் பெயர்"

"சரி. இனி மேல் நான் அக்ஷய்"

ஐம்பது வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சஹானா அங்கு வந்து இறங்கிய போது பக்கத்து வீட்டு பஞ்சாபிக்காரர் சத்தமாக வருணை அழைத்துக் கொண்டே அவர்களை நெருங்கினார்.

சஹானா அவனிடம் மெல்லிய குரலில் சொன்னாள், "இவர் எங்கள் பக்கத்து ஃப்ளாட் காரர். பெயர் ஜெய்பால்சிங். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். அடுத்தவர்கள் வீட்டு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அலாதி பிரியம். ஆனால் நல்ல மனிதர். இப்போது உங்களைப் பார்த்து விட்டதால் முழு ஜாதகமும் தெரிந்து கொண்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். ஜாக்கிரதை"

அழைத்தது வருணை என்றாலும் ஜெய்பால்சிங்கின் பார்வை எல்லாம் காரில் இருந்து இறங்கிய இளைஞன் மீதுதான் இருந்தது. சஹானா புன்னகையுடன் அவனை அவருக்கு அறிமுகப்படுத்தினாள்: "ஹாய் அங்கிள். இவர் அக்ஷய். என் மாமியாரின் தங்கை மகன்…..அக்ஷய்! சார் ஜெய்பால்சிங். எங்கள் பக்கத்து ஃப்ளாட்டில் இருக்கிறார்."

அக்ஷய் புன்னகையுடன் அவர் கையைக் குலுக்கினான். அவர் அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே கேட்டார், "நீங்கள் இதற்கு முன் இங்கே வந்ததில்லையே"

"நான் அமெரிக்காவில் இருந்தேன்…."

"இப்போது அங்கே நம் ஆட்களையெல்லாம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா, அதுதான் நீங்களும் வந்து விட்டீர்கள் போல இருக்கிறது"

அக்ஷய் முகத்தில் லேசான வருத்தத்தைத் தருவித்தான். அவர் சொன்னார், "கவலைப்படாதீர்கள். இங்கேயே நல்ல வேலை கிடைக்கும்"

அவன் நன்றி தெரிவித்தான்.

"தலையில் என்ன காயம்?"

தலையைப் புதிய விதமாய் வாரியதில் அந்தக் காயம் நன்றாகவே வெளியே தெரிந்தது. சஹானாவும், மரகதமும் அவனைப் படபடப்புடன் பார்க்க அவன் கண் இமைக்காமல் புன்னகையுடன் ஜெய்பால் சிங்கின் காதில் ரகசியமாய்ச் சொன்னான், "ஒரு அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டே பைக் ஓட்டியதில் விபத்து ஆகி விட்டது"

ஜெய்பால்சிங் வயிறு குலுங்க சிரித்தார். ஒளிவு மறைவில்லாமல் பேசும் அந்த இளைஞனை அவருக்கு நிறையவே பிடித்து விட்டது.

அதிகமாய் அவரிடம் பேச்சுக் கொடுக்காமல் அங்கிருந்து அவர்கள் நகர ஜெய்பால்சிங் சத்தமாய் அக்ஷயிடம் சொன்னார்,"அப்புறமாய் பேசலாம்"

அவன் கண்ணடித்துக் கொண்டே சொன்னான், "கண்டிப்பாக"

சஹானாவின் வீடு இரண்டு படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, சமையலறை கொண்ட நடுத்தரவர்க்க வீடாக இருந்தது. இது வரை ஒரு படுக்கையறையை சஹானாவும், இன்னொன்றை அவள் மாமியாரும் உபயோகித்து வந்தார்கள். அக்ஷயை எங்கே இருத்துவது என்று சஹானா யோசித்த போது மரகதம் சொன்னாள், "அவருக்கு என் அறையைத் தந்து விடு சஹானா. நான் வெளியே சமாளித்துக் கொள்கிறேன்…"

அக்ஷயிற்குத் தர்மசங்கடமாக இருந்தது. பெண்கள் மட்டுமே உள்ள ஒரு வீட்டில் ஒரு ஆணைத் தங்க அனுமதிப்பதில் எத்தனையோ அசௌகரியங்கள் உண்டு. "சஹானா.. இதற்குதான் சொன்னேன்…"

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை ஊகித்த சஹானா சற்று எரிச்சலுடன் சொன்னாள், "கீறல் விழுந்த ரிகார்டு போல் அதையே சொல்லாதீர்கள். நீங்கள் இங்கேதான் தங்குகிறீர்கள். எப்படி என்பதை மட்டும் யோசித்தால் போதும்." என்றவள் தனது மாமியாரிடம் திரும்பி, "அத்தை உங்களுக்கு தொந்தரவு ஒன்றும் இல்லையே" எனக் கேட்டாள்

"ஒரு தொந்தரவும் இல்லை. அவர் அந்த அறையில் தங்கட்டும்"

அக்ஷய் இருவரையும் நன்றியுடன் பார்த்தான். பின் மரகதத்திடம் சொன்னான், "நன்றி. ஒரு கேள்வி உங்களிடம் கேட்கலாமா?"

மரகதம் அவனைப் பார்த்தாள்.

"என்னைப் பார்த்தால் உங்களை விட வயதானவனாய்த் தெரிகிறேனா?"

மரகதம் முகத்தில் லேசாகச் சிரிப்பு வந்தது. "இல்லை"

"அப்படியானால் தயவு செய்து என்னை அவர் இவர் என்று கூப்பிடாதீர்கள். பார்க்கிறவர்களுக்கும் சந்தேகம் வரும்"

மரகதம் தலையாட்டினாள்.

அப்போது டிவியைப் போட்ட வருண் சொன்னான், "அங்கிள், உங்கள் படம் டி.வி.யில் தெரிகிறது"

மூவரும் திகைத்துப் போய் டிவியைப் பார்த்தார்கள். அவனுடைய படத்தை டிவியில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். செய்தி வாசிப்பவர் சொன்னதை அக்ஷய் கூர்ந்து கவனித்தான்.

"இன்று அதிகாலை டில்லி புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததைப் போலீசார் கண்டு செயலிழக்கச் செய்தனர். மிகவும் சக்தி வாய்ந்த அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தூரத்திற்கு பெருத்த சேதத்தை உண்டாக்கி இருக்கும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். காவல்துறையின் துரிதமான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். போலீசார் தீவிரமாக விசாரித்ததில் அங்கு வெடிகுண்டு வைத்த ஒரு மர்ம மனிதன் பற்றி தகவல் கிடைத்தது."

"அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு சற்று தள்ளி வசித்துவரும் தரம்சந்த் என்ற பதினான்கு வயது சிறுவன் அந்த மர்ம மனிதனைப் பார்த்திருக்கிறான். அவன் சொன்னதாவது…"

அந்தச் சிறுவனைக் காண்பித்தார்கள். அவன் பரபரப்புடன் சொன்னான், "நான் அதிகாலையில் வீட்டுக்குப் பால் வாங்க வெளியே வந்த போது அந்த ஆள் ஒரு கருப்பு ப்ளாஸ்டிக் பையுடன் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தான். அந்தப் பேருந்து நிறுத்தம் வந்தவுடன் அங்கே நின்றான். நான் பால் வாங்கி விட்டுத் திரும்பி வரும் போது அவன் வந்த வழியே போய்க் கொண்டிருந்தான். அவன் கையில் வைத்திருந்த கருப்புப் பை அந்த நிறுத்தத்தில் மூலையில் விழுந்து கிடந்தது. நான் அவன் தவறி அதை விட்டிருக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஆளைக் கூப்பிட்டு சொன்னேன். அந்த ஆள் கோபமாக அது தன் பை அல்ல என்று சொல்லி விட்டுப் போய் விட்டான். நான் வீட்டுக்குப் போனவுடன் அப்பாவிடம் சொன்னேன். அவர் வந்து பார்த்துச் சந்தேகப்பட்டுப் போலிசிற்குப் ஃபோன் செய்தார்"

காமிரா பையனை விட்டு ஒரு வெடிகுண்டு நிபுணர் மீது தாவியது. அவர் அந்த வெடிகுண்டு காலை ஒன்பது மணிக்கு இயங்கும்படி செய்யப்பட்டிருந்ததென்றும் அந்த நேரத்தில் அங்கு பள்ளிக் குழந்தைகள் மற்றும் வேலைக்குப் போகிறவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அது வெடித்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் உண்டாகி இருக்கும் என்றும் தெரிவித்தார்.

சிறுவன் சொன்ன அடையாளங்களை வைத்து அந்த தீவிரவாதியின் படத்தை நிபுணர்கள் வரைந்தார்கள் என்றும், அங்கு காட்டப்படும் மனிதனைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரிவித்தால் ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்பதையும், சொன்னவர் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாமல் பாதுகாக்கப்படும் என்பதையும் ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். வெடிகுண்டு வைத்தவன் ஏதாவது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆளாக இருக்குமா என்று நிருபர்கள் கேட்டதற்கு தற்போதைக்கு இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்று சொல்லி விட்டார்.

செய்திகள் முடிந்த போது சஹானா வீட்டில் மயான அமைதி நிலவியது.

(தொடரும்)

About The Author