அக்ஷயைப் பொறுத்த வரை காலம் நின்று போனது போலிருந்தது. காற்றில் மிதப்பது போன்ற உணர்வில் அவன் எத்தனை நேரம் இருந்தானோ அவனுக்குத் தெரியாது. தலையில் ஏதோ ஒரு இறுக்கம் லேசானது போல உணர்ந்தான். அவன் முயற்சி இல்லாமலேயே மறந்து போயிருந்த பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தன….
ஒரு நாள் அவனிடம் பேச வந்த ஆச்சார்யா முகத்தில் ஆழ்ந்த கவலை இருந்தது.
"என்ன ஆயிற்று சார்?" அக்ஷய் கேட்டான்.
உடனடியாக அவர் பதில் சொல்லவில்லை. யோசனையுடன் சொன்னார். "எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அதை நம்புவதா வேண்டாமா என்று தெரியவில்லை. நம்பவும் முடியவில்லை. நம்பாமல் ஒதுக்கி விடவும் முடியவில்லை."
அக்ஷய் அவரிடம் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் அவரை சிந்திக்க விட்டான். குழப்பத்தில் இருக்கிறவரிடம் கேள்வி கேட்டால் தெளிவான பதில் வராது. அவரே சிந்தித்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அமைதியாக இருந்தான்.
அவராகவே சிறிது நேரம் கழித்து சொன்னார். "காஷ்மீர் தீவிரவாதிகள் தலிபான்கள் உதவியுடன் நம் நாட்டில் நாச வேலைகள் செய்ய புதிய திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது….".
சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்தே காஷ்மீரம் இந்தியாவில் ஒரு தலைவலியாகவும், கேள்விக்குறியாகவும் இருந்து வருகிறது. சமீப காலமாக காஷ்மீர் பெயரைச் சொல்லிக் கொண்டு தீவிரவாதிகள் தங்கள் வெறியாட்டங்களை நடத்துவது அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் தான் மும்பையில் ஒரு வன்முறை நடந்து முடிந்திருக்கிறது. மறுபடியுமா?
அவன் வாய் விட்டு தன் எண்ணங்களைச் சொல்லா விட்டாலும் அதைப் படித்தது போல அவர் சொன்னார். "இத்தனை காலம் நடந்தது போல இல்லை இது. அந்த தீவிரவாதிகளுடன் நம் நாட்டு முக்கிய அரசியல்வாதி யாரோ கை கோர்த்து இருக்கிறார், அதனால் அழிவு அளவில்லாமல் இருக்கும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது."
"யார் எதிர்க்கட்சி அரசியல்வாதியா?"
"இல்லை ஆளுங்கட்சி அரசியல்வாதியாம்"
"ஆளும் கட்சி அரசியல்வாதியே ஏன் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தப் போகிறார்?"
"அது தான் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தகவல் சொன்ன ஆள் நம்பகமான ஆள் தான்."
"யார் அந்த அரசியல்வாதி என்பதையும் சொன்னானா?"
"அது அவனுக்குத் தெரியவில்லை. தீவிரவாதிகளின் தலைவர்கள் மட்டுமே தெரிந்து வைத்திருக்கக் கூடிய ரகசியம் அது என்று சொல்கிறான். இதன் மூலம் இந்திய நாட்டின் தலைவிதியையே மாற்றிக் காட்டுவோம் என்று சொல்கிறார்களாம்."
"சரி உளவுத் துறை என்ன சொல்கிறது?"
ஆச்சார்யா பெருமூச்சு விட்டார். "அவர்கள் காதிற்கு எதுவும் எட்டினது போல் தெரியவில்லை. அப்படி எட்டினாலும் ஆளும் கட்சி சம்பந்தப்பட்டால் அவர்கள் கண்டும் காணாமலும் கூட இருந்து விடலாம்".
ஆச்சார்யா அந்த செய்தியால் நிறையவே பாதிக்கப்பட்டிருந்தார் என்பது தொடர்ந்த நாட்களிலும் அவனுக்குத் தெரிந்தது. ஏதோ யோசனையில் எப்போதும் இருந்தார். ஏதாவது செய்து நடப்பதைத் தடுக்க வேண்டும் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கி நின்றது. கடைசியில் அப்துல் அஜீஸ் என்ற துருப்புச் சீட்டோடு அவர் ஒரு நாள் வந்தார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அந்த தலிபான் தீவிரவாதி பற்றிய ஒரு ஃபைலை அவனிடம் தந்து படித்துப் பார்க்கச் சொன்னார். அவனும் படித்துப் பார்த்தான்.
கடைசியில் அவர் சொன்னார். "… அடிக்கடி மாதக் கணக்கில் காணாமல் போய் மறுபடி களத்திற்கு வந்து சேரும் அப்துல் அஜீஸ் யாரிடமும் மிகவும் நெருக்கமாகப் பழகுகிறவன் அல்ல. அவன் எதிரிகள் அவன் பிணத்தைக் கூட வெளியே விட்டு வைக்கவில்லை. அதனால் அவன் இறந்து விட்டான் என்பதை முழுவதுமாக தலிபான்கள் நம்பவில்லை. என்றாவது ஒரு நாள் தங்கள் முன் வந்து நிற்பான் என்று தான் இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கைப்படி நடத்திக் காட்டினால் என்ன?"
அக்ஷயிற்கு உருதுவில் புலமை இருப்பது மிகவும் சாதகமான அம்சம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அக்ஷய் அப்துல் அஜீஸாக அவதாரம் எடுத்து அங்கு சென்று ரகசியங்களைத் தெரிந்து கொண்டு வர வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
அக்ஷய் சொன்னான். "அப்துல் அஜீஸிற்கு மிகவும் நெருங்கிய ஆட்கள், அவன் நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் சுலபமாக நான் அப்துல் அஜீஸ் அல்ல என்று கண்டு பிடித்து விடுவார்கள்…."
"அப்துல் அஜீஸிற்குக் குடும்பம் என்று ஒன்று கிடையாது. மிகவும் நெருக்கமானவர்கள் எல்லாம் பெண்கள் தான். அவர்களிடமும் ஒவ்வொரு தடவை ஒவ்வொருத்தியுடன் அவன் இருப்பான். அதுவும் ஒவ்வொரு தடவை ஒவ்வொரு வட்டாரத்தில் தான் தேர்ந்தெடுப்பான். அவர்கள் தலிபான் தலைமை வட்டத்தில் நுழைய முடியாதவர்கள். அப்துல் அஜீஸ் அங்கே போனால் தனியாகத் தான் போக முடியும். அந்த தலைமை வட்டம் மூன்று பேரைக் கொண்டது. அவர்களுடன் அப்துல் அஜீஸ் ஓரிரு வேலைகளில் சேர்ந்திருக்கிறான். அவ்வளவு தான். அவர்களுடனும் அவன் நெருக்கமாகப் பழகியவன் அல்ல. அவர்கள் மூன்று பேரைப் பற்றி உனக்கு எல்லா தகவலும் நான் தருகிறேன். தோற்றத்தில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் அவர்களுக்குத் தென்பட்டால் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அவன் தோற்றத்தையும் அடிக்கடி வித்தியாசமாக மாற்றிக் கொள்கிற வழக்கம் உடையவன். ஒரு முறை தலை முடியை நீளமாக வைத்துக் கொள்வான். அடுத்த முறை கிட்டத்தட்ட மொட்டை போல் முடியை வெட்டிக் கொள்வான். ஒரு முறை ஒருவிதமான குல்லாய் போட்டுக் கொண்டு திரிந்தால் இன்னொரு முறை நேர் எதிர்மாறான ஒரு குல்லாயுடன் இருப்பான். ஒருமுறை குண்டாக மாறுவான். திடீரென்று உடல் எடையை ஒரேயடியாகக் குறைத்துக் கொள்வான். இப்படி எல்லா விதங்களிலும் மாறிக் கொண்டே இருப்பான்….."
"குரல்?"
"அவனுடைய குரல் பிரத்தியேகமானதல்ல. ஒரு சாதாரண குரல். மிக மிக நெருக்கமானவர்கள் இல்லாததால் குரல் வித்தியாசத்தை பெரிதாக யாரும் கண்டுபிடித்து விட மாட்டார்கள். எதற்கும் அவன் வீடியோவையும் காண்பிக்கிறேன். கவனி. ஓரளவு நீ அப்படியே பேசலாம்…."
அப்துல் அஜீஸ் இருந்த மூன்று வீடியோ க்ளிப்கள் அவனுக்குப் போட்டுக் காட்டினார். அப்துல் அஜீஸ் பற்றி என்னவெல்லாம் அக்ஷய் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் ஆச்சார்யா சொல்லிக் கொடுத்தார். அவனுடைய நடை உடை பாவனைகள் எல்லாம் நன்றாகவே மனதில் பதிந்த பின்னர் அக்ஷய் சம்மதித்தான். அப்துல் அஜீஸைப் போலவே மாறியும் காட்டிய போது ஆச்சார்யா அசந்தே போனார். சின்னச் சின்ன அசைவுகளில் கூட அப்துல் அஜீஸாக அக்ஷய் மாறி இருந்தான்.
அக்ஷயிற்கு மரணம் பற்றிய பயம் இருக்கவில்லை. பிடிபட்டு இறந்தாலும் அவன் கவலை இல்லாமல் இறப்பான். மும்பையில் தாய் தந்தை இறந்த பின் அவனுக்கு உறவு என்று எதுவும் இல்லை என்று நினைத்த காலம் அது. எனவே அவன் செல்லப் போகும் பயணம் மரணத்தை நோக்கிய பயணமாகவே இருந்தாலும் அவன் அதைப் பற்றி பெரியதாக நினைக்கவில்லை. நாட்டில் எத்தனையோ பேரைக் காப்பாற்ற முடிந்தால் பிறந்ததற்கு அதை விடப் பெரிய அர்த்தம் என்ன இருக்க முடியும் என்று நினைத்தான்.
ஒரு நாள் ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அக்ஷயைப் பார்த்த ஒரு தலிபான் வீரன் துப்பாக்கியை அவன் முன் நீட்டியபடி கேட்டான். "யார் நீ"
அக்ஷய் உருதுவில் கவிதையாகச் சொன்னான்.
"என்னை யார் என்று கேட்டவனே
உன்னை யார் என்று உணர்ந்திருக்கிறாயா?
உன்னை நீ உணர்ந்திருந்தால்
என்னை யார் எனக் கேட்டிருப்பாயா?"
திருதிருவென விழித்த அந்த தலிபான் வீரனுக்கு உடனடியாகக் கோபம் வந்தது. துப்பாக்கியோடு அக்ஷயை நெருங்கியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் நெடுந்தூரம் தூக்கி வீசப்பட்டான். மலைத்துப் போய் அக்ஷயை உற்றுப் பார்த்தவன் கஷ்டப்பட்டு எழுந்தபடி முணுமுணுத்தான். "அப்துல் அஜீஸ்"
சிறிது நேரத்தில் அப்துல் அஜீஸ் வந்திருக்கிறான் என்ற செய்தி தலிபான் கூட்டத்திற்குள் பரவ ஆரம்பித்தது. உருதுக் கவிதையும் யாரையும் செயலிழக்க வைக்கும் சக்தியும் சேர்ந்து வேறு யாரிடம் இருக்க முடியும்?
அக்ஷயாக யாரையும் சந்திக்கச் செல்லவில்லை. சில மணி நேரங்களில் அவர்களாக அவனைத் தேடி வந்தார்கள். வந்தவர்கள் நான்கு பேர் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஆச்சார்யா குறிப்பிட்ட தலிபான் தலைமை வட்டத்தில் மூவரில் ஒருவன் என்பதை அக்ஷய் கண்டு பிடித்தான்.
அவன் கூர்மையாக அக்ஷயைப் பார்த்துக் கொண்டே சொன்னான். "நாங்கள் வெளியே எல்லாரிடமும் நீ உயிரோடு இருக்கிறாய் என்று சொன்னாலும் நீ செத்து விட்டிருப்பாய் என்று எங்களுக்குள்ளே பயந்து தான் போனோம். அந்த தாக்குதலில் இருந்து எப்படி தப்பித்தாய்"
அக்ஷய் உருதுவில் அழகாகச் சொன்னான். "மரணத்தை எதிரி நிச்சயிப்பதில்லை நண்பனே. அல்லா தான் நிச்சயிக்கிறார். நான் செய்ய வேண்டியது நிறைய இருப்பதாக அல்லா நினைத்திருக்கிறார் போல் இருக்கிறது. எப்படியோ உயிர் பிழைத்தேன்…"
"இத்தனை நாட்கள் எங்கிருந்தாய்?" சந்தேகத்தோடு அவன் கேட்டான்.
அக்ஷய் வாய் விட்டு சிரித்தான். "எந்தப் பெண்ணோடு நான் இத்தனை நாட்கள் இருந்தேன் என்று தெரிந்து கொள்ள ஏன் ஆசைப்படுகிறாய் நண்பனே".
தலிபான் தலைவன் உரிமையுடன் கோபித்துக் கொண்டான். "கண்ட கண்ட பெண்கள் சகவாசம் இல்லாமலிருந்தால் இன்னேரம் நீ எத்தனையோ சாதித்து இருக்கலாம். ஏன் தான் நீ இப்படி இருக்கிறாயோ?"
அக்ஷய் சிரித்துக் கொண்டே சொன்னான். "எத்தனை தான் துடைத்தாலும் வரிக்குதிரை தன் வரிகளை இழப்பதில்லை நண்பனே".
அந்த தலிபான் தலைவன் சிரித்துக் கொண்டே சொன்னான். "உண்மை தான்".
அவனுடன் வந்த மூன்று வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளோடு தயாராக தள்ளி நின்று இருந்தார்கள். தலிபான் தலைவன் அவர்களிடம் சொன்னான். "அப்துல் அஜீஸ் தான் இவன்".
அவர்கள் இறுக்கம் தளர்ந்து துப்பாக்கிகளை இறக்கினார்கள்.
(தொடரும்)