அமானுஷ்யன்-104

நாளை மறு நாள் குண்டுகள் டெல்லியில் வெடிக்கும் என்று யூகித்த பின்னால் ஆனந்திற்கும், மகேந்திரனிற்கும் இருப்பு கொள்ளவில்லை. அக்‌ஷய் திரும்பி வரும் வரை, அல்லது முக்கியமான தகவல் ஏதாவது தரும் வரை சும்மா இருக்க முடியாமல் என்ன செய்வது என்று யோசித்தார்கள். ஆனால் மகேந்திரன் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆனந்த் வெளியே செல்ல வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தான். ஒரு தடவை அதிர்ஷ்டம் ஆனந்திற்கு உதவியது போல அடுத்த முறையும் உதவும் என்பதற்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை என்று நம்பினான். வெளியே சென்று ஏதாவது செய்வதானால் அதைத் தானே செய்யலாம் என்று நினைத்தான்.

அப்போது தான் அவனுக்கு திடீரென்று ஒரு நினைவு வந்தது. பரபரப்புடன் கேட்டான். "ஆனந்த், அக்‌ஷய் அவனுக்குப் பழைய நினைவு வந்த போது ஏதோ ஒரு கூட்டத்தில் வேறு எதோ பெயரில் பேச எழுந்ததாய் சொன்னானே அது என்ன பெயர்?"

"அப்துல் அஜீஸ். ஏன் கேட்கிறாய்?"

"அந்தப் பெயரை நான் ஆச்சார்யாவின் கம்ப்யூட்டரில் உள்ள ஒரு ஃபைலில் பார்த்திருக்கிறேன். அவர் அது சம்பந்தமாய் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தது போல இருந்தது"

ஆனந்த் சொன்னான். "ஆனால் இப்போது அது ஆச்சார்யாவின் கம்ப்யூட்டரில் இல்லை. அதையெல்லாம் எதிரிகள் முன்கூட்டியே அழித்திருக்கிறார்கள்"

மகேந்திரன் அதே பரபரப்புடன் சொன்னான். "சிபிஐயில் உள்ள ரகசிய டேட்டா ஃபைலில் அதை அவர் சேர்த்திருந்தால் அதை அவர்கள் அழித்திருக்க முடியாது. அதை அழிக்கவோ மாற்றவோ ஜெயின் சார் ஒருவருக்குத் தான் அதிகாரம் இருக்கிறது. அதை அவர் கண்டிப்பாக செய்திருக்க மாட்டார். அதனால் அது சிபிஐ ரகசிய டேட்டா ஃபைலில் கண்டிப்பாக இப்போதும் இருக்க வாய்ப்புண்டு"

"ஆனால் அதை நாம் எப்படி படிக்க முடியும்?"

"அதை என்னிடம் விடு ஆனந்த். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று குறும்பாகக் கண்சிமிட்டிய மகேந்திரன் உடனடியாகக் கிளம்பினான்.

மகேந்திரன் சிபிஐ அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன் ராஜாராம் ரெட்டி அவனைக் கூப்பிட்டனுப்பினார். ஆரம்பத்திலிருந்தே அவனிடம் அவருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. எனவே மிகவும் அவசியம் என்றால் ஒழிய அவர் அவனை அழைத்துப் பேசியதில்லை. அதனால் இப்போது அவர் கூப்பிட்டனுப்பியது அவனுக்கு பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. அமானுஷ்யன் விவகாரத்தில் அவனுக்கும் ஏதாவது பங்கு இருக்கலாம் என்று யூகித்திருப்பாரோ?

அவன் அவர் அறைக்குச் சென்றான். ராஜாராம் ரெட்டி அவனை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று உட்காரச் சொன்னார். அவன் உட்கார்ந்தான்.

"மகேந்திரன். சென்னையில் இருந்து வந்த சிபிஐ ஆபிசர் ஆனந்தை நீ இந்த இரண்டு மூன்று நாட்களில் பார்த்தாயா?"

அவர் அவன் மேல் வைத்த கண்களை ஒரு கணமும் வேறுபக்கம் நகர்த்தவில்லை. அவன் சிறிது யோசித்து விட்டு சொன்னான். "ஜெயின் சார் இருந்த போது அவரிடம் அவர் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தது தான் கடைசி. அதுவும் நான்கைந்து நாள் இருக்கலாம். ஏன் கேட்கிறீர்கள் சார்"

ராஜாராம் ரெட்டி கவலையுடன் சொன்னார். "நான் அவருக்குப் போன் செய்தால் ‘ஸ்விட்ச்டு ஆஃப்’ தகவலே வருகிறது."

அப்படியா என்பது போல மகேந்திரன் அசுவாரசியத்துடன் பார்த்தான்.

ராஜாராம் ரெட்டி பெரிய ரகசியத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வது போல தாழ்ந்த குரலில் சொன்னார். "நம் ஆச்சார்யாவைக் கொலை செய்த உண்மையான நபரைக் கண்டுபிடிக்கிற வேலையில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவர் தங்கி இருக்கிற ஓட்டல் ரூமிற்கும் அவர் வந்து இரண்டு நாளாகிறது என்கிறார்கள். எங்கே போனார் என்று தெரியவில்லை. ஜெயின் சாருக்கும் உடல் நிலை சரியில்லாமல் போன இந்த சமயத்தில் ஆனந்தும் காணாமல் போனது எனக்கு கவலையாக இருக்கிறது. அதனால் தான் உங்கள் பார்வைக்கு அவர் பட்டாரா, இல்லை உங்களிடம் இந்த இரண்டு நாள்களில் அவர் பேசினாரா என்று கேட்டேன்"

மகேந்திரனும் அவரைப் போலவே ஒரு ரகசியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்வது போல அவரிடம் சொன்னான். "சார், உண்மையில் ஆனந்த் ஆச்சார்யா கொலை வழக்கில் என்னைக் கூட சந்தேகத்தோடு தான் பார்த்தார். அதனாலேயே அவர் என்னிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை."

ராஜாராம் ரெட்டி அவனைக் கூர்ந்து பார்த்தபடி அடுத்த கேள்வி கேட்டார். "நீங்கள் இன்று டிவியில் ஒரு தீவிரவாதி படத்தை போலீஸ் வெளியிட்டு வருகிறதே அதைப் பார்த்தீர்களா?"

மகேந்திரன் அலட்சியமாக சொன்னான். "பார்த்தேன் சார். அவன் யாதவ் எம்.பியின் கல்லூரியில் ஏழெட்டு போலீஸ்காரர்களைத் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டான் என்று சொல்கிறார்கள். அதை நம்பக் கஷ்டமாக இருக்கிறது. அவன் என்ன சினிமா கதாநாயகனா சார் இத்தனை ஆட்களை அடித்துப் போட்டு தப்பிக்க."

ராஜாராம் ரெட்டி சொன்னார். "நான் அந்த ஆட்களை ஆஸ்பத்திரியில் பார்த்தேன். எல்லாம் பரிதாபமாகப் படுத்துக் கிடக்கிறார்கள். அதனால் செய்தி உண்மை தான்…."

ஆனாலும் நம்பக் கஷ்டமாக இருக்கிறது என்பது போல் பார்த்து விட்டு மகேந்திரன் மௌனமாக இருந்தான்.

"மகேந்திரன் உன்னை யாராவது பின் தொடர்வதோ, உங்கள் வீட்டிற்கு சந்தேகப்படும் படி யாராவது வந்து போனதோ இந்த சில நாட்களில் நடந்திருக்கிறதா?"

மகேந்திரன் யோசித்தபடி இல்லை என்று ஆரம்பத்தில் தலையாட்டி விட்டு பிறகு தான் நினைவு வந்தவன் போல் சொன்னான். "…என்னை யாரும் பின் தொடர்ந்து வரவில்லை…. ஆனால் நாலைந்து நாட்களுக்கு முன்னால் நான் நண்பன் ஒருவன் கல்யாணத்திற்காக வெளியூர் போயிருந்த போது யாரோ ஒருவன் எங்கள் வீட்டிற்கு வந்து என்னை விசாரித்ததாக வீட்டில் சொன்னார்கள். அது என் நண்பனோ, எனக்குத் தெரிந்தவனோ இல்லை என்று மட்டும் உறுதி. ஆனால் நான் வந்த பிறகு என்னைப் பார்க்க ஒரு தடவை கூட அந்த ஆள் வரவில்லை. யார் என்பதே குழப்பமாக இருக்கிறது… எதற்கு சார் கேட்கிறீர்கள்?"

ராஜாராம் ரெட்டி கூசாமல் பொய் சொன்னார். "சில சிபிஐ ஆட்கள் அவர்களுக்கு அப்படி நடந்ததாக என்னிடம் தனிப்பட்ட முறையில் சொன்னார்கள். அது தான் நான் உங்களிடமும் கேட்டேன்…"

"இப்படியெல்லாம் நடப்பது எதனால் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் சார்?"

"சரியாகத் தெரியவில்லை. ஆனால் ஆச்சார்யா கொலை வழக்குக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது."

மகேந்திரன் ஆழ்ந்த யோசனையுடன் கேட்பது போல கேட்டான். "அப்படியானால் என் வீட்டுக்கு வந்தவன் கூட….?"

ராஜாராம் ரெட்டி தலையாட்டி விட்டு சொன்னார். "எதற்கும் ஜாக்கிரதையாக நீங்களும் இருங்கள்."

மகேந்திரன் போன பிறகு ராஜாராம் ரெட்டி யோசித்தார். அமானுஷ்யன் கேசவதாஸைப் பார்க்கப் போன போது மகேந்திரன் வீட்டிற்கும் போய் விசாரித்திருக்க வேண்டும். மகேந்திரன் அந்த சமயத்தில் விடுமுறையில் இருந்தது உண்மை. எனவே மகேந்திரன் அமானுஷ்யனிடம் அகப்படவில்லை. அவன் வந்த பின் அமானுஷ்யன் போவதற்கு முன் அந்தம்மாள் கடத்தப்பட்டதால் பிறகு மகேந்திரனைப் பார்க்கப் போவதைக் கை விட்டிருக்க வேண்டும். இரண்டு நாளாகவே மகேந்திரனை அவன் பார்த்து விட்டு மகேந்திரனும் அவனும் ஆனந்தும் சேர்ந்து காய்கள் நடத்துகிறார்களா என்று லேசாக சந்தேகப்பட்டது உண்மையல்ல…..

அலைபேசி அலறியது. பேசியது மந்திரி தான். "அந்த உளவுத்துறைக்காரன் நேரில் சொன்னதை எழுத்திலும் எழுதி எனக்கு ஒரு ஆள் மூலம் அனுப்பி இருக்கிறான்."

உளவுத்துறையின் ஜாக்கிரதை உணர்வு தற்காப்பு நடவடிக்கை என்பது ரெட்டிக்குப் புரிந்தது. அதை மந்திரியிடம் சொல்லவும் செய்தார்.

மந்திரி கோபப்பட்டார். "அந்த ஆளை அப்புறமாய் கவனித்துக் கொள்கிறேன். ….. அந்த சலீம் பற்றி வேறு ஆள் மூலமாக விசாரித்தேன். அவனை வரவழைத்ததே அமானுஷ்யனுக்காகத் தான். வரவழைத்ததும் அந்த தாடிக்காரன் கூட்டம் தான். அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை போய் விட்டது. அதனால் தான் அவர்கள் அவனைத் தருவித்திருக்கிறார்கள்."

ராஜாராம் ரெட்டி சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் அவருக்கு அமானுஷ்யனைத் தவற விட்டதில் அவமானமாகத் தான் இருந்தது. அந்த நிருபர்கள் கூட்டம் கூடாமல் இருந்திருந்தால் அமானுஷ்யன் இப்போது பிணமாகத் தானிருப்பான். ஆனால் இப்போதோ…. ஒரு பெருமூச்சு விட்டு விட்டு சொன்னார். "எப்படியோ அவன் செத்தால் சரி. அதை அந்த சலீம் செய்தாலும் சரி அந்த சனியன்கள் செய்தாலும் சரி தான்…"

*****************

சலீம் வேகமாக முடிவெடுக்க வேண்டி இருந்தது. இப்போது இதே விமானத்தில் அமானுஷ்யனும் பயணிப்பானா, இல்லை வெறுமனே அவனைக் கண்காணிக்க அவன் வந்தானா என்பதையும் சலீமால் தீர்மானிக்க முடியவில்லை. ஒருசில வினாடிகளில் தீர்மானித்த சலீம் விமானத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவன் முதுகில் இரண்டு கண்கள் துளைத்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு முறை கூட திரும்பிப் பார்க்காமல் சலீம் நடந்தான். விமானம் ஏறி உட்கார்ந்தான்.

அமானுஷ்யன் பின் தொடர்ந்து வந்து விமானத்தில் ஏறவில்லை. சலீம் மூளையில் சில சந்தேகங்கள், கணக்குகள் தோன்றி மறைந்தபடி இருந்தன. அமானுஷ்யன் உண்மையில் ஜம்முவிற்குப் போக வேண்டியவன் இல்லையா? ஜம்முவிற்குத் தான் போவான் என்ற அனுமானம் பொய்யா? ஆழமாக சிந்தித்தான். அமானுஷ்யன் கடைசியாக ஆச்சார்யாவைத் தொடர்பு கொண்டதெல்லாம் ஜம்முவில் இருந்து தான் என்று அவனுடைய ஃபைலில் தீவிரவாதிகள் உறுதியாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் அவன் ஏதாவது ரகசியமாய் ஒளித்து வைத்திருக்கிறான் என்றால் அது அங்கேயே தான் இருக்க வேண்டும்….

விமானம் கிளம்பியது. அமானுஷ்யன் வரவில்லை. சலீமிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் அமானுஷ்யன் இடத்தில் அவன் இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பான் என்பதால் வருத்தம் ஏற்படவில்லை. அமானுஷ்யன் இடத்தில் இருந்து அடுத்ததாக என்ன செய்வான் என்று யோசித்தான்.

முதலாவதாக அமானுஷ்யனாக அவன் இருந்திருந்தால் அவன் கண்டிப்பாக எங்கேயாவது பாதுகாப்பாக ஒளிந்து கொண்டிருப்பான். அவனைப் போலீசும், தீவிரவாதிகளும் வலை வீசித் தேடிக் கொண்டிருக்கையில் அவன் எங்கேயும் பயணம் செய்யாமல் ஓரிடத்தில் பதுங்கி இருப்பது தான் அவனுக்கு நல்லது. அவன் உண்மையாகவே ஏதாவது தடயத்தை ஒளித்து வைத்திருந்தால் அதை எடுத்து வரக்கூட வேறு யாருடைய உதவியையாவது நாடி இருப்பான். கல்லூரியில் அடைபட்ட விவகாரத்தில் கூட அத்தனை நிருபர்களையும் அதிகாலை நேரத்திலேயே அவனால் வரவழைக்க முடியும் என்றால் ஏதோ ஒரு நம்பிக்கையானவனைத் தேர்ந்தெடுத்து இங்கேயிருந்து இதை எடுத்து வா, அல்லது எடுத்து இதைச் செய் என்று சொல்வது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் இல்லை.

இந்த எண்ணம் தோன்றியவுடனேயே அவனுக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அப்படி நிஜமாகவே ஒருத்தனிடம் அந்த வேலையை அவன் ஒப்படைத்திருக்க வாய்ப்புண்டோ? அவனை ஜம்மு விமானத்தில் ஏற்றத் தான் அவன் வந்திருக்கிறானோ? சந்தேகம் தோன்றியவுடனேயே அவன் விமானத்தில் உள்ள பயணிகளைக் கவனித்தான். யாரும் சந்தேகம் கொள்கிற மாதிரி இல்லை.

ஆனால் போனில் ஆனந்திடம் அவன் சொன்னதென்னவோ தானே அந்த இடத்திற்குப் போவதாகத் தான். அவன் சொன்னது உண்மையாக இருக்குமானால் வேறு ஆளை அனுப்பாமல் அவன் தானாகப் போக வேண்டிய அவசியம் என்ன? அதற்கு ஒரே காரணம் தான் இருக்கக் கூடும். அவன் போனால் தான் அந்த தடயம் எடுக்க முடியும் என்ற நிலை இருக்கலாம். உதாரணத்திற்கு அவன் பேங்க் லாக்கரில் அந்தத் தடயத்தை வைத்திருந்தால் அவனே சென்று கையெழுத்திட்டு தான் அப்படி எடுத்து வர முடியும்.

இந்த எண்ணம் வந்த போது மற்றதெல்லாம் சரியாகவும் பொருத்தமாகவும் தோன்றியது. அமானுஷ்யனே போக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறான், ஆனால் பின் தொடரப்படுவதும் அவனுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது. அவன் போகக் கூடிய இடமும் எதிரிகள் யூகிக்கக் கூடிய இடமாக இருப்பதால் அப்படி பின் தொடர்ந்த ஆள் அந்த ஊரிற்குப் போகிறானா என்று கண்டுபிடிக்க முதலிலேயே விமான நிலையம் வந்து கண்காணித்திருக்கிறான். ஆம் என்று ஆனவுடன் அதில் பயணிக்காமல் விட்டு விடுகிறான்…..

சலீம் புன்னகைத்தான். அவன் கணிப்பு சரியென்றால் அமானுஷ்யன் அடுத்த விமானத்தில் ஜம்மு வர வாய்ப்பு இருக்கிறது.

ஜம்முவில் இறங்கியவன் விமான நிலையத்திலேயே காத்திருந்தான். டெல்லியிலிருந்து வரும் அடுத்த விமானத்திற்காக.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. Veena Kumar

    Each and every scenes r very interesting. அக்ஷய் & சலீம் r playing hide & seek? 🙂 . அக்ஷய்க்கு பழைய நினைவுகள் எப்போ, எப்படி வரும்? Eagerly waiting to know that.

Comments are closed.