அந்த புத்த விஹாரத்தின் கூரையில் தொப்பென்று ஏதோ விழுந்து உருண்டு வாசற்புறத்தில் கீழே விழுந்தது நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கேட்டது. உறக்கத்தில் இருந்த புத்த பிக்குகள் கண் விழித்தார்கள். இளம் பிக்கு ஒருவர் சொன்னார். "ஏதோ மரம் விழுந்து விட்டது போலிருக்கிறது"
இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விகாரத்தின் மீது மரக் கிளைகளும், வேரறுந்த மரங்களும் விழுவது புதிதல்ல.
ஆனால் அவர்களின் குருவான, எழுபது வயதைக் கடந்த மூத்த பிக்கு அமைதியாகச் சொன்னார். "சத்தத்தை வைத்துப் பார்த்தால் விழுந்தது மரமாகத் தெரியவில்லை. மனிதனோ விலங்கோ தான் விழுந்திருக்க வேண்டும். போய்க் கதவைத் திறந்து பார்"
அவர் சொன்னவுடன் எழுந்த அந்த இளம் பிக்கு இரண்டடி வைத்த பின் தயங்கினார்.
என்ன என்று மூத்த பிக்குவின் கண்கள் கேட்டன.
"மனிதன் என்றால் பரவாயில்லை. ஏதாவது விலங்காய் இருந்தால்…" இளம் பிக்குவிற்கு விலங்கிடம் மாட்டிக் கொள்ள விருப்பமில்லை.
"மனிதனாயிருந்தாலும் சரி, விலங்காய் இருந்தாலும் சரி, பிரக்ஞை இருக்க வாய்ப்பில்லை. விழுந்த விதத்தைப் பார்த்தால் அப்படித் தான் தெரிகிறது. விழுந்த சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. பிரக்ஞை இருந்திருந்தால் கண்டிப்பாக கத்தியிருக்க வேண்டும். எழுந்து ஓடின சத்தமும் இல்லை பார்த்தாயா. போய்ப் பார்"
இளம் பிக்கு தன் குருவை வியப்புடன் பார்த்தார். எதையும் புரிந்து கொள்ள கிழவருக்கு அதிக நொடிகள் தேவையில்லை. இது வரையில் அவர் எதையும் தவறாகப் புரிந்து கொண்டதுமில்லை. ஆனால் அவரும் மனிதர் தானே? எதற்கும் ஒரு ஆரம்பம் என்றும் இருக்கிறதே?….இளம் பிக்குவிற்கு இன்னும் தயக்கமாகவே இருந்தது.
மூத்த பிக்கு தன் பார்வையை மற்ற பிக்குக்களிடம் திருப்ப அவர்களில் இருவர் எழுந்து கையில் விளக்குகளை எடுத்துக் கொண்டு இளம் பிக்குவிற்குத் துணையாகக் கிளம்பினார்கள். இளம் பிக்கு அசட்டுச் சிரிப்புடன் போய் புத்த விஹாரத்தின் பெரிய மரக் கதவைத் திறந்தார். வெளியே இருந்து பனிக்காற்று பலமாக வீச ஒரு பிக்கு கையில் இருந்த விளக்கு அணைந்தது. மற்ற விளக்கின் வெளிச்சத்தில் விழுந்தது என்ன என்று பார்த்தார்கள்.
வெளியே ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
அதே நேரத்தில் டில்லியில் ஒரு மனிதன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான். சுவர்க் கடிகாரம் ஆமை வேகத்தில் நகர்வதாக அவனுக்குத் தோன்ற, டீப்பாயின் மீது வைத்திருந்த தன் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி இரண்டிலும் இரவு ஒன்று பத்து தான். அவன் எதிர்பார்த்த போன்கால் வராமல் அவனால் இன்று உறங்க முடியாது. அந்த போன் கால் மணி ஒன்று நாற்பத்திரண்டிற்கு வந்தது. பதட்டத்துடன் அவன் அந்த செல் போனை எடுத்தான். "ஹலோ"
"ஆபரேஷன் சக்ஸஸ்"
அந்த மனிதன் நிம்மதிப் பெரு மூச்சு விட்டான். "எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க"
பதினேழு நிமிடங்கள் கழித்து அந்த மனிதன் அந்த செல் போனில் இன்னொரு நபருக்குப் போன் செய்தான். மறுபக்கம் போனை எடுத்தவுடன் சொன்னான். "முடிச்சுட்டோம்"
சில வினாடிகள் மறுபக்கம் மௌனம் சாதித்தது. பிறகு அங்கிருந்து கேள்வி எழுந்தது. "உடம்பை என்ன செஞ்சாங்க"
"மலயுச்சில அவனைத் துப்பாக்கில சுட்டுருக்காங்க. குண்டு பட்டவுடனே அவன் பேலன்ஸ் தவறி உச்சியில் இருந்து கீழே விழுந்துட்டான். அந்தப் பக்கம் பெரிய பள்ளத்தாக்கு. குண்டு படாம விழுந்தாலே எந்த மனுஷனும் பிழைக்க முடியாது……"
"ஃபீல்டுல பலரும் அவனை மனுஷனாய் நினைக்கிறதில்லை. அவனுக்கு அமானுஷ்யன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?"
அந்தக் குரலில் லேசாகப் பயம் இருந்ததாகத் தோன்றியது. உடல் கிடைக்கவில்லை என்ற செய்தி மறுபக்கத்தை சங்கடப்படுத்தியதாகத் தோன்றியது. இரண்டு நாட்களுக்கு முன் CBI அடிஷனல் டைரக்டரையே சுட்டுக் கொன்ற போது அவர் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. அந்த அளவு அதிகார வர்க்கத்தின் உயரத்தில் இருக்கும் இத்தனை பெரிய மனிதரையே பயமுறுத்தும் அந்தக் குண்டடிபட்டு செத்தவனை நினைக்கப் பொறாமையாக இருந்தது.
மறுபக்கம் மறுபடி சொன்னது. "அவன் பிணத்தை அந்தப் பள்ளத்தாக்குல தேடச் சொல்லுங்க. அவன் கிட்ட ஏதாவது பேப்பர்ஸோ, வேறெதாவதோ இருந்தா எடுத்து அனுப்பச் சொல்லுங்க. பிறகு புதைச்சுட்டோ, எரிச்சுட்டோ தகவல் தெரிவிக்கச் சொல்லுங்க…."
"இந்த டிசம்பர் குளிரில் இமயமலைப் பள்ளத்தாக்குல ஒரு பிணத்தைத் தேடறது சுலபமில்லை….."
"எத்தனை செலவானாலும் பரவாயில்லை. வேலையை முடிக்கச் சொல்லுங்க…. உங்க பணம் ஸ்விஸ் அக்கவுண்ட்ல ஐம்பது லட்சம் டெபாசிட் ஆயிருக்கு. அவங்களுக்குத் தர வேண்டிய பணத்தை வழக்கமான இடத்தில் இருந்து நீங்க எடுத்துக்கலாம்…"
"தேங்க்ஸ் சார்"
இணைப்பு துண்டிக்கப்பட்டது. அந்த மனிதன் செல் போனில் மீண்டும் ஒரு எண்ணிற்குப் பேசினான். தனக்குத் தெரிவிக்கப்பட்டதை தானும் அந்த எண்ணில் பேசிய மனிதனுக்குத் தெரிவித்தான். பின் செல்போனை சைலன்ஸ் மோடில் மாற்றி சமையலறைக்குப் போய் பெரிய எவர்சில்வர் டப்பாவை எடுத்து அதில் நிறைந்திருந்த துவரம்பருப்பின் அடியில் அந்த செல்போனைப் பதுக்கி வைத்தான். ஒரு போலி நபர் பெயரில் பதிவாகி இருந்த அந்த செல்போனை இந்த ஆபரேஷனுக்கு மட்டுமே அவன் பயன்படுத்தி வருகிறான்….
"உயிர் இருக்கிறது"
"தலையில் அடிபட்டிருக்கிறது. தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது…"
புத்த பிக்குகள் பரபரப்பாய் வந்து சொல்ல, மூத்த பிக்கு உடலை உள்ளே எடுத்து வரச் சொன்னார். "தூக்கி வரும் போது முடிந்த வரை உடலை அசைக்காமல் கொண்டு வரப்பாருங்கள்". இன்னொரு பிக்குவிடம் தண்ணீரைச் சூடாக்கச் சொன்னார். தனதறையில் வைத்திருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்து பிரித்தார். அதில் பல விதமான கத்திகள், ப்ளேடுகள், பஞ்சு, தூய்மையான துணிகள், கூரிய கம்பிகள் எல்லாம் இருந்தன…..
உள்ளே எடுத்து வரப்பட்டவனுக்கு வயது 25லிருந்து 30க்குள் இருக்கலாம் என்று மூத்த பிக்கு கணக்கு போட்டார். மாநிறமாக சுமாரான உயரத்துடன் இருந்தான். ஒல்லியாக இருந்தாலும் உறுதியான உடலமைப்பைக் கொண்டவனாக இருந்தான். உடலில் பல இடங்களில் இருந்த வடுக்கள் அவன் அடிபடுவது புதிதல்ல என்று சாட்சி சொல்லின.
மூத்த பிக்கு அமைதியாகத் தன் சிகிச்சையை ஆரம்பித்தார். காயங்களைச் சுத்தம் செய்யும் போது அவன் மயக்க நிலையிலேயே இருந்தான். ஆனால் அவர் அவன் தோள்பட்டையில் இருந்து குண்டை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அதிகமாய் வலித்திருக்க வேண்டும். கண்களைத் திறந்து அவரைப் பார்த்தான். அவர் ஹிந்தியில் அவனிடம் சொன்னார். "கொஞ்சம் பொறுத்துக் கொள். அசையாதே. இரண்டே நிமிடம் தான்…."
அவன் அதன் பிறகு அசையவில்லை. மூத்த பிக்கு அவனுடைய மன உறுதியைக் கண்டு வியந்தார். மயக்க மருந்து இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையில் வலி எந்த அளவு இருக்கும் என்பதை அவர் அறிவார். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்ட விதம் அவரைப் பாராட்ட வைத்தது. குண்டை எடுத்து விட்டு மூலிகை மருந்துகளால் உறுதியாகக் கட்டுப் போட்ட பிறகு வலி குறைந்திருக்க வேண்டும். மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றான்.
மீண்டும் அவன் விழித்த போது அதிகாலையாகி இருந்தது. மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அருகில் இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் புன்னகைத்தான். புன்னகைத்த போது முகம் பிரகாசமாகி அழகாகத் தெரிந்தான்.
மூத்த பிக்குவும் புன்னகைத்தார். அவருக்கு ஏனோ அவனை மிகவும் பிடித்துப் போனது. கருணையுடன் ஹிந்தியில் கேட்டார். "எப்படி இருக்கிறது?"
அவன் பரவாயில்லை என்பது போல் தலையாட்டினான்.
"உன் பெயர் என்ன?" அவர் அன்புடன் கேட்டார்.
அவன் விழித்தான். கண்களை இரண்டு மூன்று முறை கசக்கிக் கொண்டு யோசித்தான். ஒன்றுமே தெரியவில்லை. மனத்திரையில் எல்லாமே வெறுமையாக இருந்தது. அவன் தமிழில் தாழ்ந்த குரலில் கேட்டான். "நான் யார்?"
பிக்குகள் இருவரும் விழித்தார்கள். ஹிந்தியில் மூத்த பிக்கு கேட்டார். "என்ன கேட்டாய்?"
அவன் சிறிதும் யோசிக்காமல் ஹிந்தியில் மறுபடியும் கேட்டான். "நான் யார்?". கேட்ட பின் தான் தன் கேள்வியின் விசித்திரம் அவனுக்கு உறைத்தது போலிருந்தது. அவன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தது தெரிந்தது. முகத்தில் படர்ந்த குழப்பம் நீங்காமல் நிறைய நேரம் தொடர்ந்தது. அவனுக்கு அவனைப் பற்றி எதுவுமே நினைவுக்கு வரவில்லை.
மூத்த பிக்குவும் இளம் பிக்குவும் அவனைத் திகைப்புடன் பார்த்தார்கள்.
(தொடரும்)
“
மிக மிக அருமை.
Great Welcome Ganesan Sir. As usual starting is very nice. Waiting to read more.
ஆரம்பமே நிறைய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.
புத்த விஹாரம் எனக்கு பிடித்த இடம். அதைச் சுற்றியே கதை நகருமா?
welcome sir. starting is very thrilling and nice. very eager to read more.
நீங்கள் எழுதுகிற கதைகள் என் கண்முன்னே உயிரோட்டமாக வருகிறது, வாழ்த்துக்கள் திரு.கணேசன்.
ஆரம்பத்திலேயே வாழ்த்தி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. தங்கள் எதிர்பார்ப்புகள் பொய்க்காது. புத்த விகாரம் சுற்றி சில வாரங்கள் கதை நகரும் ரிஷி அவர்களே. பின் அதை விட்டு நகரும்.
மிக அருமை. வாழ்த்துகள் சார். இமயமலைசாரலில் பொதிந்துகிடக்கும் பல ரகசியஙளை இத்தொடரில் படிக்க தர வெண்டுகிறேன்.
sirappana aarampam
முதல் அத்தியாயமே அடுத்து என்ன நடக்கப்போகின்ரதோ என்ர ஆவலை உன்டாக்கி விட்டது.