அப்பா (2)

பாட்டில்களை விலைக்குப் போடுகிற அன்று (அவை மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்கிற வரிசைப்படி) அப்பா மீண்டும் பீர் வாங்கி வருவார். தின்ன நிறைய வாங்கி வருவார். பேப்பர்காரனைவிடப் பக்தவச்சலம் கடையில் பாட்டிலுக்கு 25 காசு அதிகம் கிடைப்பதாய் நானே ஒரு முறை விசாரித்தபோது தெரிந்து கொண்டேன். இத்தனை நாளும் பேப்பர்காரன் எங்களை ஏமாற்றிவிட்டதாய் அப்பாவிடம் சொல்லிக் கோபித்துக் கொண்டதுண்டு. பின் பக்தவச்சலம் கடைக்கும் பாட்டில்களைப் பையில் போட்டுக்கொண்டு போகிற போது அவை உரசி உரசி சப்தமிடுவது எங்களுடனேயே வரும். வீதியில் உள்ள நெருக்கமானவர்களும், தெரிந்தவர்களும் "ஒரு நாளைக்குத்தான் எங்களுக்குக் கண்லே காட்டக்கூடாதாடா…" என்பார்கள். பீரில் கல்யாணி, கோல்டன் ஈகிள், ரீகல்ஸ் பேரட் என்கிற வகைகள் இருப்பதை நாங்கள் அப்பா மூலம் தெரிந்துகொண்டோம். அதைத் தவிர அப்பா உபயோகிக்காத வேற பீர் வகைகளும் இருக்கலாம் என்பது எங்கள் யூகம்.

வயசாகிப் பனியன் கம்பெனிக்குப் போகிறதை நிறுத்தின பின் பீர் அரிதானது. நான் சம்பளம் வாங்கி ஊர் போகிற போது பணம் கொடுக்கிற மறுநாட்களில் மறுபடியும் காலி பீர் பாட்டிகளைப் பார்க்க நேரிடும். பின் திருமணமாகி அவரைப் பார்க்கிறதான இடைவெளி எதுவும் ஒழுங்கு இல்லாமல் போன போது அவர் சிகரெட் குடிக்கிறதைக்கூட விட்டுவிட்டார் என்பது தெரிந்தது. இவற்றையெல்லாம் கைவிட அவர் சிரமப்பட்டிருப்பார் என்பது கூட வருத்தமாயிருந்தது. ஆனால் என்னைத் தேடி வரும்போது இவற்றையெல்லாம் எதிர்பார்த்தே வருவார்.

"அப்பா வர்றீங்களா… கடைவீதி வரைக்கும்" என்றேன். உற்சாகமாய் எழுந்தார். சுகந்தி லேசாய் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டாள். காய்கறிகளும் முட்டையும் வாங்கின பின், இருக்கிற ஒரே ஒயின் ஷாப் பக்கம் நடந்தோம்.

"இது கூட ரொம்ப நாளாச்சுடா" என்றார் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டைக் காட்டி. திரும்பும்போது "ஈகள் சுமார்தான்" என்றார்.

"போன தடவை நீ வாங்கிக் குடுத்த கல்யாணி சூப்பர் குவாலிட்டி. நல்லா இருந்துச்சு,"

"வேணுமுன்னா மாத்திக்கிலாம்ப்பா"

"பரவாயில்லே,"

பாக்குப் பொட்டலங்களை வாங்கி வைத்துக்கொண்டார் கையில். "சுகந்தி ஏதாச்சும் சொல்லுவாளை… நீ போனபிறகு உன்னெக் கோபிச்சுக்குவளா?" ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப இதைக் கேட்பார். இதைக் கேட்கிறபோதெல்லாம் முகம் தாழ்த்தியே இருப்பார். எனக்குச் சங்கடமாயும், வருத்தமாயும் இருக்கும்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா… மீறிப் போனா பத்து ரூபா… இதுக்குப் போயி என்ன… சுகந்தி ஒண்ணும் சொல்லமாட்டா…"

அன்றைக்குக் சுகந்தி செய்த தக்காளி ஆம்லெட் ரொம்பவும் நன்றாயிருக்கிறது என்றார். பாட்டிலின் குளுமையைக் கையில் பிடித்து ரொம்ப நேரம் உணர்ந்து அனுபவித்துச் சொன்னார். வழக்கமாய்ப் பாட்டிலைச் சாய்த்து டம்ளரில் திரவத்தைச் சாய்கிறதை லாவகமாய்ச் செய்தார். பொங்கின நுரை பார்த்துச் சிவகுமார் "ஹாய்…" என்றான். கை தொட நீட்டினான். ஆரம்பத்தில் பல் இடுக்கில்வைத்து மூடியைத் திறக்க முயன்று கொண்டிருந்தார். வாய் கோணலாகி கண்கள் சுருங்கி இடக் கண்ணிலிருந்து நீர் கசிந்தது. "குடுங்கப்பா நா தெறக்கறேன்" பல் காயம் பட்டு மூடி சிதைந்து வெளி வந்தது.

"நீ குடிச்சதே இல்லியே… பின்னெ மொடாக்குடியனா இருந்தாதான் இந்தெ ஓபனெரெல்லா வச்சிக்குவான். எனக்குத் தெரியாம குடிச்சிருக்கியாடா?"

"இல்லப்பா தோணலே… நீங்க குடிக்கறப்போ மூஞ்சியைச் சுளிச்சுக் கசப்பெ காட்டறப்பெல்லாம் வேண்டாம்ன்னு தோணும். குடிக்கத் தோணவே இல்லே… சுகந்தி டெலிவரி முடிஞ்சி உடம்பு வலியா இருந்தப்போ டாக்டர் வாங்கித் தரச் சொன்னார். மருந்துன்னு சுகந்தி கிட்டே குடுத்தேன். குடிச்சிட்டா… ரொம்பநாள் கழிச்சு சொன்னப்போ ஐயோ என்னெ ஏமாத்திட்டீங்களேன்னு கோபப்பட்டுச் சிரிச்சா… எல்லா இவனுக்காகத்தான்…"

"என்னப்பா கண்ணுக்குள்ளாற பட்டாம்பூச்சி பறக்கற மாதிரி மிதப்புன்னு சொல்வீங்களே. இப்போ எப்படி?"

"அதெல்லா மங்கிப் போச்சு. நீ சொன்னப்புறமும் அப்படிப் பறக்கறதா நெனச்சுப் பாத்தாலும் ஒண்ணும் தட்டுப்படலே…"

சிவக்குமார் "தாத்தா என்ன இது?"

"மருந்து…"

"நீ மருந்துத் தாத்தா ஆகிட்டே… இனி உன்னை மருந்து தாத்தான்னுதா நான் கூப்பிடுவேன்" என்றான்.

"அப்படியெல்லா வேண்டாடா சிவா" என்றேன். "அப்ப ஜட்டித் தாத்தான்னு கூப்புடட்டுமா…" என்றான் புது ஜட்டியைக் காட்டி.

"செரிடா அப்பிடியோ கூப்புடு, மருந்து தாத்தான்னு வேண்டாடா. எனக்குக் கிச்சுமுச்சுத் தாத்தாங்கறதான் புடிச்சிருக்குடா…"

தூங்குகிறபோது வெங்கடேஷையும், குழந்தை அரங்க நாயகியைப் பற்றியும், பனியன் கம்பெனி ஸ்டிரைக் பற்றியும் கேட்டேன். "ஸ்டிரைக் ஆரம்பிச்சு தொண்ணூறு நாளாச்சு. எதுவுமாகலே… மொதல்லே ஊர்வலம்… கூட்டம், தர்ணான்னு போச்சு… அப்புறம் பனியன் கம்பெனிகளுக்குத் தூ வெச்சுக் கலவரமுன்னு ஊர் கதிபட்டிருச்சு. இப்ப தொழிற்சங்க தலைவர்களெல்லாம் சாகறவரைக்கும் உண்ணாவிரதம் இருக்காங்க. வெங்கடேஷ் நெல கொள்ளாம தவிக்கிறான். மனசு கலவரமாகுது. நா உன்னெப் பாக்கப் போறேன்னு சொன்னப்போ ஏதோ சொல்லணும், சொல்லணுங்கற மாதிரி பரபரத்தான். ஆனா அடங்கிப் போயிட்டான்." ரொம்ப நேரம் மவுனமாய்ப் படுத்திருந்தார். பெஸ்டிவல் அட்வான்ஸ் அப்ளிகேஷன் போட்டது இந்த வாரம் கிடைத்துவிடும் என்றிருந்தது. "நாலு நாளைக்குள்ளாற ஊர் வர்றேனே. வர்றப்போ பணம் புரட்டிட்டு வர்றேன்."

இந்நிலையில் அவர் சிவகுமாருக்கென்று எடுத்து வந்த ஒவ்வொன்றும் நாற்பது, ஐம்பது என்றாகும். அதுவும் மூன்று ஜோடிகள். எப்படி எடுத்து வந்தார் என்று புரியவில்லை. சுகந்திகூட கேட்டாள். நினைக்க வருத்தமாயிருந்தது. அவரைச் சந்தேகப்படல் என்கிற விஷயத்தின் முதல் தொனியே எனக்கு அழுகையைக் கொண்டுவந்துவிடும் போலிருந்தது.

நாலு நாள் கழித்து அப்பாவைப் பார்க்க பணத்துடன் போயிருந்தேன். வீட்டுத் தெருக்கள் வெறிச்சோடியிருந்தன. ஆதியம்மா ஸ்டோர் வீசி சோகம் அடைந்து கிடந்தது.

(தொடரும்)

About The Author