ஷட்டரைத் தூக்கிவிட்டு, செருப்பை வெளியே கழட்டி விட்டுக் கடைக்குள்ளே பிரவேசித்தேன். ஊதுவத்திக் கொளுத்தி, கல்லாவுக்கு மேலாய் வரிசையாய் மாட்டியிருந்த தெய்வங்களின் படங்களின் முன்னால் கண்மூடிக் கரங்குவித்து நின்ற போது, ஊதுவத்தி மணத்தைத் தூக்கியடிக்கிற சாம்பராணிப் புகை மணம் குப்பென்று வியாபித்து மனசை சிலிர்க்கச் செய்தது.
கடவுளை வேண்டிவிட்டுக் கண் திறந்து பார்த்த போது, புகை பரப்புகிற சாம்பராணித் தட்டோடும், பச்சைத் தலைப்பாகையோடும், தெய்வீகப் புன்னகையோடும் அந்த மனிதர் நின்று கொண்டிருந்தார்.
"மொதலாளி நேத்து தான் யாவாரம் ஆரம்பிச்சீக போல. நேத்து வந்தேன். ஒரே கூட்டமா கெடந்துச்சி. சரி, தொந்தரவு பண்ண வேண்டாம் நாளக்கி வருவோம்ன்னுட்டுப் போய்ட்டேன். அல்லா அருளால யாவாரம் அட்டகாசமா நடக்கும் மொதலாளி. மொதலாளி சரின்னீகன்னா நெதம் வந்து சாம்பராணி வாசம் காட்டிட்டுப் போறேன்" என்று சிநேகப்பூர்வமாய் சிரித்த அந்த மனிதரை முதல் சந்திப்பிலேயே எனக்குப் பிடித்துப் போய்விட்டது.
"நல்ல சமாச்சாரத்துக்கு வேண்டாம்னா சொல்லப் போறேன்? டெய்லி வாங்க பாய்" என்று அவருடைய தட்டில் ஒரு அஞ்சு ரூபாய் நாணயத்தைப் போட்டேன். தட்டில் பரவலாய்க் கிடந்த நாணயங்களிலிருந்து மூன்று ரூபாய் நாணயங்களைப் பொறுக்கியெடுத்து என்னிடம் நீட்டினார்.
"சில்ற எதுக்கு பாய், அஞ்சு ரூவாயா இருக்கட்டும்" என்ற என்னுடைய தாராளமயமாக்கலைப் பெருந்தன்மையாய் மறுத்தார்.
"இல்ல மொதலாளி, நமக்கு உண்டானது ஒரு ரூவா, ரெண்டு ரூவாதான். அதுக்கு மேல வாங்கறது ஞாயமில்ல. நாளக்கி வர்றேன் மொதலாளி. அல்லா ஆசீர்வாதம்."
அல்லாவின் ஆசிர்வாதத்தை என் மேலே இறக்கி வைத்து விட்டுப் படியிறங்கி நடந்த மனிதரின் கால்களில் செருப்பில்லை. ஆனால், செருப்புக்கு பதிலாய்ப் பாதங்களில் சக்கரங்களைப் பொருத்தி விட்ட மாதிரி அப்படியொரு வேகம், சுறுசுறுப்பு!
செருப்பின்மையைப் பற்றிப் பிறிதொரு நாளில் கேட்ட போது அவர் சொல்லுவார்:
"மொதலாளி, நீங்க செருப்புக் காலோடயா ஒங்கக் கடைக்குள்ள காலெடுத்து வக்கீக? செருப்ப வெளிய கௌட்டிப் போட்டுட்டுத்தான போறீக? ஏன்னா, இது நீங்க தொழில் செய்ற எடம். ஒங்களுக்கு சோறு போடற எடம். அதுல செருப்புக்கால் படப்படாது. எனக்கு இந்த தெரு பூரா, இந்த ஏரியா பூரா தொழில் பண்ற எடம், சோறு போடற எடம். செருப்புக் காலக் கொண்டு இந்த பூமிய நா மிதிக்கலாமா?"
நறுமணத்தோடு நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. சாம்பராணிப் புகை போட வருகிறவர், அவருடைய அவசரத்திலும் என்னிடம் நல்லதாய் நாலு வார்த்தை பேசிவிட்டுத்தான் நகர்வார். "அல்லா ஆசீர்வாதம்" தினந்தினம் உண்டு.
தொழில் ரீதியான உறவையும் மிஞ்சிய ஓர் ஈடுபாடு ஏற்பட்டுப் போன பின்னால் ஒரு நாள் இந்தத் தொழிலைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தேன்.
"ஏம் பாய், இந்தத் தொழில்ல அப்படி என்ன வருமானம் கெடக்கிது ஒங்களுக்கு?"
"வருமானம் கம்மி தான் மொதலாளி, என்ன செய்றது, வேற தொழில் தெரியாதுங்களே! எங்க வாப்பா என்னப் படிக்க வக்யல. அவங்க வாப்பா பண்ணிட்டிருந்த தொழில அவர் பண்ணினார். அதே தொழில நா தொடர்ந்து பண்ணிட்டிருக்கேன். சில்லற கம்மின்னாலும், எங்கயும் மரியாதக் குறைவு கெடயாது மொதலாளி. வாசம் புடிக்கிற வேல பாத்தீகளா, அதனால இந்தத் தொழிலுக்கு ஒரு மரியாத இருக்கு. அதுக்கு மேல, ஒங்களப் போல நல்லவங்களோட அன்பும் ஆதரவும் கெடைக்குதே, அந்த சந்தோஷம் போதுமே மொதலாளி!"
தினமும் தனியாய் வருகிறவர், இருந்திருந்தாற் போல ஒருநாள் இன்னொரு மினி பச்சைத் தலைப்பாகையோடு வந்தார். பள்ளி மாணவன் தோற்றத்திலிருந்த ஒரு டீன் ஏஜர்.
"இது யார் பாய், ஒங்க சக்கரத்துக்கு ஸ்டெப்னியா?" என்று நான் சிரித்ததற்கு, "நம்ம மூத்த பையன் மொதலாளி, இன்னிக்கித்தான் மொதோ தடவையா எங்கூட இட்டுட்டு வந்திருக்கேன்" என்று பையனைத் தட்டிக் கொடுத்தார்.
இது எனக்கு ஒவ்வாததாயிருந்தது. பையனைத் தட்டிக் கொடுத்தது அல்ல, இவனை இந்த மனிதர் தொழில் செய்ய அழைத்துக் கொண்டு வந்தது. என்னுடைய அதிருப்திக்கு சொல் வடிவம் கொடுத்தேன்.
"என்ன பாய், ஒங்க வாப்பா தொழில நீங்க செய்யறது ஒங்க தலமுறையோட தல முழுக வழி பண்ணக் கூடாதா? புள்ளைங்கள ஸ்கூல்ல போட்டுப் படிக்க வக்யலாம்ல?"
"தப்பு மொதலாளி" என்று சிரித்தார் அவர். "மொதலாளி தப்பாப் புரிஞ்சிக்கிட்டீக. இவன் நம்ம தொழில் வாரிசு இல்லீங்க மொதலாளி. பதினொண்ணாங் கிளாஸ் படிக்கிறான். மூணு புள்ளைங்களுமே கார்ப்பரேசன் பள்ளிக் கூடத்துல படிக்கி. ஆண்டவம் புண்ணியத்ல புள்ளைங்க மூணுமே நல்லாப் படிக்கி. ப்ளஸ் ட்டூ முடிச்சிட்டு தொர இஞ்ஜினியர்ப் படிப்புப் படிக்கப் போறேங்கார். ரொம்பச் செலவாகும்னு சொல்றாக. என்னமோ கொஞ்சம் சேத்து வச்சிருக்கேன். எம் படிப்புக்கு நானுங் கொஞ்சம் சம்பாரிக்கேன் வாப்பா, லீவ் நாள்ல ஒங்க கூட நானும் வர்றேன்னான். அதான் கூட்டிக்கிட்டு வந்திருக்கேன். ரெண்டு நாள் ட்ரெய்னிங் குடுத்து வேற ஏரியாவுல வுட்றலாம்னு இருக்கேன்."
"எந்த ஏரியாவுல வேணாலும் விடுங்க பாய், ஆனா ஒங்கள மாதிரி செருப்பில்லாம வெறுங்காலோட மட்டும் நடக்க விட்ராதீங்க."
"அதெப்படி விடுவேன் மொதலாளி, அவன் என்ன இந்தத் தொழிலா செய்யப் போறான்? ஸ்கூலுக்குப் போட்டுட்டுப் போறதுக்கு பூட்ஸ் வேங்கிக் குடுத்துருக்கேன், மித்தநேரம் போட்டுக்கறதுக்கு ரப்பர் செருப்பு இருக்கு. கால்ல கல்லு முள்ளு குத்த நான் சம்மதிப்பேனாக்கும்? செல்லமா வளந்த புள்ள! வருங்கால இஞ்ஜினியர்ல்லா!"
"வெரி குட் வெரி குட்" என்று என் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.
"அவனுடைய படிப்புக்காகப் பார்ட் டைம் வேல பாத்து அவனே சம்பாதிக்கிறது ரொம்ப நல்ல விஷயம் பாய். தம்பி, இஞ்ஜினியராகப் போறியாக்கும்? அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நல்லா படிக்கிறியா? ப்ளஸ் ட்டூல எத்தன மார்க் வாங்குவ?"
"தொண்ணூறுக்கு மேல வாங்குவேன் அங்க்கிள்" என்று உற்சாகத்தோடு மறுமொழி தந்த பையனுக்காக நான் இன்னொரு வெரிகுட் போட்டுக் கொண்டிருந்தபோது, நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது, அந்த செல்லமாய் வளர்ந்த பிள்ளையின் தலையில்.
"அங்க்கிள் என்னடா அங்க்கிள்? மரியாத வேணாம்? மொதலாளின்னு சொல்லுவியா, அங்க்கிளாம்ல!"
"அட சும்மா விடுங்க பாய்" என்று அவருடைய கையை நான் எட்டிப் பிடித்தேன்.
"இது ஒரு தப்பா? இதுக்குப் போய் ஒரு குட்டு வச்சிட்டீங்களே! தம்பி, நீ அங்க்கிள்னே கூப்புடுப்பா. நல்லா படிக்கணும் என்ன? நீ சொன்ன மாதிரி தொண்ணூறுக்கு மேல வாங்கணும்."
"வாங்குவேன் அங்க்கிள்."
"வெரிகுட், வாப்பாகூட அப்பப்ப வந்து போய்க்கிட்டு இரு."
"வறேன் அங்க்கிள்."
ஆனால் அதன் பின்னால் வாப்பா தனியாய்த்தான் வந்தார். லீவ் நாட்களில் பையன் அவருடன் வரவில்லை. கேட்டதற்கு, வேறே ஏரியாவில் அவன் பார்ட் டைம் செய்து கொண்டிருப்பதாய்ச் சொன்னார்.
அவனுடைய படிப்பைப் பற்றிய பேச்சு அடிக்கடி எழும். பையன் நன்றாய்ப் படிப்பதாய் அவனுடைய ஆசிரியர்கள் பாராட்டிச் சொன்னதைச் சொல்லிப் பூரித்துப் போவார். பையன் ப்ளஸ் ட்டூவுக்குப் போய்விட்டான். படிப்பு ஒரு பக்கம் இருக்க, பார்ட் டைம் சாம்பராணிப் புகைத் தொழிலில் அவன் தன்னந்தனியாய் நாலாயிரம் ரூபாய் போல சம்பாதித்து வைத்திருக்கிறானாம்!
ப்ளஸ் ட்டூ பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் அவனைத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்கிற என்னுடைய அபிப்ராயத்தை ஏற்றுக் கொண்டு அவனுடைய பார்ட் டைமை நிறுத்தி விட்டதாய்ச் சொன்னார்.
ஆனால், ஃபுல் டைம் பார்த்துக் கொண்டிருந்த இந்த மனிதரைக் கூட ரொம்ப நாளாய்க் காணவில்லை.
ஸ்டடி லீவில் பையனுக்கு அருகிலேயே இருந்து பொறுப்போடு அவனையும் அவனுடைய படிப்பையும் கவனித்துக் கொள்கிறாராயிருக்கும். ரொம்ப நல்ல விஷயந்தான்.
காலைகளில், கடை திறந்ததும் நான் ஊதுவத்திக் கொளுத்தி வைத்து இறை வணக்கம் செய்கிற போது அந்தப் பையனுக்காவும் ப்ரார்த்தித்துக் கொண்டேன். ப்ளஸ் ட்டூ பரீட்சைகள் தொடங்கின அன்று விசேஷ ப்ரார்த்தனைகள். ஊதுவத்திக் கொளுத்தி, கல்லாவுக்கு மேலாய் வரிசையாய் மாட்டியிருந்த தெய்வங்களின் படங்களின் முன்னால் கண்மூடிக் கரங்கூப்பி நின்ற போது, ஊதுவத்தி மணத்தைக் தூக்கியடிக்கிற சாம்பராணிப் புகை மணம் குப்பென்று வியாபித்து மனசைச் சிலிர்க்கச் செய்தது.
ஆஹா! நறுமண நண்பர் திரும்பவும் வந்து விட்டார் என்று கண் விழித்துப் பார்த்தபோது அங்கே கண்ணில் பட்ட உருவத்தைப் பார்த்து அதிர்ந்தேன்.
"தம்பி, வாப்பா வரல? நீ எக்ஸாம் எழுதப் போகல? இன்னிக்கித் தானே எக்ஸாம் ஆரம்பம்?"
"வாப்பா வரல. வர மாட்டாங்க" என்றான் பையன் விழிகளில் கண்ணீர் முட்ட.
என்னமோ விபரீதம் என்பது மட்டும் புரிய, "என்ன, என்ன ஆச்சு தம்பி?" என்று பதறினேன்.
சோகங்கப்பிய முகத்தோடு பையன் விவரம் சொன்னான். "போன மாசம் ஒரு நாள் சாயங்காலம், வாப்பா வேலய முடிச்சிட்டுப் போயிட்டிருந்தப்ப, குடிச்சிப்புட்டு ஒரு ஒயின் ஷாப்புக்கு முன்னால நின்னுட்டிருந்த நாலஞ்சு பேர், அந்த ஒயின் ஷாப்புக்குள்ளயும் பக்கத்துலயிருந்த பாருக்குள்ளயும் சாம்பராணிப் பொக காட்டச் சொன்னாங்களாம். வாப்பா மாட்டேன்னுட்டார். அவனுங்க தகராறு பண்ணியிருக்காங்க. ஹராமான எடத்துல நா வேல செய்ய முடியாதுன்னு வாப்பா மாட்டவே மாட்டேன்னுட்டார். குடிகாரப் பசங்க எல்லாருஞ் சேந்து வாப்பாவ அடி அடின்னு அடிச்சிப் போட்டுட்டுப் போய்ட்டாங்க. ஒடம்பெல்லாம் ரத்தக் காயம். அதோட உள்க் காயம் வேற. ஆஸ்பத்திரியில வச்சு வைத்தியம் பாத்தோம். வாப்பா சேத்து வச்சிருந்த பணம் தான் கை குடுத்துச்சி. ஆனா ஒண்ணும் ப்ரயோஜனமில்ல. போன வாரம் வாப்பா மவுத்தாயிட்டாங்க."
அதிர்ச்சியில் நான் சொல்லிழந்து நின்றேன்.
பையனே தொடர்ந்து பேசினான். "இன்னிக்கிப் பரிச்ச ஆரம்பிக்குது. ஆனா நா பரிச்ச எழுதப் போகல. வாப்பா தொழில இன்னிலயிருந்து நா பாக்கப் பேறேன். நெறய்ய சம்பாரிக்கப் போறேன். நா இஞ்ஜினியரிங் படிக்காட்டிப் பரவாயில்ல. தம்பி, தங்கச்சி ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சி ரெண்டு பேரையும் இன்ஷா அல்லா, இஞ்ஜினியராக்கிருவேன்."
அவனுடைய குரலில், சோகத்தை மீறிய ஒரு உறுதி வெளிப்பட்டது. "தம்பி, தங்கச்சி ரெண்டு பேரையும் நா இஞ்ஜினியராக்கிருவேன்’ என்று திரும்பவும் அவன் சொன்னபோது, கண்ணீர்த் துளிர்ப்பை ஊடுருவிக் கண்களில் மின்னலடித்தது.
இதயத்தின் கனம் வார்த்தைகளை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்க, இன்னும் வாய் பேச முடியாமலிருந்த நான், ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்து அவனுடைய தட்டில் போட்டேன். தட்டில் பரவலாய்க் கிடந்த நாணயங்களிலிருந்து எட்டு ரூபாய் நாணயங்களைப் பொறுக்கியெடுத்து என்னிடம் நீட்டினான்.
"நமக்கு உண்டானது ஒரு ரூவா, ரெண்டு டூவாதான். அதுக்கு மேல வாங்கறது ஞாயமில்ல. நாளக்கி வர்றேன் மொதலாளி. அல்லா ஆசீர்வாதம்."
ஆண்டவனின் ஆசீர்வாதத்தை எனக்கு அருளிவிட்டுப் படியிறங்கி அவன் சுறுசுறுப்பாய் நடந்தான். செருப்பில்லாத கால்களோடு.
(தினமலர் வாரமலர், 22.06.2008)
(செருப்பில்லாத கால்)
மிகவும் நன்ராக உல்லது. பரட்டுக்கல்.
றொம்ப உருக்கமாக இருந்தது. பழைய தலைப்பை விட புது தலைப்பு பொருத்தம். – றா. Jஅகன்னாதன்.