கால்களில் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கும் இந்த அவசர யுகத்தில் நீங்கள் செலவழிக்கும் சில மணி நேரங்கள், ஒருவருக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால் அதைச் செய்ய தயக்கம் ஏன்? சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதுதான். சிலருக்கு நிறைய நேரமும், உதவும் குணமு இருக்கும். சிலருக்கு நிறைய பணமும், உதவும் குணமும் இருக்கும். மேற்கூறிய இருவரும் எப்படி மற்றவர்களை சந்தோஷப்படுத்தி அவர்களும் சந்தோஷப்படலாம் என காண்போம்.
குடும்பத்தில் குதூகலம்
கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய இந்தக் கால கட்டத்தில் குடும்பத்திலுள்ள குழந்தைகள், பெரியவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை.
1. காலையில் குழந்தை பள்ளிக்கு கிளம்புகையில் ஒரு சிறு அணைப்பு, முத்தம் கொடுக்க ஒரு நிமிடம் போதுமே. வீட்டிலுள்ள பெரியவர்களிடம் வெறுமனே போய் வருகிறேன் என்பதைவிட அவர்களுக்கு விருப்பமான விஷயங்களில் ஒரு சிறு உரையாடல், மனைவியின் சமையல், உங்கள் கணவரின் ஆடையின் அழகு எனப் பேச எத்தனை இருக்கிறது!
2. காலையில் முடியாதவர்கள், இரவு உணவையாவது சேர்ந்து சாப்பிடலாம். அந்த நேரத்தில் டிவிக்கு சற்றே ஒய்வு கொடுத்து ஒருவருக்கு ஒருவர் எண்ணங்களை பரிமாறிக் கொள்ளலாம். நம்மை உருவாக்கிய பெற்றோருக்கு என்ன தேவை, அவர்களின் வாழ்வில் சந்தித்த சுவையான நிகழ்வுகள் என அறியலாம். நாம் உருவாக்கிய குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், அவர்களின் பள்ளி நிகழ்வுகள் என கேட்கலாம். ஒரு அரை மணி நேர உரையாடல், உங்கள் குடும்பத்தில் நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
3. கணவனுக்கும் மனைவிக்கும் என ஒரு பத்து நிமிடம் தனியே ஒதுக்குங்கள் தினமும். உங்கள் இருவருக்கும் மட்டுமேயான நேரமாக அது இருக்கட்டும். அந்த நாளில் நிகழ்ந்த ஏதோ ஒன்று உங்களை உற்சாகப்படுத்தி இருக்கலாம். உங்கள் பெற்றோர் அல்லது பிள்ளைகளின் செயல்கள், தேவைகள், உங்கள் திருமணமான புதிதில் நிகழ்ந்த ஏதோ ஒரு நகைச்சுவையான நிகழ்வு, அட.. எதுவும் இல்லாவிட்டால் இருவருக்கும் பிடித்த பாடல் என கேட்டுப் பாருங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பீர்கள்.
போவோமா மகிழ்ச்சி ஊர்கோலம்..
1. வீட்டில் மட்டும்தான் என்றில்லை. பள்ளியில் உடன் படிக்கும் மாணவனுக்குப் புரியாத பாடங்களை படிக்க உதவலாம். நீங்கள் படித்த புத்தகங்களை ஏழை மாணவருக்குக் கொடுக்கலாம். உங்கள் நண்பரின் வீட்டில் பண்டிகை கொண்டாட முடியாத ழ்நிலையில் உங்கள் வீட்டிற்கு அழைக்கலாம்.
2. அலுவலகத்தில் பார்ப்பவருக்கு மலர்ந்த முகத்துடன் வணக்கம் சொல்லலாம். ஏதேனும் ஒரு விடுமுறை நாளில் அருகிலுள்ள குடிசைப் பகுதிகளுக்கு சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அரசாங்க திட்டங்கள், நடைமுறைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றை மற்றவருக்குக் கூறலாம். உங்களிடம் தேவைக்கு அதிகமாக அல்லது பயன்படுத்தப்படாத ஆடைகள், உபகரணங்கள் ஆகியவற்றை வருடம் ஒருமுறை அலுவலகம் சார்பில் ஏழைகளுக்குக் கொடுக்கலாமே!
3. உங்களின் கார் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், ஹோட்டலில் நுழைவாயில் கதவு திறப்பவர், வாட்ச்மேன் என அனைவர் கூறும் வணக்கங்களும் பதில் வணக்கத்தை சிறு புன்னகையுடன் கூறி அவர்களை நலம் விசாரித்தால் அவருக்கும் உங்களுக்கும் ஒரு சேர மகிழ்ச்சி. நீங்களும் மகிழ்ச்சியாய் சிரிக்கையில் உடல் மன ஆரோக்கியம் மேம்படும்.
மதுரையில் கிருஷ்ணன் என்பவர் சாலையில் வாழ்பவருக்கு தினமும் உவளிக்கிறார். ஏதோ தயிர்சாதம், தக்காளி சாதமென எண்ண வேண்டாம். ஒரு ஜந்து நட்சத்திர உணவு விடுதியில் என்ன சாப்பிடுவோமோ அதை அளிக்கிறார். அவரைப் போல் கிருஷ்வதாரமாக இல்லாவிட்டாலும், நீங்கள் தினமும் சந்திக்கும் சாலையோர சந்ததியருக்கு ஒரு வேளை உணவு வாங்கிக் கொடுக்கலாம். அவர்களின் வாழ்த்தொலி நிச்சயம் உங்களை உயத்தில் வைக்கும்.”