அன்னக்கொடியும் கொடிவீரனும். இயைபுடன் கூடிய தலைப்பு. கிராமத்துக் கதைக்குப் பெயர் போன பாரதிராஜா, இன்றைய நாகரிக இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷுடன் இணைந்திருக்கிறார். மேலும், பாடல் வெளியீட்டை நடத்திய விதமும் எதிர்பார்ப்பைச் சற்றே எகிற வைத்திருக்கிறது.
மொத்தம் ஆறு பாடல்கள். முதிர்ச்சி வாய்ந்த இயக்கமும் இளமை ததும்பும் இசையும் கைகோத்து வந்திருக்கும் பாடல்களை இனி பார்ப்போம்.
ஆவாரங் காட்டுக்குள்ள
பறவையின் கீச்சிடும் குரலுடன் தொடங்குகிறது படத்தின் முதல் பாடல். கவிப்பேரரசின் வைர வரிகளைப் பாடியிருக்கிறார்கள் சத்யப்பிரகாஷ், சின்மயி. அறியாத கிராமத்துச் சொற்கள் பல கேட்கக் கிடைக்கின்றன பாடல் நெடுகிலும். பாடலில் முக்கியப் பங்கு வகிக்கிறது குழலிசை.
"காலுவழி குத்திய முள்ள, கைகொண்டு நீக்கிய புள்ள!
நெஞ்சுக்குழி குத்திய முள்ள, எடுடி மெல்ல!" – என இது சீண்டல் வகைக் கிராமத்து டூயட்.
அன்னமே
கீபோர்டு, செல்லோ வயலின் இசையுடன் ஒரு தேடல் பாடல். புது மாதிரியாக ஒலிக்கிறது ஜி.வி-யின் குரல். இவருடன் இணைந்து அன்னமாக ‘எசப்பாட்டுப்’ பாடியிருக்கிறார் பூஜா. மென்சோக வரிசையில் நிச்சயம் இடம்பிடிக்கக்கூடிய பாடல்.
"உண்ணர பழம் இல்ல, உட்காரக் கொப்பும் இல்ல
இனி எங்கதான் போவாளோ எங்கக் கிளி!" – இருவரும் காட்சியின் சூழல் உணர்ந்து பாடியிருக்கிறார்கள் போலும்.
நரிக உறங்க
இது இராத்திரி நேரக் கிராமத்துச் சூழலில் ஒரு காதல் பாடல். சந்தோஷ், பூஜா, ஹரிணி சுதாகர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கிராமத்து நக்கலுடன் இயல்பான வார்த்தைகளைக் கோத்துள்ளார் கவிப்பேரரசு. இசைச் சேர்ப்பிலும் உழைப்பு தெரிகிறது. இரவு நேரச் சத்தங்கள் பாடலில் இடம்பெற்றுள்ளன. குறும்பு தெறிக்கும் குரலுடன் சந்தோஷ் வார்த்தைகளை கையாண்டிருக்கும் விதம் அருமை.
"தலைகீழாப் புடிக்கையிலும் தீ மேல நின்னு எரியுதடி!
கண்ணு மூடிக் கிடக்கையிலும் நெஞ்சு உன்ன மட்டும் நோக்குதடி!" – கவித்துவம்!
பொத்திவச்ச
தழுவும் இசையுடன் ஜி.வி-யின் உற்சாகக் குரல் நம்மை இழுக்கிறது. அரிதாகவே திரையிசைக்கு வரும் அருமைக் கவிஞர் அறிவுமதியின் வரிகளில் மனதை ஏதோ செய்யத்தான் செய்கிறது இந்தக் காதல் கீதம். இடையில் புல்லாங்குழலுடன் ஒலிக்கும் சிட்டுக்குருவிகளின் கீச்சல்கள் ஆஹா!
"சிக்குக்கே சீப்பானேன் திணறுரனே நானுந்தேன்
வக்கத்து போனேனே வதங்குது மனசு" – உடனடி வெற்றியை இதற்கு எதிர்பார்க்கலாம்.
போறாளே
மழையின் ஒலியுடன் அறுக்கும் வயலினின் இசையுடன் பாடல் தொடங்கும்போதே சோகம்தான் பாடுபொருள் எனத் தெரிந்து விடுகிறது. எஸ்.பி.பி.சரண் உயிர்ப்புடன் பாட, கங்கை அமரன் நீண்ட காலம் கழித்துப் பாரதிராஜாவுக்குப் பாடல் எழுதியிருக்கிறார்.
நினைவுகளைத் தூசு தட்டிப் பார்க்க வைக்கும் பாடல். சரணுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
"என் வேதனைய எடுத்துச் சொன்னா வெயிலும் அழுகுமடி!
அந்தச் சாமி இதக் கேட்டுச்சுன்னா உனக்கும் புரியுமடி!" – சோக ராகம்.
கொல வாள எடுங்கடா!
வழக்கமான கிராமத்துத் திருவிழாப் பாடல் போல்தான் ஒலிக்கிறது. கொடிவீரன் சாமியின் வரலாறு சொல்லும் பாடல். சில இடங்களில் சமத்துவமும் சொல்கிறது. புதிதாக இல்லை என்றாலும் கேட்கலாம் ஒருமுறை.
ஜி.வி-யின் முந்தைய படத்தின் இசை விமர்சனத்தில் அவரது வழக்கமான மேஜிக் இல்லை என்று சொல்லி இருந்தேன். அதில் விட்டதை இதில் பிடித்து விட்டார்.
அன்னக்கொடியும் கொடிவீரனும் – நாட்டுப்புறத் தமிழ்.
“