அனாடமிக் தெரபி (74)

உழைப்பு, நெருப்பு:

நமது உடலில் இரத்த ஓட்டத்தைப் பம்ப் செய்வதற்கு இதயம் எனும் உறுப்பு உள்ளது. இது நீங்கள் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும், ஞாபகம் வைத்திருந்தாலும், மறந்தாலும், அது பாட்டுக்குத் தன் வேலையை மறக்காமல் செய்து கொண்டே இருக்கும். அதைப் போலவே நிணநீர் ஓட்டம் எனவும் ஒன்று உள்ளது. இதை ஆங்கிலத்தில் லிம்பாட்டிக் சிஸ்டம் என்று கூறுவார்கள். இதைப் பற்றி யாரும் பெரிதாகப் பேசுவதும் கிடையாது, கவலைப்படுவதும் கிடையாது. நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவை எடுத்துச் செல்வது இரத்த ஓட்டம் என்றால், அனைத்து உறுப்புகளுக்கும் நோயைக் குணப்படுத்துவதற்கு மருந்து எடுத்துச் செல்வது இந்த நிணநீர் ஓட்டம். இரத்தம் போலவே இந்த நிணநீரும் எப்பொழுதும் உடலில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், நிணநீர் ஓட்டத்தைப் பம்ப் செய்வதற்கு நமது உடலில் எந்த இதயமும் கிடையாது. யாருடைய உடலில் உழைப்பு இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே இந்த நிணநீர் ஓட்டம் இருக்கும். உடல் உழைப்பு இல்லையென்றால் நிணநீர் ஓட்டம் நின்றுவிடும்.

ஆட்டோமெட்டிக் வாட்ச் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு பேட்டரி கிடையாது. சூரிய ஒளியில் ஓடாது. கையில் கட்டினால் ஓடும். கழற்றி டேபிளில் வைத்துவிட்டால் ஓடாது. இப்பொழுது அந்த வகை வாட்ச் அதிகம் இல்லை. ஆனால், முதலில் நாம் பயன்படுத்தி வந்தோம். அந்த வாட்ச் ஆடிக்கொண்டிருந்தால், ஏதாவது ஓர் அதிர்வு ஏற்பட்டுக் கொண்டிருந்தால் ஓடிக்கொண்டே இருக்கும். அசைவு இல்லாமல் ஓர் இடத்தில் வைத்து விட்டால் இயக்க சக்தி இல்லாமல் நின்றுவிடும். இந்த வாட்சைப் பற்றிப் புரிந்து கொண்டால் நிணநீர் ஓட்டத்தைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். யாருடைய உடலில் அசைவுகள் இருந்துகொண்டே இருக்கின்றனவோ – அதாவது உடலுக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – இந்த நிணநீர் ஓட்டம் சரியாக இருக்கும். உடலுக்கு வேலை கொடுக்காமல் சோம்பேறியாக இருக்கும் நபர்களுக்கு இந்த ஓட்டம் சரியாக இருக்காது. எனவேதான் பலருக்கு நோய்கள் வருகின்றன. மேலும், வந்த நோய் குணமாவதும் கிடையாது.

எனவேதான் வாக்கிங் போனால், உடற்பயிற்சிகள் செய்தால், யோகாசனங்கள் செய்தால் நமக்கு நோய்கள் குணமாவது தெரிகிறது. எனவே, ஒவ்வொரு மனிதரும் தினமும் தன் உடலிலுள்ள அனைத்து சதைகளுக்கும், இணைப்புகளுக்கும் ஏதாவது ஓர் அசைவை, அதிர்வை, வேலையைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிணநீர் ஒழுங்காக ஓடி உடலிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். எனவேதான் உடல் உழைப்பு இருப்பவர்களுக்கு எந்த நோயும் வருவதில்லை. உடலில் உழைப்பு இல்லாதவர்களுக்கு மட்டுமே அதிகமாக நோய்கள் வருகின்றன.

என்னிடம் பல பேர் "எனக்குப் பல வருடமாக நோய் இருக்கிறது. ஆனால், பல வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை" என்று வருகிறார்கள். அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி "நீங்கள் யோகா செய்கிறீர்களா?" பலரும், "அதெல்லாம் செய்வது கிடையாது. அதற்கு நேரம் இல்லை எனக் கூறுகிறார்கள். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் கிடையாது. ஆனால், நான் தினமும் ஏதாவது ஒரு பயிற்சியைச் செய்துகொண்டே இருக்கிறேன். ஆரோக்கியமாக இருக்கும் நானே தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் பயிற்சி செய்யும்பொழுது நோய் வந்த பிறகு நீங்கள் ஏன் யோகா பயிற்சிகளைச் செய்யக்கூடாது? ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் யோகா கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே, தயவு செய்து யோகா கற்றுக்கொள்ளுங்கள்! தினமும் உடலுக்காக ஓர் அரைமணி நேரமாவது ஒதுக்கி, சில பயிற்சிகள் செய்யும்பொழுது, உடலிலுள்ள நிணநீர் ஒழுங்காக ஓடும்பொழுது நம் நோயை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.யோகா என்றால் அனைவருக்கும் ஒரு பயம். ஏனென்றால், "கை, கால்களை மடக்க வேண்டும்; குனிய வேண்டும்; நிமிர வேண்டும். நம்மால் முடியுமா" என்ற சந்தேகம்.

யோகா என்றால் கைகளையும், கால்களையும் மடக்குவது கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! யோகா என்பது நம் உடலையும், மனதையும், மூச்சையும், புத்தியையும், உயிரையும் ஒன்று சேர்க்கும் ஒரு கலை. யோகாவில் ஓர் அங்கம்தான் இந்தக் கை, கால்களை மடக்கி ஆசனம் செய்வது. ஆனால், ஆசனங்கள் மட்டுமே யோகா கிடையாது! யோகா என்பது மொத்தம் எட்டு வித அங்கங்களைக் கொண்டது. அவை:

(i)இயமம்
(ii)நியமம்
(iii)ஆசனம்
(iv)பிராணாயாமம்
(v)பிரக்தியாகாரம்
(vi)தாரணை
(vii)தியானம்
(viii)சமாதி

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author