ஆகாயம், உறக்கம், ஓய்வு
ஒரு மனிதன் ஒரு நாளுக்குக் கண்டிப்பாக ஆறு அல்லது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று எல்லா மருத்துவர்களும் கூறுகிறார்கள். ஆனால், அப்படி நாம் கணக்குப் பார்த்துத் தூங்க வேண்டிய அவசியம் இல்லை!
பொதுவாக, நாம் உடலுக்கு மூன்று விதமான வேலைகளைக் கொடுக்கிறோம். ஒன்று, உடல்ரீதியான வேலை; இரண்டு, மனரீதியான வேலை, மூன்று, புத்திரீதியான வேலை. இதில் எந்தெந்த வேலைக்கும் தூக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று பார்ப்போம்.
ஒரு சிலர் உடலுக்கு மட்டும் அதிக வேலையைக் கொடுப்பார்கள். மனதிற்கும் புத்திக்கும் அதிக வேலை கொடுக்க மாட்டார்கள். இவர்கள் முதல்வகை. எடுத்துக்காட்டாக, கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு புத்தி இல்லை என்று அர்த்தம் கிடையாது; புத்திக்கு அதிக வேலை இல்லை. மனதிற்கும் அதிகமாக வேலை இருக்காது. கூலி வேலை செய்பவர்கள், அலுவலகத்தில் பியூன் வேலை செய்பவர்கள் போன்றவர்களை நன்றாகக் கவனியுங்கள். இவர்கள் வா என்றால் வருவார்கள்; போ என்றால் போவார்கள். முதலாளி கொடுக்கும் வேலையை மட்டும் செய்வார்கள். அதிகமாக அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். இப்படி உடல் சார்ந்த வேலையைச் செய்பவர்கள் முதல் வகை.
இரண்டாவது வகை, புத்தி சார்ந்த வேலை செய்பவர்கள். இவர்கள் புத்திக்கு மட்டும் அதிகம் வேலை கொடுப்பார்கள். உடலுக்கும், மனதிற்கும் குறைவாகத்தான் வேலை கொடுப்பார்கள். எடுத்துக்காட்டாக, முதலாளிகள், ஆராய்ச்சியாளர்கள். இவர்களுக்கு புத்திக்கு மட்டுமே அதிக வேலை இருக்கும். நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிறுவனத்தை எப்படி நல்லபடியாக இயங்க வைப்பது, பணம் எப்படி சம்பாதிப்பது, வியாபாரம் எப்படிச் செய்வது போன்ற யுத்திகளை எப்பொழுது பார்த்தாலும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். எனவே, உடலுக்கு அதிகமான வேலை இருக்காது. மேலும், வியாபாரம் செய்யும்பொழுது பலர் மனதிற்கு வேலை கொடுத்து, மனசாட்சியின்படி நடந்து கொள்வது இல்லை. மனசாட்சியைப் பயன்படுத்தினால் வியாபாரம் ஒழுங்காக நடக்காது. எனவே, முதலாளிகள் புத்திக்கு மட்டுமே அதிகம் வேலை கொடுக்கிறார்கள். அதே போல், ஆராய்ச்சியாளர்கள் எப்பொழுது பார்த்தாலும், புத்திக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் உடலுக்கோ, மனதிற்கோ வேலை கொடுப்பது கிடையாது. இவர்கள் இரண்டாவது வகை.
சிலர் மனதிற்கு மட்டும் அதிக வேலை கொடுப்பார்கள். புத்தியைக் குறைவாகப் பயன்படுத்துவார்கள். மேலும், உடல் உழைப்பும் இவர்களுக்குக் குறைவாக இருக்கும்.
யார் யாரெல்லாம் எப்பொழுது பார்த்தாலும் பிரச்சினைகளைப் பற்றி யோசித்துக் கொண்டு கவலை, பதற்றம் (tension), கோபம், பயம் போன்ற உணர்ச்சிகளின் வசப்பட்டு வாழ்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் மனதிற்கு மட்டுமே அதிக வேலை இருக்கும். புத்திக்கும், உடலுக்கும் அவ்வளவாக வேலை இருக்காது. இவர்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள்.
மேலே கூறப்பட்டுள்ள மூன்று வகைகளையும் பாருங்கள். இதில், உடலுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே தூக்கம் தேவைப்படும், தூக்கம் வரும், தூங்க முடியும். மனதிற்கும், புத்திக்கும் வேலை கொடுத்தால் தூக்கம் தேவையில்லை; தூக்கம் வராது; தூங்க முடியாது.
உடலுக்குக் கொடுக்கும் வேலையைச் சரி செய்வதற்குத்தான் தூக்கம் வேண்டும். மனதிற்கும், புத்திக்கும் கொடுக்கும் வேலையைச் சரி செய்வதற்குத் தூக்கம் தேவையில்லை. ஆனால், ஓய்வு வேண்டும்! ஓய்வு என்பது வேறு; தூக்கம் என்பது வேறு! இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்!
ஓய்வு என்பது மனதை அமைதிப்படுத்தும், புத்தியை அமைதிப்படுத்தும். தூக்கம் என்பது உடலை அமைதிப்படுத்தும்.
புத்திக்கு வேலை கொடுக்கும் முதலாளியும், உடலுக்கு வேலை கொடுக்கும் தொழிலாளியும், இரவு 10 மணிக்குப் படுக்கைக்குச் செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். தொழிலாளிக்குப் படுத்தவுடன் உறக்கம் வந்துவிடும். முதலாளியோ இரவு 10 மணி முதல் 1 மணி வரை புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருப்பார். ஆனால், தூக்கம் வராது. முதலாளி என்ன நினைப்பார்? ‘என்னிடம் வேலை செய்யும் ஒரு சதாராணத் தொழிலாளி எப்படி நிம்மதியாகத் தூங்குகிறான்! வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் என்னால் தூங்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவார்.
எதனால் இப்படி நடக்கிறது என்றால், உடலுக்கு வேலை கொடுத்த தொழிலாளிக்கு ஓய்வு தேவையில்லை; ஆனால், உறக்கம் தேவை என்பதால் அவர் உடனே உறங்கிவிடுகிறார். ஆனால், புத்திக்கும் மனதிற்கும் வேலை கொடுத்த முதலாளிக்கு அவை இரண்டுக்கும் ஓய்வு தேவை என்பதால் இரவு 1 மணி வரை அவர் புத்தியும் மனதும் ஓய்வு எடுக்கின்றன. அதனால்தான் அவர் புரண்டு புரண்டு படுக்கிறார்.
நாம் காலையில் எழுந்தவுடன் நமது புத்தியையும் மனதையும் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். அதற்குச் சரியான ஓய்வு கொடுப்பதில்லை. இரவு நாம் படுத்த பிறகுதான் இவை இரண்டும் ஓய்வு எடுத்து, சாந்தமாகி, அமைதி கொள்கின்றன. புத்தியும், மனதும் தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்ளும் வரை ஒரு மனிதனுக்குத் தூக்கம் வராது!
ஒரு சிறு எடுத்துக்காட்டு! பெரிய துணிக் கடைகளில் காலை 9 மணிக்குக் கதவைத் திறந்து வியாபாரம் ஆரம்பிப்பார்கள். கடையைத் திறக்கும்பொழுது துணிகள் அனைத்தும் ஒழுங்காக சரியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். துணி வாங்க வருபவர்கள் அனைத்தையும் கலைத்து, தங்களுக்குத் தேவையான துணிகளை எடுப்பார்கள். வியாபாரம் நடக்கும் நேரங்களில் துணிகள் கலைந்து கொண்டே இருக்கும். ஆனால், அவற்றை அடுக்கி வைப்பதற்கு நேரம் இருக்காது. இரவு 9 மணிக்குக் கடையின் கதவை அடைத்த பிறகு, அங்கே வேலை செய்பவர்கள் உடனே வீட்டிற்குச் செல்ல முடியாது. குறைந்தது, ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் இருந்து, கலைந்த துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, பின்னர்தான் அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியும். அப்பொழுதுதான் அடுத்த நாள் காலையில் கடை சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதைப் புரிந்து கொண்டால் தூக்கத்தைப் பற்றியும் நாம் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம்.
காலையில் எழுந்தவுடன், நமது மனதையும், புத்தியையும் கலைத்துப்போட ஆரம்பிக்கிறோம். ஆனால், அடுக்கி வைப்பதே கிடையாது. இரவு 10 மணிக்கு நாம் படுத்தவுடன் மனதும், புத்தியும் தங்களைத் தாங்களே அடுக்கி வைக்க ஆரம்பிக்கின்றன. இப்படி அவை தங்களை அமைதிப்படுத்தி, ஒழுங்குபடுத்திக் கொள்வதற்குச் சில மணிநேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நாம் தூக்கம் வரவில்லையே என்று பயந்துபோய்ப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில்தான் நாம் புரண்டு புரண்டு படுப்போம்; ஆனால், தூக்கம் வராது.
இதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஒரு காரியம் செய்யுங்கள்!
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…