அனாடமிக் தெரபி (64)

காற்று

உணவே மருந்து, மருந்தே உணவு என்று கூறுவார்கள். ஆனால், உணவு மட்டும் மருந்து கிடையாது. ஒரு நாளில் சுமார் மூன்று முறை உணவு சாப்பிடுகிறோம். ஆனால், 24 மணிநேரமும் சுவாசிக்கிறோம். ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் வீதம் ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் காற்றை நாம் சுவாசிக்கிறோம். ஆனால், சோற்றைப் பற்றிக் கவலைப்படும் நாம் காற்றைப் பற்றி என்றுமே கவலைப்படுவது கிடையாது. எனவே, இதுவரை உணவு, நீர் ஆகியவற்றை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்வது என்பதை ஆராய்ந்த நாம், இப்பொழுது காற்றை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்து இரத்தத்தில் கலக்குவது என்பதைப் பார்க்கப் போகிறோம்.

நம்மில் பலர் இரவு நேரங்களில், தூங்கும்பொழுது படுக்கை அறையில் கொசு கடிக்கும் என்பதற்காக அறையின் ஜன்னல், கதவு ஆகியவற்றை அடைத்துவிட்டுப் படுக்கிறோம். இப்படி, அறையில் இருக்கும் காற்று வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் வசதி இல்லாமல் அடைத்து வைத்துப் படுப்பவர்களுக்குக் கண்டிப்பாகப் பல நோய்கள் வரும்.

ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் 8 லிட்டர் காற்றை மூக்கின் வழியாக சுவாசித்து நுரையீரலுக்குக் கொடுக்கிறான். நுரையீரல் அந்தக் காற்றிலுள்ள ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன், பிராண சக்தி உட்படப் பல பொருட்களை இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும் நல்ல பொருட்கள் எல்லா உறுப்புகளிலும் உள்ள செல்கள் அனைத்துக்கும் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு செல்லும் நல்ல சக்தியை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்திய பின், மிச்சம் இருப்பது கெட்ட பொருளாக மாறி, அந்தக் கெட்ட பொருள் மீண்டும் இரத்தத்துக்கு வருகிறது. இரத்தத்துக்கு வந்த கெட்ட பொருட்கள் நுரையீரலுக்கு வந்து, மூக்கு வழியாகக் காற்றாக வெளியேறுகின்றன. இப்படி, ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும்பொழுதும் நல்ல காற்றை சுவாசித்துக் கெட்ட காற்றை வெளியே விடுகிறோம்.

ஓர் அறையில் நான்கு மனிதர்கள் படுத்திருந்தால், இந்த நான்கு பேரும் ஒரு நிமிடத்தில் 8 லிட்டர் வீதமாக அரை மணி நேரத்தில் அந்த அறையிலுள்ள காற்று மொத்தத்தையும் கெட்ட காற்றாக மாற்றிவிடுகிறார்கள்.

சுமாராக, நாம் இரவு 8 மணிநேரம் தூங்குகிறோம். முதல் அரை மணி நேரம் மட்டுமே நமது உடலுக்கு நல்ல காற்று செல்லும். மீதமுள்ள 7½ மணி நேரமும் நம்மால் கெடுக்கப்பட்ட கெட்ட காற்று மட்டுமே நம் உடலுக்குள் செல்லும். இதனால் நம் உடலுக்குத் தேவையான பிராணசக்தியும் காற்றிலுள்ள இன்ன பிற பொருட்களும் கிடைக்காமல் உடலிலுள்ள உறுப்புகள் அனைத்துக்கும் நோய் ஏற்படுகிறது.

"அதற்குத்தான் காற்றாடி (fan) பயன்படுத்துகிறோமே" என்று பலரும் கூறுகிறார்கள். அது அறையில் இருக்கும் காற்றைச் சுற்றி விடுமே தவிர, கெட்ட காற்றை நல்ல காற்றாக மாற்றாது! எனவே, படுக்கை அறையில் மட்டுமில்லை, அலுவலகம், வீடு, கல்யாண மண்டபம் என எந்த ஓர் அறையாக இருந்தாலும் புதுக்காற்று உள்ளே வந்து பழைய கெட்ட காற்று வெளியே செல்வதற்கு வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஜன்னல் கதவை அடைத்து வைத்துப் படுத்தாலே நோய் வரும் என்றால், ஜன்னலையும் அடைத்து அறையினுள்ளே கொசுவர்த்தி போன்ற பொருட்களையும் பயன்படுத்தினால் கண்டிப்பாக மிகப் பெரிய நோயே வரும்! கொசு சிறியதாக இருப்பதால் அன்றே அந்த கொசுவர்த்தியிலுள்ள விஷத்திற்கு இறந்து விடுகிறது. மனிதன் என்கிற நாம் ஒரு வகையில் பெரிய அளவுக் கொசுதான். நமது உயிர் போவதற்குச் சில வருடங்கள் மட்டுமே ஆகும். கொசுவர்த்தி என்பது மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு விஷம்! அதைப் பயன்படுத்தவே கூடாது! தினமும் நாம் கொசுவர்த்தி வாங்கி வந்து நம் செலவிலேயே, நமக்கு நாமே விஷம் சாப்பிடுகிறோம்! இதைப் பற்றி எந்த மருத்துவரும் பேசுவது கிடையாது. நெஞ்சுச் சளி, ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் (tuberculosis), மூச்சிரைப்பு (wheezing), மூக்கு அடைத்தல், தும்மல், இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் கொசுவர்த்திகள் பயன்படுத்துவதும் காற்று இல்லாத அறையில் வசிப்பதுமே!
பல மருத்துவர்கள் குழந்தைக்குச் சாம்பிராணி புகை போடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். சாம்பிராணிப் புகை உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும். ஆனால், அதைப் பயன்படுத்தக்கூடாது எனச் சொல்லும் மருத்துவர்கள் ஏன் கொசுவர்த்தியைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கூற மாட்டேன்கிறார்கள்? ஆஸ்துமா, மூச்சிரைப்பு (wheezing), நெஞ்சுச் சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள் ஆண்டுக்கணக்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறீர்களே? உங்கள் வீட்டில் காற்று வசதி ஒழுங்காக இருக்கிறதா என்று எந்த மருத்துவராவது உங்களிடம் கேட்டார்களா? அதைச் சரி செய்யாத வரை, யாருக்கும் நுரையீரல், மூக்கு சம்பந்தப்பட்ட எந்த நோயும் குணமாகாது. காற்றைச் சரி செய்தால் மட்டுமே தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும்.

ஜன்னலைத் திறந்து வைத்தால் நல்ல காற்று உள்ளே வந்து கெட்ட காற்று வெளியே செல்லும். ஆனால், கொசு கடிக்கிறது; திருடன் வந்து விடுவான்; குடும்பம் நடத்தும் வீட்டில் மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் என்ன செய்வது?

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author