இயற்கையான குடிநீர் சுத்திகரிப்பு முறைகள்
மண் பானை நீரை சுத்திகரிக்கும் மிகச் சிறந்த கருவி
மண் பானையில் குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை வைத்திருந்தால் அந்தத் தண்ணீரில் உள்ள கெட்ட பொருட்கள் அனைத்தையும் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. உலகத்திலேயே மிகச் சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் வாட்டர் பில்டர் வாங்கி வைத்திருக்கிறீர்களே, அவ்வளவு ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானைகள் கிடைக்கும்! தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூடத் தீராது. ஆனால், அப்படிப்பட்ட அற்புதமான இயற்கை சாதனத்தை யாரும் பயன்படுத்துவதில்லை.
தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடியுங்கள்! கெட்ட பொருட்களும் அழியும்; மண் சக்தியும் கிடைக்கும்; பிராண சக்தியும் அதிகரிக்கும்.
வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழைப்பழத்தின் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு வெளியே எடுத்துவிட்டால், அது நீரில் உள்ள கிருமிகள் அனைத்தையும், கெட்ட பொருள்களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ஆனால், வாழைப்பழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே, அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்த சுலபமான முறையையும் நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தலாம்.
செம்புக் காசு அல்லது செம்புப் பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம்
செப்புக் குடத்தில் நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாகத் தண்ணீருக்கு நிறைய சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்ட பொருட்கள் அழிக்கப்படுகின்றன. எனவே, தண்ணீர் வைக்க இனி செம்பினால் ஆன பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செப்புக் காசுகளைப் போட்டு வைத்தால், அவை தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் செம்புக் கமண்டலம் ஒன்றில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சென்று ஏதாவது வம்பு பேசினால், அந்தத் தண்ணீரை எடுத்து ‘நீ நாயாகப் போவாய்… நரியாகப் போவாய்’ என்பது போல அவர்கள் ஏதாவது சாபமிட்டவுடன் அது பலிப்பதை நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது! எனவே, செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும்.
இப்படி மண்பானை, வாழைப்பழத் தோல், செம்பு என இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப்படுத்துவதற்கு உத்திகள் இருக்கும்பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்குக் கருவிகளை வாங்க வேண்டும்?
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“