17. அம்மாவும் குழந்தைகளும் தனித் தனியே சாப்பிட வேண்டும்!
அம்மாக்கள் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும்பொழுது அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜீரணமாவது கிடையாது. காரணம், அம்மாக்கள் எப்பொழுதும் தன் உணவில், கவனம் செலுத்துவதை விட்டுவிட்டுக் குழந்தையை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார்கள். குழந்தையை அதட்டுவார்கள்; “சாப்பிடும்போது பேசாதே! கறிவேப்பிலையைச் சாப்பிடு! ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு! சட்னி தொட்டுக் கொள்! கீழே கொட்டாதே!” இப்படியெல்லாம் அந்தத் குழந்தையையே கவனித்துக் கொண்டு அல்லது குழந்தைக்கு ஊட்டிக்கொண்டு தானும் சாப்பிட்டால் குழந்தை நன்றாக இருக்கும்; ஆனால், தாய்க்கு உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது!
எனவே, தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கும் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாகச் சாப்பிடுகிறார்களா என்று வேண்டிய மட்டும் கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்! மற்றவர்களுக்குப் பரிமாறிக்கொண்டே சாப்பிடும்பொழுது கவனம் தன் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை.
கைக்குழந்தை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அந்தக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, கொஞ்சிக் கொண்டே சாப்பிடுவார்கள். அப்படிச் செய்யக்கூடாது!
சில குழந்தைகள் சாப்பிடும்போது பக்கத்தில் வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும். அப்பொழுது அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டோ விரட்டிக் கொண்டோ மிரட்டிக் கொண்டோ அதட்டிக் கொண்டோ நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உணவு ஜீரணம் சரியாக நடப்பதில்லை. எனவே, கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள் அந்தக் குழந்தையை மாமியாரிடமோ அல்லது யாரிடமாவது கொடுத்து விட்டு, சாப்பிடும் அந்த ஐந்து நிமிடங்கள் தயவு செய்து உங்கள் சாப்பாட்டை மட்டுமே கவனித்துச் சாப்பிடுங்கள்!
18. சாப்பிடும் உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும்.
நாம் சாப்பிடும் சாப்பாட்டைக் கவனித்துப் பாருங்கள்! அதில் உப்பு, புளி, காரம் இருக்கும். ஆனால் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவற்றைப் பொதுவாக நாம் சேர்த்துக் கொள்வதேயில்லை.
ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம், ஒவ்வொரு சுவைக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வோர் உணர்ச்சிக்கும் சம்பந்தம் உள்ளது என்பதை. அந்த அடிப்படையில் சொல்லப்போனால் உப்பு, புளி, காரம் மட்டுமே உள்ள உணவைச் சாப்பிடும்பொழுது இந்த மூன்று சுவைக்கு வேலை செய்யும் ஆறு உறுப்புகள் மட்டுமே ஒழுங்காகச் செயல்படும். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு சாப்பிடாததால் இரைப்பை, மண்ணீரல், இதயம், இதயத்தின் மேலுறை, உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, சிறுகுடல் ஆகிய நான்கு உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யாது.
நாம் சாப்பிடுகிற உணவு முதலில் வயிற்றுக்குச் செல்கிறது. அங்கே ஒரு மணி நேரம் இருக்கிறது. நாம் இனிப்புச் சாப்பிடாததால் வயிற்றுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் வயிறு ஒழுங்காக இந்த உணவை ஜீரணம் செய்யாமல் விட்டு விடுகிறது. அடுத்த ஜீரண உறுப்பு சிறுகுடல். இந்தச் சிறுகுடலுக்குக் கசப்பு, துவர்ப்பு சரியாகக் கிடைக்காததால் அதுவும் சக்தி இழந்து ஜீரணம் சரியாகச் செய்வதில்லை. இப்படி ஜீரணத்திற்குத் தேவையான இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளையும் நாம் சாப்பிடாமல் இருப்பதால்தான் நமக்கு ஜீரண சக்தி குறைவாக உள்ளது.
சில காலங்களுக்கு முன்பு நாம் இனிப்பைத் தாராளமாகச் சாப்பிட்டு வந்தோம். ஆனால், சில மருத்துவர்களின் தவறான கருத்துப்படி, இனிப்புச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று நம்பியதால் நாம் யாரும் இப்பொழுது இனிப்பைச் சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில், இனிப்பிற்கும் சர்க்கரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சர்க்கரை நோயைப் பற்றிக் கூறும்பொழுது தெளிவாகப் பார்த்து விட்டோம். எனவே, இனிப்பைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்!
மேலும் கசப்பு, துவர்ப்பு யாருக்கும் பிடிக்காததால் அவற்றை யாரும் சாப்பிடுவதில்லை. ஜீரணத்திற்கு நம் உடலுக்கு முக்கிய தேவை இந்த இரண்டு சுவைகள்தான். எனவே, இனிமேல் நம் உணவில் ஒவ்வொரு நேரம் சாப்பிடும்போதும் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உப்பு, புளி, காரம் ஆகிய ஆறு சுவைகளையும் சேர்த்துக் கொண்டால் ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உணவை மருந்தாக மாற்ற முடியும்.
ஒரு சில நாடுகளில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார் கள்; உப்பு, புளி, காரத்தைச் சேர்த்துக் கொள்வதில்லை. ஒரு சில நாடுகளில் உப்பு, புளி, காரம் மட்டுமே சாப்பிடுகிறார்கள்; இனிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகளை விட்டு விடுகிறார்கள். இதுதான் நோயின் அடிப்படைக் காரணம்! எனவே, ஒவ்வொரு வேளையும் அறுசுவை உணவைச் சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்!
ஏற்கெனவே நாம் சாப்பிடுகிற சாப்பாட்டில் உப்பு, புளி, காரம் இருக்கிறது. இனிப்புக்கு ஏதாவது ஓர் இனிப்புப் பலகாரம் அல்லது இனிப்பான பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், வெள்ளை சர்க்கரை என்கிற விஷத்தை மட்டும் பயன்படுத்த வேண்டாம்! வெள்ளை சர்க்கரையையோ அதனால் செய்யப்பட்ட பலகாரத்தையோ சாப்பிடக்கூடாது! அதற்குப் பதிலாக வெல்லம், பனங்கருப்பட்டி, தேன், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
கசப்பும் துவர்ப்பும் இதயத்தை பலமாக்கி நமக்குத் துணிவைக் கொடுக்கின்றன. மேலும் இரத்த அழுத்தத்தையும் ஒழுங்குபடுத்துகின்றன. உடலில் உள்ள அனைத்து நோய்களையும் இவை குணப்படுத்துகின்றன. எனவே, இனிமேல் நமது உணவில் கசப்பு, துவர்ப்புச் சுவைகளைத் தவறாமல் சேர்த்துக் கொள்வோம்.
கசப்பைச் சேர்த்துக் கொள்வதற்கு எளிய வழி வாரம் இரண்டு முறை பாகற்காய் பொரியல் சாப்பிடுவது. பாகற்காயை வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேக வைத்துச் சாப்பிட வேண்டும்.
"கீரை சாப்பிடுங்கள், கீரை சாப்பிடுங்கள்" என்று ஏன் எல்லா வைத்தியர்களும் கூறுகிறார்கள் என்றால், எல்லா விதக் கீரைகளிலும் கசப்பும் துவர்ப்பும் நிறைய உள்ளன. நீங்கள் கசப்பிற்கும் துவர்ப்பிற்கும் தனித்தனியாகப் பொருட்களைத் தேடி அலைய வேண்டாம். கசப்பு உள்ள எல்லாப் பொருட்களிலும் துவர்ப்பு இருக்கும்; துவர்ப்பு உள்ள எல்லாப் பொருட்களிலும் கசப்பு இருக்கும். எனவே, கீரை வகைகளை முடிந்த வரை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். சுண்டைக்காய், சுக்கிட்டிக் கீரை, பாகற்காய் வற்றல், நார்த்தங்காய் ஊறுகாய், எலுமிச்சம் துண்டு, எலுமிச்சம் பழத் தோல், வேப்ப இலை, வேப்பம்பூ – இப்படி கசப்புச் சுவையுள்ள பொருட்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றை நாம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றால் வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கொள்ளலாம். அது நம் நாக்குக்கு மிகுந்த கசப்பு, துவர்ப்பைக் கொடுக்கும். ஆனால், வெந்தயத்தை அளவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது!
பழைய, ராஜா – ராணிப் படங்களில் "விருந்து எப்படி இருந்தது" என்று கேட்பது போலவும், "அறுசுவை விருந்து சாப்பிட்டேன்! விருந்து பிரமாதம்" என்று கூறுவது போலவும் காட்சிகள் வரும். அறுசுவை உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நம் முன்னோர்கள் அவற்றைச் சாப்பிட்டுப் பழங்காலத்தில் நோய்களை விரட்டியடித்தார்கள். ஆனால், இன்று நாம் சுவைகளைப் பார்த்து பயப்பட்டு நோய்களை வரவேற்கிறோம்!
எனவே தயவு செய்து, ஒவ்வொரு வேளை உணவிலும் அறுசுவை இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து பார்த்து எந்தச் சுவை இல்லையோ அந்தச் சுவையைச் சேர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்!
சில நேரங்களில் நம்மால் அறுசுவை உணவைச் சாப்பிட முடியாது. அப்படிப்பட்ட நேரங்களில், அறுசுவை உணவு கிடைக்கவில்லையே என்கிற வருத்தத்துடனோ, அறுசுவை சாப்பிடாவிட்டால் இந்த உணவு ஜீரணமாகாது என்கிற எண்ணத்துடனோ சாப்பிட்டால் அந்த உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. ஒரு நாளுக்கு மூன்று வேளை வீதம் ஒரு மாதத்திற்குத் தொண்ணூறு முறை நாம் உணவு உட்கொள்கிறோம். இதில் ஆரம்பத்தில், முடிந்த வரை மாதத்தில் பத்து முறையாவது அறுசுவை உணவைச் சாப்பிட முயற்சி செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் இது இயலாது. எனவே முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். முடியாவிட்டால், முடியவில்லையே எனக் கவலைப்படாமல் கிடைத்ததைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஒவ்வொரு வேளையும் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். இதற்குக் காரணம், நெல்லிக்கனியில் ஆறு சுவையும் ஒன்றாக அமைந்துள்ளது. எனவே முடிந்தால், ஒவ்வொரு நேரமும் சாப்பிடும்பொழுது ஒரு நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இப்படி தொடர்ந்து நெல்லிக்காயைச் சேர்த்துக் கொள்வதால் அது திகட்ட ஆரம்பித்து விடும். எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளலாம்.
இளநீரிலும் ஆறு சுவைகள் உள்ளன. இளநீரைக் ஸ்ட்ரா வைத்து உறியாமல், வாயில் வைத்துச் சுவையை இரசித்துக் குடித்தால் அந்த அறுசுவையும் நாக்கு வழியாக உடலுக்குள் புகுந்து மருந்தாக வேலை செய்யும்.
இப்படி, ஏதாவது ஒரு வகையில் ஒவ்வொரு வேளையும் அறுசுவை சாப்பிடுவது மூலமாக நமது உணவை நன்றாக ஜீரணம் செய்ய முடியும். சிலர் அறுசுவை உணவைச் சாப்பிட வேண்டும் என்பதை ‘அறுசுவைப் பொடி’ சாப்பிட வேண்டும் எனத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், உண்மையில் அது பலன் அளிக்காது. இயற்கையாக உணவில் அறுசுவை சேரும்பொழுது மட்டுமே நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“
நெல்லிக்காய் ல காரம் இல்லை sir but நீங்கள் சொன்னதை நான் தினமும் கன்டிபாக முயற்சி செய்து வருவருவேன்