13. எவ்வளவு சாப்பிட வேண்டும்?
பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பெரிய சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும்.
காலை, மதியம் மற்றும் இரவு நேரங்களில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். குறிப்பாக டயட்டீசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சப்பாத்தியும் ஒரு கப்புத் தயிரும் சாப்பிடுங்கள், இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், மதியம் 750 மில்லி கிராம் சாப்பாடும் 350 மில்லி லிட்டர் குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மில்லி கிராம், மில்லி லிட்டர் பார்த்தா சாப்பிட முடியும். சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொண்டு சாப்பிடுவது சாத்தியமா?
ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையின் அளவு, உடல் எடை, மனதில் தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம், ஊர், ஆகியவற்றைப் பொருத்து உணவின் அளவு மாறும். ஒரு நாள் கட்டிட வேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள். அதே நபர் அடுத்த நாள் தனது நண்பரின் காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள்எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க
முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது.
மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் வீட்டுச் சப்பாத்தி எந்த அளவு இருக்குமென்று கேட்டார்களா? ஒரு சில வீட்டுச் சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போதும். ஒரு சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது.இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதி கொடுக்கிறார்களோ, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது.
சரி.. எவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படிக் கண்டுபிடிப்பது. அதற்கு சுலபமாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும், சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை இரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம்.
வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக நீங்கள் இருந்தால் கவனத்தை இட்லியின் மேலும், இட்லியிலுள்ள சுவையின் மீது கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம். கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும்பொழுது நமக்கு அளவு தெரியும். கவனத்தை செல்போனிலோ, டீவியிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.
எனவே நமது சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனதிற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாக பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்காதீர்கள். உங்கள் மனதிற்குப் பிடித்த அளவு ஆசை தீர சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.
உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப்பு சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள். மீண்டும் கேட்கும். மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும், அந்த நாயை வா, வந்து சாப்பிடு என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும், நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று. மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் இரசித்து, ருசித்து சாப்பிடுகிறது. மனிதன் பசிக்காமல் ருசிக்காமல் சாப்பிடுகிறான்.
எனவே, நமது சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். இரசித்து, ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். யார், யார் வீட்டில் 80 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவையாக விதவிதமாக மனசுக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…
“