கடந்த வாரங்களில் நாம் பார்த்தது போல் தும்மல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றை நோய்கள் என்று தவறாகக் கருதி, வெளியேறும் கழிவுகளை சிகிச்சை என்று நாம் நிறுத்தி வைப்பதால் நம் உடலில் கழிவுகள் அதிகமாகின்றன. அப்படிக் கழிவுகள் அதிகமாகும்பொழுது, நாம் அவற்றை எந்த வழியிலும் வெளியேற அனுமதிக்காதபொழுது நம் உடல் ஒரு முடிவு எடுக்கிறது. உடல் முழுவதையும் வெப்பப்படுத்தி, போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதுபோல உடல் கழிவுகளை வெப்பப்படுத்திக் காற்றாக மாற்றி மூக்கின் வழியாக வெளியே அனுப்பும் ஓர் அருமையான முடிவு. அதுதான் காய்ச்சல்!
காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது. இதை நாம் மட்டும் சொல்லவில்லை, அலோபதி மருத்துவமும் இதைத்தான் கூறுகிறது. உடல் செய்யும் மருத்துவத்துக்குப் பெயர்தான் காய்ச்சல். ஒவ்வொரு மனிதனுடைய உடல் வெப்பநிலையும் 24 மணிநேரமும் 37 டிகிரி சென்டிகிரேட் (98.6 டிகிரி பாரன்ஹீட்) இருக்கும். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நாட்டில் வசித்தாலும், உங்கள் உடல் வெப்பநிலை இதுதான். இப்படி ஒவ்வொரு விலங்கிற்கும் பறவைக்கும் ஒவ்வொரு உடல் வெப்பநிலை இருக்கும். இமயமலை போன்ற குளிர் பிரதேசத்துக்குச் சென்றாலும் சரி, வெயில் கொளுத்தும் நாட்டிற்குச் சென்றாலும் சரி, நம் உடல் வெப்பநிலை 37 டிகிரிதான் இருக்கும். காரணம், நம் உடலில் வெப்பக்கட்டுப்பாட்டுக்கென ஓர் உறுப்பு இருக்கிறது. இது நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் 24 மணிநேரமும் 37 டிகிரியில் வைத்திருக்கிறது.
இப்படி அறிவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் நம் உடல் திடீரென்று 101, 102 என்று வெப்பநிலையை அதிகரிக்கிறது என்றால் அதற்குக் காரணம், அதற்கு அறிவுகெட்டுப் போய்விடவில்லை. நம் உடலுக்கு அது தேவைப்படுவதால்தான். எனவே, காய்ச்சல் வரும்பொழுது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்கு நன்மைதான் ஏற்படுமே தவிர, நாம் அதைப் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை.
நீங்கள் காய்ச்சல் வரும்பொழுது சோதித்துப் பாருங்கள்! மூக்கின் வழியாக அதிகப்படியான காற்று வெளியேறிக்கொண்டிருக்கும். மூக்குக்கு அருகில் ஒரு வெள்ளைத் துணியை வைத்துப் பார்த்தால் அதில் மஞ்சள் நிறப் படிவங்கள் தோன்றும். ஏனென்றால், சாதாரணமாக மூச்சுக் காற்றில் கழிவுகள் வெளியே வராது. ஆனால், காய்ச்சல் இருக்கும்பொழுது உடல் கழிவுகள் மூக்கின் வழியாக வெளியேறுவதால் இந்த மஞ்சள் கறை ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது. அது நம் உடல் பார்க்கும் வைத்தியம்.
காய்ச்சல் வரும்பொழுது நாம் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது எனப் பார்க்கலாம்.
முதலில், உடல் சோர்வாக இருக்கிறது. உடல் நம்மிடம் கூறுகிறது "வேலை செய்யாதீர்கள்! எனக்குச் சோர்வாக இருக்கிறது. ஓய்வு எடுங்கள்!" என்று. நாம் அதைப் புரிந்து கொண்டு படுக்கையில் படுக்க வேண்டும். ஃபோம் பெட், சோபா போன்றவற்றில் படுக்கக்கூடாது. கோரைப்பாய் அல்லது ஈச்சம்பாயில் மட்டுமே படுக்கவேண்டும்! தேவைப்பட்டால் பருத்தி அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுத்துக்கொள்ளலாம். ஆனால், நைலான், ரப்பர் மெத்தைகளில் படுக்கக்கூடாது! காற்றோட்டமான இடத்தில் படுக்கவேண்டும். தொலைக்காட்சி, கைப்பேசி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கம்பளி அல்லது சாதாரணப் போர்வையால் உடலைப் போர்த்தி வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் வரும்பொழுது நமக்கு நாக்கு கசக்கிறது. இப்பொழுது உங்கள் நாக்கு கசக்கிறதா? காய்ச்சல் வரும்பொழுது மட்டும் ஏன் கசக்கிறது என்றால், நமது உடல் நம்மிடம் சொல்கிறது, தயவுசெய்து எதையும் சாப்பிட வேண்டாம் என்று. ஆனால், நாம் என்ன செய்வோம்? சாதாரணமாக, பல வேலைகள் செய்யும்பொழுது இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவோம். ஆனால், காய்ச்சல் வரும்பொழுது நம்மைச் சுற்றிப் பால், ரொட்டி, பன், பிஸ்கட், பழ வகைகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு நிறையச் சாப்பிடுவோம். எப்பொழுது சாப்பிட வேண்டுமோ அப்பொழுது குறைவாகச் சாப்பிடுகிறோம்; எப்போழுது சாப்பிடவே கூடாதோ அப்பொழுது நிறையச் சாப்பிடுகிறோம்.
நாக்கு கசக்கும்பொழுது தயவுசெய்து எதையும் சாப்பிடாதிருங்கள்! அப்பொழுது சாப்பிட்டால் உடல் தன் காய்ச்சலையும் நோயையும் அதிகப்படுத்திக் கொள்கிறதே தவிர, குறைப்பது கிடையாது. சாப்பிட்டவுடன் சிலருக்குக் காய்ச்சல் குறைந்தது போல் தோன்றும். அது அப்படி இல்லை. அந்தச் சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக உடல் காய்ச்சலைத் தள்ளிப்போடுகிறது. இந்த ஜீரண வேலை முடிந்தவுடன் மீண்டும் காய்ச்சல் வரும். எப்பொழுது ஒரு மனிதனுக்குக் காய்ச்சல் வந்து நாக்கு கசக்கிறதோ அப்பொழுது உணவு தேவையில்லை. அந்த நேரத்தில் வாயின் வழியாக உணவு சென்றால் அது நோயைப் பெரிதாக்கும். எனவே, அந்த நேரங்களில் சாப்பிடாமல், படுத்து ஓய்வெடுக்க வேண்டும். தாகம் எடுத்தால் இலேசாகச் சூடு செய்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைக்கக்கூடாது! ஏன் கூடாது என்பது இந்தத் தொடரில் தண்ணீர் சம்பந்தப்பட்ட தலைப்பில் விரிவாகக் கூறப்படும். அடுப்பில் வைத்த தண்ணீரைக் குடிக்கும் சூடு வந்தவுடன் உடனே எடுத்துக் குடித்துவிடவேண்டும். பசி எடுத்தால் அரிசிக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி, பழ வகைகள், சமைக்காமல் சாப்பிடக்கூடிய காய்கறிகள் மட்டும் சாப்பிடலாம். இவை தவிர பால், ரொட்டி, பன், பிஸ்கட் போன்ற பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தும். ஆனால், காய்ச்சல் வந்தால் மருத்துவமனைகளில் பால், ரொட்டி ஆகியவற்றைத்தான் பரிந்துரைக்கிறார்கள். இந்த உணவுகள் வெப்பநிலை குறைவான, மைனஸ் 10 டிகிரி, 20 டிகிரி உள்ள நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இந்த உணவுப் பழக்கத்தை மித வெப்ப நாடுகளிலும் உயர் வெப்ப நாடுகளிலும் கடைப்பிடிப்பது உடலுக்குக் கெடுதலைத்தான் ஏற்படுத்தும்.
பலர், காய்ச்சல் வரும்பொழுது பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்தால் உடனே சரியாகிவிடும் என்பர். சிலர் துணியைப் பச்சைத் தண்ணீரில் பிழிந்து கக்கத்தில் வைத்துக்கொண்டால் காய்ச்சல் குறையும் என்றும் கூறுவர். இவையெல்லாம் தவறான, செய்யக்கூடாத வைத்தியங்கள்! நம் உடல், வெப்பநிலையை அதிகரித்து நம் நோயைக் குணப்படுத்திக் கொண்டிருக்கும்பொழுது நாம் அதைக் குறைப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது! சிலர் காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரிடம் ஓடுவர். மருத்துவர் ஓர் ஊசி போடுவார், அல்லது ஏதாவது ஒரு மருந்தோ மாத்திரையோ கொடுப்பார். சிறிது நேரத்துக்குள் உங்களுக்கு வியர்வை குப்பென்று வரும். நன்றாக வியர்த்தவுடன் உங்கள் காய்ச்சல் காணாமல் போய்விடும். நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் எடுத்துக்கொண்ட மருந்து மூலமாக நோய் குணமாகிவிட்டது என்று. அது தவறு! காய்ச்சலுக்காக மருத்துவர்கள் கொடுக்கும் ஊசியிலோ, மருந்து மாத்திரைகளிலோ நோய்க் கிருமிகளை அழிக்கும் எந்த ஒரு தன்மையும் இருப்பதில்லை. மாறாக, நம் உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளை வேலைசெய்ய வைப்பதற்கான மருந்துகள் மட்டுமே இருக்கின்றன. இந்த மருந்துகள் நம் உடலில் உள்ள அனைத்து வியர்வைச் சுரப்பிகளையும் திடீரெனச் சுரக்க வைத்துவிடும். இதனால் நம் உடல் பயப்படுகிறது. நாம் சிரமப்பட்டு அதிகப்படுத்திய வெப்பத்தை யாரோ நமது அனுமதியில்லாமல் வியர்வைச் சுரப்பியைத் தூண்டிவிட்டுக் குறைத்து விட்டார்களே என்று நம்மை திட்டிக்கொண்டு "நான் இப்பொழுது போகிறேன், மீண்டும் வரும்பொழுது இதை விடப் பெரிய காய்ச்சலாக உண்டு செய்வேன்" என்று கூறிவிட்டுத்தான் செல்கிறது. எனவே, காய்ச்சல் வரும்பொழுது அதைக் குறைப்பது நாமே நம் உடலுக்குச் செய்யும் துரோகம்.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருந்தால் மட்டும்தான் காய்ச்சல் வரும். எனவே, ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்றால் அவருக்கு வந்துள்ள நோயின் அளவை விட அவரது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக உள்ளது என்று மகிழ்ச்சியடைய வேண்டும். சிலர், பல ஆண்டுகளாகக் காய்ச்சல் வரவே இல்லை என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இவர்கள் ஒன்று ஆரோக்கியமாக இருப்பார்கள்; அல்லது நோய் எதிர்ப்புத் தன்மை சுத்தமாக இல்லாதவர்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்குத் திடீரென வரும் காய்ச்சல் மிகக் கடுமையானதாக இருக்கும். எனவே, ஒவ்வொரு முறை காய்ச்சல் வரும்பொழுதும் எந்தவொரு மருந்தும் எடுக்காமல் இருந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால், காய்ச்சல் அதிகமாகும்போது வலிப்பு வரும் ஆபத்து ஒன்று உண்டு. சில நேரங்களில் உயிரே போய்விடும். இதைத் தடுக்க ஒரு சுலபமான வழி உண்டு. காய்ச்சல் வரும்பொழுது மூளைப் பகுதியில் வெப்பம் அதிகரித்தால் மட்டும்தான் வலிப்பு வரும். உடலில் வேறு எந்த உறுப்பில் வெப்பம் அதிகரித்தாலும் இந்த ஆபத்து வராது. எனவே, காய்ச்சல் நேரங்களில் ஒரு வெள்ளைப் பருத்தித் துணியை எடுத்து, அதை நெற்றி அளவிற்கு மடித்துப் பச்சைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, அதை நெற்றியின் மேல் பற்றாகப் போடவேண்டும். வெப்பநிலை அதிகமாகும்பொழுது அந்தத் துணி காய்ந்து விடும். உடனே மீண்டும் நனைத்து நெற்றியின் மேல் வைத்து விடவேண்டும். இப்படிச் செய்யும்பொழுது மூளைப்பகுதிக்கு மட்டும் வெப்பநிலை அதிகரிக்காமல் உடல் பகுதிக்கு மட்டும் வெப்பநிலை அதிகரித்து வலிப்பு ஏற்படாமல் நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள முடியும். நெற்றியில் பற்றுப் போட்ட யாருக்கும் வலிப்பு வந்ததே கிடையாது.
எனவே தயவு செய்து, எப்பொழுது காய்ச்சல் வந்தாலும் அலுவலகத்திற்கு, பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு, நாம் மேலே கூறியுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு நாள் வீட்டில் ஓய்வெடுத்து உடம்பைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்! நம் உடம்பை நாம்தான் குணப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், நம்மில் பலர், "மூன்று நாள் வீட்டில் படுக்க வேண்டுமா? எனக்கு நிறைய வேலை இருக்கிறது" என்று கூறுகிறார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள்! உங்களுக்குக் காய்ச்சல் வந்து பல மருத்துவப் பரிசோதனைகள் செய்து, பின் உங்களுக்கு டைபாய்டு வந்து விட்டது, மருத்துவமனையில் படுத்துச் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் பதினைந்து நாள் ஓய்வு எடுக்கிறீர்கள் அல்லவா? ஒரு நோய்க்கு அப்படிப் பெயர் வைத்து, பூ வைத்து, பொட்டு வைத்து அலங்காரம் செய்தால் மட்டும்தான் பத்து நாள் படுப்பீர்களா? நோயின் பெயர் தெரியாமல் உங்களால் அமைதியாக இருக்க முடியாதா? இது மனம் சம்பந்தப்பட்டது. மருத்துவமனையில் படுத்திருக்கும்பொழுது நாம் மருத்துவமனையில் இருக்கிறோம். மருத்துவர் இருக்கிறார். அவர் நமக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் உங்கள் நோயைக் குணப்படுத்துகின்றதே தவிர, உண்மையில் நாம்தான் நம் நோயைக் குணப்படுத்துகின்றோமே தவிர எந்த மருந்து மாத்திரையும் நம்மைக் குணப்படுத்த முடியாது.
இந்தத் தொடரில் தடுப்பூசி என்ற பகுதியில் இது சம்பந்தமாக உங்களுக்குப் பல விவரங்கள் தெரியவரும். ஆக மொத்தத்தில், ஒவ்வொரு காய்ச்சலின்போதும் மருந்து மாத்திரையைப் பயன்படுத்தி நாம் காய்ச்சலைக் குணப்படுத்தினால், கழிவுகளை வெளியேறவிடாமல் உள்ளேயே வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை வரும் காய்ச்சலும் பெரிதாகிக் கொண்டேயிருக்கும்.
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்