தோல் நோய்களைக் குணமாக்குவது எப்படி?
தும்மல், சளி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஆகியவை உடற்கழிவுகளை வெளியேற்ற உடலே செய்து கொள்ளும் சிகிச்சைகள் என உணராமல் நோய் எனத் தவறாகப் புரிந்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வதால், கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதிப்பதால், கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா? இந்தக் கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுவது. இப்படிக் கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அவை தோலில் படிந்து அரிப்பு, புண் முதலான தோல் நோய்கள் உண்டாகின்றன.
எப்பொழுது ஒரு மனிதருக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்துவிட்டார் எனப் பொருள். சொரியாசிஸ், எக்சிமா போன்ற எந்த ஒரு தோல் நோயாக இருந்தாலும், உடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் அதைக் குணப்படுத்த முடியும். இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை உண்டால், களிம்புகளைப் (Ointment) பயன்படுத்தினால் நோய் கண்டிப்பாகப் பெரிதாகும்.
தோலில் ஓரிடத்தில் வெளியேறும் கழிவைத் தோல் நோயாகக் கருதி அந்த இடத்தில் ஒரு மருந்தைத் தடவினால், அந்த இடத்தில் உள்ள புண் ஆறிவிடும். ஆனால், நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? இந்த இடத்தில் வெளியேறிய கழிவை வேறு இடத்திற்குச் செல்லச் சொல்லி விட்டீர்கள். எனவே, உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும். நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து தோல்நோயைக் குணப்படுத்தி விட்டதாகத் தவறாகப் புரிந்துகொண்டு அதையே இந்த இடத்திலும் தடவுவோம். இப்படித் தோலில் ஒவ்வொரு இடத்தில் கழிவு வெளியேறும்பொழுதும் மருந்தைப் பயன்படுத்திக்கொண்டே இருந்தால் கூடிய விரைவில் இந்நோய் பரவிப் பெரிய நோயாக மாறுகிறது. கடைசியாக, தோல் நோய் முற்றிலும் குணமாக -அதாவது தோலின் எந்தப் பகுதி வழியாகவும் கழிவு வெளியேறாமல் தடுக்க- கழிவுகளை உள்ளே அனுப்ப யாராவது வைத்தியம் பார்த்தால் கழிவுகள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிய நோயாக மாறுகின்றன. தோல் நோய் உள்ள அனைவருக்கும் மலச்சிக்கல் இருக்கும். எனவே, தோல் நோய்களை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணபடுத்த முடியும்.
உயிர்க்கொல்லி நோய்கள்
இப்படி உடலில் தேக்கி வைக்கப்படும் கழிவுகள் எவ்வகையிலும் வெளியே செல்ல முடியாமல் நாம் மருத்துவம், சிகிச்சை செய்துகொண்டே இருப்பதால் அந்தக் கழிவுகளின் தன்மை அதிகரித்து, கடைசியில் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வருகின்றன. ஆனால், அவை வந்த பிறகு அதற்குக் காரணம் தெரியவில்லை எனக் கூறுகிறோம். உண்மையில் தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை செய்துகொள்வதுதான் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மூலக் காரணம்.
ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதி அளவு அரிசி எடுத்துக்கொண்டு, காற்று புக முடியாத அளவிற்கு நன்றாக அடைத்து விட்டு அதைக் கண்காணியுங்கள். சில மாதங்களுக்குப் பிறகு, அரிசி கெட்டுப்போய்த் திடீரென்று ஒருநாள் அதில் சில வண்டுகள் பார்க்க முடியும். காற்றே உள்ளே செல்ல முடியாத பாட்டிலில் திடீரெனக் கண், காது, மூக்கு கொண்ட புது உயிரான வண்டு எப்படி வந்தது? அதாவது, அரிசி கெட்டுபோகும்பொழுது அந்தக் கெட்டுப்போன அரிசியைச் சாப்பிடுவதற்கு இயற்கையாகவே ஓர் உயிரை இறைவன் அந்த இடத்தில் உருவாக்குகிறான். அரிசிக்கு உகந்த பஞ்ச பூதங்கள் இருக்கும்பொழுது அந்த இடத்தில் அரிசி நன்றாக இருக்கிறது. அரிசி கெட்டுப்போய் அந்தப் பாட்டிலில் உள்ள பஞ்சபூதங்கள் தன்மை மாற்றும்பொழுது ஒரு குறிப்பிட்ட நிலையில் வண்டுகள் உயிர் வாழ்வதற்கான பஞ்சபூதங்கள் உருவாகின்றன. அந்த நேரத்தில் ஒன்றுமில்லாத இடத்தில் பல உயிர்கள் தோன்றுகின்றன!
இந்த வண்டுகள் அந்த அரிசியைச் சாப்பிடுகின்றன. வண்டை உருவாக்கியது அரிசி. ஆனால், வண்டு அரிசியை உணவாகச் சாப்பிடுகிறது. இப்படி வண்டுகள் பல உருவாகி, இனப்பெருக்கம் செய்து அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரிசியின் அளவு குறைந்து கொண்டே வரும். ஒரு குறிப்பிட்ட நாளில் அரிசி தீர்ந்து விட்டால் இந்த வண்டுகளுக்கு உணவு கிடைக்காமல் அவையெல்லாம் இறந்து போகும். இறந்து போன வண்டுகளுடைய உடல்கள் அந்தப் பாட்டிலிலுள்ள பஞ்சபூதங்களை மாற்றிச் சில நாட்களுக்குப் பிறகு பல புழுக்களைப் பார்க்க முடியும். இந்தப் புழுக்கள் எங்கிருந்து வந்தன? இறந்து போன வண்டிலிருந்து உருவான உயிர்கள்தான் புழுக்கள். இப்பொழுது இந்தப் பாட்டிலிலிருந்த பஞ்சபூதங்கள் கெட்டுவிட்டன. ஆனால், அவை புழுக்களுக்கு ஏற்றவை என்பதால் அவை வாழ ஆரம்பிக்கின்றன. ஆனால், வண்டுகள் அந்தப் பஞ்சபூதத்தில் வாழ முடியவில்லை. இந்த புழுக்கள் வண்டுகளைச் சாப்பிட ஆரம்பிக்கும். வண்டுகள் தீர்ந்தவுடன் புழுக்கள் மடியும். பல சிறிய பூச்சிகள் உருவாகும். இப்படியே போய், சில வருடங்களுக்குப் பிறகு அந்தப் பாட்டிலில் நம் கண்களுக்கு ஒன்றுமே தெரியாது. இப்படிச் சிறிதாகிச் சிறிதாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுமில்லாத பாட்டிலை நாம் பார்க்கலாம். இதுதான் பஞ்ச பூதத் தத்துவம்! ஒன்றுமில்லாத இடத்திலிருந்து அனைத்துப் பொருட்களும் உருவாகி, மீண்டும் ஒன்றுமில்லாது போகிறது. இதைப் புரிந்து கொண்டால் உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணத்தையும் அவற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகளையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
கொழுப்புக் கட்டிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கெட்ட கொழுப்புகளை நமது உடல் ஓரிடத்தில் அடைத்து வைக்கும். இதற்குப் பெயர்தான் கொழுப்புக் கட்டி. இதேபோல் நமது உடலில் எந்த வழியிலும் கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலை வரும்பொழுது ஓர் இடத்தில் உடல் அவற்றைத் தேக்கி வைக்கும். அந்தக் கழிவுகள் மீண்டும் கெட்டுப்போய் அவற்றைச் சாப்பிடுவதற்குச் சில கிருமிகள் உருவாகும். அப்பொழுது அந்த இடத்தில் நமக்கு வலி ஏற்படும். மருத்துவ உலகத்தினர் அந்தக் கிருமியை ஆராய்ச்சி செய்து "இது கொடிய கிருமி; இதனால் உடலுக்கு நோய் ஏற்படும்" என்று கூறுவர்.
கழிவைச் சாப்பிடுவதற்கு ஒரு கிருமி உருவானால் சாப்பிட்டு முடித்தவுடன் அது இறந்து விடும். இப்படிக் கழிவுகளைச் சாப்பிடுவதற்காகக் கிருமிகள் தோன்றி, அந்தக் கிருமிகள் கழிவுகளைச் சாப்பிட்டு மடிந்து, பிறகு வேறு கிருமிகள் உருவாகி, கடைசியில் அந்த இடத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும். இப்படிக் கட்டி வரும்பொழுது, இந்தத் தொடரில் விளக்கவுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தினால், அந்தக் கழிவுகளை நம் உடலை விட்டு அகற்றிப் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து நாம் மீள முடியும். கழிவுகளைச் சாப்பிட வரும் கிருமியை ஒன்றும் செய்யாமல், கழிவுகளை வெளியேற்றவும் மேற்கொண்டு நம் உடலில் புதுக் கழிவுகள் சேராமலும் இயற்கை முறையில் சில வித்தைகளைச் செய்தால் அந்தக் கிருமி இறந்து விடும். எந்த மருந்து மாத்திரையும் இல்லாமல் உயிர்க்கொல்லி நோய்களைக் குணப்படுத்த முடியும்!
ஆக, உடல் ஒருபோதும் நோயை ஏற்படுத்திக் கொள்வது கிடையாது. நம் உடலில் தங்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்காக நம் உடல் முயற்சி செய்யும்போது அதை நோய் என்று முத்திரை குத்தி, அதற்கு நாம் பார்க்கும் வைத்தியம் மட்டுமே நோய் எனப் புரிந்து கொண்டு, இனி நம் உடலுக்கு உதவி செய்து ஆரோக்கியமாக வாழப் பழகுவோம்!
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…