வயிற்றுப்போக்கைக் குணமாக்குவது எப்படி?
சென்ற வாரம் பார்த்தது போல, வாந்தி (Vomiting) வரும்பொழுது அதை வெளியே அனுப்பாமல் வாந்தியை நிறுத்த ஏதாவது ஒரு வைத்தியம் செய்தால் அந்த வாந்தி ஜீரணமாகிச் சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றால் உறிஞ்சப்படும். இரத்ததில் கலக்கும். சில நாட்களுக்குப் பிறகு அந்தக் கழிவுப்பொருட்கள் உடலில் தங்கி, கெட்டியாகி மலச்சிக்கலை உண்டு செய்யும். இப்படிக் குடல் பகுதிகளில் கழிவுப்பொருள் அதிகமாகித் தேங்கும்பொழுது நமது உடல் குடலைச் சுத்தம் செய்வதற்காக ஒரு சுரப்பியைச் சுரக்க வைக்கும். அதற்குப் பெயர் வயிற்றுப்போக்குச் சுரப்பி. இதனால்தான் சிலருக்குத் திடீரென வயிற்றுப்போக்கு ஏற்படுவது.
வயிற்றுப்போக்கு என்பது நோய் கிடையாது. பல நாட்களாக ஒழுங்காக மலம் போகாமல் அடைபட்டுக் கிடக்கும்பொழுது உடலில் உள்ள மருத்துவர் ஒரு நாள் முடிவு செய்து அந்தக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக, குடலைச் சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளும் ஒரு சிசிக்சைக்குப் பெயர்தான் வயிற்றுப்போக்கு.
ஆனால் நம்மில் பலர் இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே பயப்படுகிறோம். இப்பொழுது என்ன வெளியில் போகிறது? மானம், மரியாதையா போகிறது? கழிவுதானே போகிறது. போனால் போகட்டுமே! என்றாவது சிறுகுடல் பெருங்குடல் வெளியே வந்து விழுந்திருக்கிறதா? நேரம் பார்த்துச் சாப்பிடுகிறோமே, நேரம் பார்த்து மலம் கழிக்கிறோமா? தினமும் ஒழுங்காக மலம் கழிப்பவருக்கு வயிற்றுப்போக்கு வரவே வராது. எனவே அது ஒரு நோய் அல்ல என்பதைப் புரிந்து கொண்டு வயிற்றுப்போக்கை நாம் அனுமதிக்க வேண்டும்.
இதில் ஒரே ஒரு பயம் என்னவென்றால், இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் சோர்வு ஏற்படும். அது மட்டும்தானே? அதற்கு ஒரு சிறிய வழி உள்ளது.
வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நம் உடலுக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும். 1) நீர் 2) குளுகோஸ் என்கிற சர்க்கரை 3) உப்பு. இந்த மூன்றையும் நாம் உடலுக்குக் கொடுத்தால் சோர்வு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளலாம்.
இந்த நேரங்களில், தண்ணீரில் பனங்கருப்பட்டி, வெல்லம், அச்சு வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைக் கரைத்துக் கொண்டு, சிறிதளவு கல் உப்பும் கலந்து நிறையக் குடிக்க வேண்டும். ஆனால் வெள்ளைச் சர்க்கரை, பொடி உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள்! நாம் உடலுக்கு இந்த மூன்றையும் அனுப்பினால் உடல் சந்தோஷப்பட்டுச் சீக்கிரமாகக் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நம்மை ஆரோக்கியப்படுத்தும்.
நன்றாகப் பரிசோதித்துப் பாருங்கள்! வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நமக்குச் சிறுநீர் அதிகமாக வராது. ஏனென்றால், சிறுநீராகச் செல்ல வேண்டிய நீர் மலமாகச் சென்று கொண்டிருக்கும்.
சரி, வயிறு சுத்தமாகி விட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால், மேற்கூறியவாறு திரவத்தைக் குடித்துக்கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நிலையில் அதிகமாகச் சிறுநீர் வெளியேறும். எப்பொழுது குடித்த நீர் சிறுநீராக மட்டுமே அதிகமாக வருகிறதோ அப்பொழுது நம் வயிற்றுப்போக்கு முற்றிலும் குணமடைந்து விட்டது என்று பொருள். நமது வயிறு, குடல் ஆகியவை சுத்தமாகிவிட்டன என்று புரிந்துகொண்டு இந்த உப்பு-வெல்லக் கரைசலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சிறிது நேரத்தில் நன்றாகப் பசி உண்டாகும். அப்பொழுது முதலில் கஞ்சி அல்லது இயற்கை உணவுகளைச் சாப்பிட வேண்டும். அடுத்த வேளை இட்லி, பொங்கல் போன்ற இலேசான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதற்கு அடுத்த வேளை நமது வழக்கம்போல உணவு சாப்பிடலாம்.
இப்படி, வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நம் உடலுக்கு உதவி செய்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால் நம்மில் பலர் வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது மருந்து மாத்திரை, பாட்டி வைத்தியத்தைப் பயன்படுத்தி அதை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். இப்படிச் செய்தால் கழிவை நமது உடலிலேயே தங்க நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தம்.
இப்படி யார் யாரெல்லாம் கழிவை உடலுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறீர்களோ அதற்குப் பெயர்தான் நோய். வயிற்றுப்போக்கு நோயல்ல; அதை நிறுத்துவதற்குச் செய்யும் சிகிச்சைதான் நோய்.
—அடுத்த அமர்வில் சந்திப்போம்…
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
“