நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் உருவானது. ஒலிம்பிக் போட்டி, சுதந்திரத் தினம், குடியரசுத் தினம் போன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் பல நிறங்களில் ஆடை அணிந்து, குறிப்பிட்ட விதத்தில் நிற்கும்பொழுது விதவிதமான உருவங்கள் தெரியும். ஒருமுறை பூ போலத் தெரியும்; மீண்டும் கலைந்து நிற்கும்பொழுது மயில் போலத் தோன்றும்; மறுபடியும் கலைந்து நிற்கும்பொழுது தேசியக்கொடி போலத் தோன்றும். ஆனால் அங்கு பூவோ, மயிலோ, தேசியக் கொடியோ கிடையாது. 500 மனிதர்கள் கும்பலாக ஒரு விதத்தில் நிற்கும்பொழுது நம் கண்ணுக்கு ஒரு பொருள் போலத் தோற்றம் தெரிகிறது. இதே போலத்தான் நம் உடல் உறுப்புகளும்.
பல கோடிக்கணக்கான செல்கள் கருப்பு ஆடை அணிந்து நின்றால் அவை முடிகள். வேறு பல கோடிக்கணக்கான செல்கள் கும்பலாக நிற்கும்பொழுது அவை நமக்குக் கண் போன்று தோற்றம் தருகின்றன. மூக்கு, இதயம், சிறுநீரகம் ஆகிய அனைத்து உறுப்புகளும் செல்களால் ஆனவையே. நமது உடலில் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் இருப்பவை செல்கள் மட்டுமே. மைக்ரோஸ்கோப் மூலமாகத் தலை முடி முதல் உள்ளங்கால் வரை எந்த உறுப்பில் பார்த்தாலும் வெறும் செல்கள் மட்டுமே தெரியும். எனவே, நமது உடலில் உறுப்பு என்று எதுவும் கிடையாது. பல கோடிக்கணக்கான செல்கள் ஒன்று சேர்ந்தால் அதைத் திசு என்கிறோம். பல ஆயிரக்கணக்கான திசுக்கள் ஒன்று சேர்ந்தால் அது ஓர் உறுப்பு. உறுப்புகள் ஒன்று சேர்ந்தால் மண்டலம் – இரத்த மண்டலம், ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் போன்றவை. இந்த மண்டலங்கள் ஒன்று சேர்ந்தால் மனித உடம்பு. எனவே மனித உடலில் செல்கள் மட்டுமே உள்ளன. உறுப்புகளே கிடையாது!
செல்கள் நிறத்தாலும் உருவத்தாலும் வேறுபட்டிருக்கும். செல்களின் வேலை வேறு வேறு இருக்கும். கண்களில் உள்ள செல்கள் பார்க்கும் வேலையைச் செய்கின்றன. காதுகளில் உள்ள செல்கள் கேட்கும் வேலையைச் செய்கின்றன. இரைப்பையில் உள்ள செல்கள் ஜீரண வேலையைச் செய்கின்றன. இப்படி நிறம், உருவம், வேலை ஆகியவை வேறு வேறு. ஆனால், செல்கள் அனைத்தின் கட்டமைப்பும் (டிசைன்) ஒன்றுதான்.
செல்களின் மேல் உள்ள தோல் மெம்பிரைன் என்கிற ஒரு சவ்வுப் படலம். நம் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் இது இருக்கிறது. கண்ணிலும் இருக்கும், இதயத்திலும் இருக்கும். எல்லா செல்களுக்கு உள்ளேயும் சைட்டோபிளாசம், புரோட்டாபிளாசம் இருக்கும். காது செல்களுக்கும் இருக்கும், மூக்கு செல்களுக்கும் இருக்கும். எல்லா செல்களுக்கும் நியூக்ளியஸ் என்கிற உட்கரு இருக்கும். குரோமசோம், டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஜீன் ஆகிய அனைத்தும் செல்கள் அனைத்துக்கும் பொதுவானவை. செல்கள் அனைத்தும் ஒரே மாதிரிதான் உயிர் வாழ்கின்றன, சாப்பிடுகின்றன, கழிவுகளை வெளியேற்றுகின்றன, நோய்க்கு ஆட்படுகின்றன, கடைசியில் இறந்து போகின்றன. இப்படி, தலை முதல் கால் நகம் வரை நம் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளுக்குள்ளேயும் இருக்கும் செல்கள் ஒரே மாதிரி இருக்கும்பொழுது தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனிச் சிகிச்சை எப்படிச் செய்ய முடியும்? எனவே, நமது சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனிச் சிகிச்சை கிடையாது.
தண்ணீர் குடிக்கும்பொழுது யாராவது இந்தத் தண்ணீர் மூட்டுக்கு, இந்தத் தண்ணீர் கைக்கு என்று தனித் தனியாகக் குடிக்கிறோமா? மூச்சுக் காற்று இழுக்கும்பொழுது இந்த மூச்சு கணையத்துக்கு, இந்த மூச்சு மூளைக்கு என்று இழுக்கிறோமா? நாம் சாப்பிடுகிற சாப்பாடு செல்கள் அனைத்துக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. குடிக்கும் நீர் எல்லா உறுப்புகளிலும் உள்ள எல்லா செல்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. இழுக்கும் மூச்சுக் காற்றும் அப்படியே. ஒவ்வொரு செல்லில் இருந்து வெளிவரும் நீர்க் கழிவுகள் சிறுநீர் எனும் பெயரில் மொத்தமாக வருகின்றன. வெளியேறும் சிறுநீரை இது கண்ணுடையது, இது மூக்குடையது என்று பிரிக்க முடியுமா? உடலுக்கு எதைக் கொடுத்தாலும் எல்லா உறுப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றன. அதே போல், உடலிலிருந்து எது வெளியே வந்தாலும் சமமாக வெளியே வருகிறது. எனவே, உடலுக்கான சிகிச்சையும் உறுப்புகள் அனைத்துக்கும் பொதுவானதாகத்தானே இருக்க முடியும்? தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனிச் சிகிச்சை என்ற பெயரில் நாம் பல ஆண்டுகளாகப் பல நோய்களுக்குச் சரியான மருத்துவம் கிடைக்காமல் துன்பப்பட்டு வருகிறோம்.
கண்ணில் நோய் வந்தால் கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும். சிறுநீரகத்தில் நோய் வந்தால் சிறுநீரக மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்பதுதான் உலகத்திலுள்ள பொதுக் கருத்து. ஆனால், எல்லா நோய்களுக்கும் ஒரே தீர்வு என்பது இந்தச் சிகிச்சையில் முக்கியமான ஒரு கருத்து. தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனிச் சிகிச்சை இருக்கிறது என்று யாராவது கூறினால், ஒரு சிறு உதாரணம். வாயில் விஷம் சாப்பிட்டால் வாய்க்கு மட்டும் உயிர் போகுமா அல்லது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உயிர் போகுமா? வாயில் விஷம் வைத்தால் ஐந்து நிமிடத்தில் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறந்து போகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? நமது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் எதுவாக இருந்தாலும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றன. அதே போல், நோயையும் சமமாகப் பிரித்துக் கொள்கின்றன. நீரிழிவு, ஆஸ்துமா, தைராய்டு கோளாறு, புற்று நோய் போன்ற நோய்கள் குறிப்பிட்ட உறுப்பில் மட்டும் கிடையாது. மொத்த உடம்பிலும் சமமாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, எந்த நோய்க்கும் குறிப்பிட்ட உறுப்பில் மட்டும் மருத்துவம் பார்ப்பது சரியான தீர்வு கிடையாது. நம்புங்கள்! ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் எல்லா நோய்களையும் மொத்தமாகக் குணப்படுத்தலாம்!
எனவே, நாம் இனிமேல் இத்தொடரில் உறுப்புகளைப் பற்றி அதிகமாகப் பார்க்கப் போவதில்லை. செல் என்றால் என்ன? ஒரு செல் எப்படி உயிரோடு இருக்கிறது? எதைச் சாப்பிடுகிறது? எப்படி வேலை செய்கிறது? அதற்கு எப்படி நோய் வருகிறது? வந்தால் நோயை எந்த ஒரு மருந்து மாத்திரையும் மருத்துவரும் இல்லாமல் எப்படிக் குணப்படுத்துவது? இப்படிப் பல விஷயங்களைத் தெளிவாகப் பார்க்கப் போகிறோம். உடலில் உள்ள ஒரு செல்லைக் குணப்படுத்தத் தெரிந்த ஒரு மருத்துவருக்கு உறுப்புகள் அனைத்தையும் குணப்படுத்தத் தெரியும்.
"என்னடா இது? நாம் சிகிச்சை என்று எண்ணி இதைப் படிக்க ஆரம்பித்தோம். ஆனால், இவர் அறிவியல் வகுப்பு போலச் செல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாரே" என்று நினைக்க வேண்டாம்! இதுவரை யாரும் உடலைப் பற்றித் தெளிவான விளக்கத்தைக் கூறவில்லை. உலகிலுள்ள எல்லா மருத்துவர்களும் நோய்க்குப் பெயர் வைத்தார்கள், காலம் முழுவதும் மருந்து, மாத்திரை சாப்பிடக் கட்டாயப்படுத்தினார்களே தவிர, யாரும் உடலைப் பற்றிய உண்மையைச் சரியாக விளக்கவில்லை. ஆரம்பத்தில், செல்களைப் பற்றிப் படிக்கும்பொழுது சற்று மந்தமாக இருந்தாலும் போகப் போக ஏன் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். உடலைப் பற்றிய ஞானம் இல்லை என்றால் வருவது நோய். உடலைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால் அதுதான் சிகிச்சை. நமது சிகிச்சையில் மருந்து, மாத்திரை கிடையாது. ஞானம்தான் மருந்து.
ஒரு கூட்டத்தில் திடீரென ஒரு பாம்பு வந்தால் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைந்து போவார்கள். ஆனால், பாம்பாட்டி ஓட மாட்டார். பாம்பு என்றால் என்ன? பாம்பின் தன்மையென்ன? பாம்பை எப்படிக் கையாள்வது என்ற வித்தையைத் தெரிந்தவர் பாம்பைப் பார்த்துப் பயப்படமாட்டார். நோய் என்றால் நமக்கு ஏன் பயம் வருகிறது என்றால் நோயைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை. உடல் என்றால் என்ன? உறுப்புகள் என்றால் என்ன? செல்கள் என்றால் என்ன? நோய்கள் என்றால் என்ன? நோய் எப்படி வருகிறது? அதை எப்படிக் குணப்படுத்துவது போன்ற எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டால் நாம் நோயைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. இந்தத் தொடரை முழுவதுமாகப் படித்தால் நீங்கள் நோயில்லாதவராக மாறுவீர்கள். நோயைப் பார்த்துப் பயப்பட மாட்டீர்கள்!
கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!
–அடுத்த அமர்வில் சந்திப்போம்…