"உன் நண்பன் யாரென்று கூறு! உன்னைப் பற்றிச் சொல்கிறேன்" என்ற கூற்றினைக் கேள்வியுற்றிருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பேர் நண்பர்களாய் இருக்கலாம். பெரும்பாலான நட்புகள் இரயில் சிநேகிதம் போல வாழ்வின் ஒரு கால கட்டத்தில் வந்துவிட்டுப் போகும். சில நட்புகள் சாகும் வரையும் தொடரும்.
ஒரு சின்ன கற்பனைக் கதை. x என்ற ஒருவருக்கு நான்கு நண்பர்கள். அதில் நான்காவது நண்பரின் மேல் அவருக்கு அளவு கடந்த பாசம். உலகத்தில் எவையெல்லாம் நல்லவையோ, மிகச் சிறந்தவையோ அதை மட்டுமே அவருக்குக் கொடுப்பார்.
மூன்றாவது நண்பர் மேலும் பாசம் இருந்தாலும் ஒரு நாள் தன்னை விட்டு வேறொருவரிடம் சென்று விடுவாரோ.. என்ற சின்ன சந்தேகம் அவருக்கு!
இரண்டாவது நண்பரை மற்ற மூவரையும் விட அதிகமாய் நம்புகிறார். அவரும் நண்பனின் எண்ணம் போலவே அவரின் நன்மை, தீமைகளில் உடனிருக்கிறார்.
முதல் நண்பர் அவருக்கு உண்மையானவராய், அவரின் வாழ்வை வழி நடத்துபவராய் இருக்கிறார். அவர் தன்னை மிகவும் நேசிப்பது தெரிந்தும், x அவரை அவ்வப்போது நலம் விசாரிப்பதோடு சரி!
திடீரென x-க்கு உடல் நலமில்லாமல் போகிறது. இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை கண் முன்னே காட்சியாய் விரிகிறது. வாழ்நாள் முழுவதும் உடன் வந்த நான்கு நண்பர்களை விட்டு விட்டுத் தனியே செல்ல விரும்பாமல் நண்பர்களை அழைத்து அவரின் கடைசி ஆசையைக் கூறுகிறார்.
நாலாவது நண்பரிடம், "இவ்வளவு நாள் உன்னை நான் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். இப்போது நான் இவ்வுலகை விட்டுப் போகிறேன். என்னுடன் வருவாயா?" என்கிறார். எந்தவொரு பதிலும் கூறாமல் வெளியேறுகிறார் அந்த நண்பர். அவரின் செய்கை இதயத்தைக் கத்தியால் கீறியது போல் உள்ளது x-க்கு.
வருத்ததுடன் x-ன் மூன்றாவது நண்பரிடமும் அதே கேள்வியைக் கேட்க, அவரோ "வாழ்க்கை வாழ்வதற்கே! நீ போனால் இன்னொரு நண்பன் கிடைக்காமலா போய்விடுவான்" என்கிறார்.
x கஷ்டப்பட்ட காலத்தில் உடனிருந்த இரண்டாவது நண்பர் நிச்சயம் தன்னுடன் வருவார் என்ற நம்பிக்கையில் அவரிடமும் அதே கேள்வியைக் கேட்கிறார் x. அதற்கு அவர், "உன்னை மிகவும் பிடிக்கும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் உனக்காகச் செய்ய முடியாது. வேண்டுமானால் நீ இறந்தபின் உன் கர்ம காரியங்களை நான் செய்கிறேன்" என்கிறார்.
சோகமே உருவாய் x இருக்கையில், "நான் உன்னுடன் வருகிறேன்! நீ எங்கு சென்றாலும் உன்னை விட்டு விலகுவதில்லை" என்றொரு குரல் கேட்க, யாராய் இருக்குமெனப் பார்க்கிறார் x. அங்கே x-ன் முதல் நண்பர் இருக்கிறார். "இவ்வளவு நாள் உன்னை நான் அதிகம் நேசித்தது இல்லை. உன்னை நான் நன்றாகப் பார்த்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்" என வருந்தினார் x.
x-ஜப் போலவே உங்களுக்கும் மேற்சொன்ன நான்கு நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் யாரென அறிய தொடர்ந்து படியுங்கள். x-ன் நான்காவது நண்பர் அவரின் உடல். என்னதான் நீங்கள் சந்தனத்தில் குளித்து, பன்னீரில் பால் குடித்தாலும் நீங்கள் இறக்கும்போது உடல் உங்களுடன் வரப்போவதில்லை.
x-ன் மூன்றாவது நண்பர் அவருடைய சொத்து. நீங்கள் இறந்தவுடன் நிச்சயம் அது மற்றொருவருக்குச் சென்றுவிடும். x-ன் இரண்டாவது நண்பர் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள். நீங்கள் இறந்தபின் காரியங்களை கவனிக்க மட்டுமே அவர்களால் முடியும்.
x-ன் முதல் நண்பர் அவரின் ஆன்மா. உங்களின் ஆன்மா மட்டுமே கடைசிவரை உங்களுடன் வரும்.
எது நடந்தாலும் இதுவும் கடந்து போகும் என்னும் பற்றற்ற நிலையில் அனைவரையும் அனுசரித்து வாழ்ந்தால் அகிலமே அன்பானதாய் தோன்றும்.
முயற்சித்துப் பாருங்களேன்!
நல்லாருக்கு
Good article and quite a revealing fact of life! But then it strikes you only when you read it. In a trice you are back to loving your fourth friend–your body. What a tragedy that life unfolds for a lot of us! Philosophy is only for the mind. The body never pays attention to it.
அருமையன நன்பர்கலின் கதை.மட்ரவர்கலை உனரவைகும் கதை..ஸிம்ப்ல்ய் ஸுபெர்ப்.
super
கருத்துக்களுக்கு நன்றி
very nice story kavitha 🙂