‘என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றேன்னு பாரு’ மனதிற்குள் கறுவியபடி வராண்டாவைத் தாண்டிக் கொண்டிருந்தான் சுனில்.
சுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக் கண்காட்சியில் பார்த்து, அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப்போய், பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். தற்போது, இருவரும் கென்யா நாட்டில்.
சுனிலின் தற்போதைய கோபத்திற்கு காரணம், முந்தினம் அவன் பெட்ரூமில் கண்ட காட்சிதான்.அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். வழக்கமாய் அந்நேரம் அவன் ஆபீஸில்தான் இருப்பான். அவளும்தான். அன்று தான் எடுக்க மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் வந்த துவேஷம்தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய் திரைச்சீலையால் மூடிக் கிடந்த பெட்ரூமில் மது ஒரு கருப்பனோடு கட்டித் தழுவிக் கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளியில் சில நொடிகளே அவன் பார்த்தாலும் அவனை உலுக்கியெடுத்துவிட்டது.
உடனே அவளைக் கொன்று போடத் தோன்றியது. துரோகம் செய்தவளுடன் இனி வாழ்க்கை இல்லை. அவளுக்குத் தண்டனை சாவுதான். தான் இதில் சம்பந்தப்பட்டு விடாமல் அவளைக் காலி செய்ய வேண்டும். நிமிட நேரத்திற்குள் அவன் மூளை கிரிமினலாக வேலை செய்தது. உடனே ஆபீஸ் திரும்பினான். திரும்பும் வழி முழுதும் அவளை எப்படிக் கொல்லலாம் என்றே சிந்தனை போனது.
வரும் வழியில் அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். சுனில் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. மெல்ல அந்த கட்டிடம் முழுக்க சுற்றிப் பார்த்தான். கைதேர்ந்த கொலைகாரனைப் போல மனம் வேலை செய்தது. ஆபீஸில் வேலையில் மனம் செல்லவில்லை. பேச்சிலராகச் சுற்றித் திரிந்த காலத்தில் விளையாட்டாய்ப் பழகிய துப்பாக்கி நினைவுக்கு வந்தது. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக் சமாசாரங்களுடனும் சில புல்லட்களுடனும் ப்ளான் ரெடி.
சாயந்திரம் 5 மணிக்கே வீட்டிற்குக் கிளம்பிவிட்டான். முதலில் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இரண்டாவது மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவன் வீட்டு பெட்ரூம் தெரிந்தது. லாவகமாய் ஒரு டைமருடன், மறக்காமல் சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமேட்டிக்காக வேலை செய்வதுபோல் செட் செய்தான். கட்டிடம் கட்டுகிறார்கள். சுவர் வேலை நடக்கிறது. நாளை பொழுது விடிந்ததும் சுவர் வைத்து விடுவார்கள்.
ராத்திரி அவள் சன்னலோரம் படுத்திருப்பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள் மெளனமாக செத்துப் போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது. உடனே துப்பாக்கியை அகற்றிவிட வேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத் தொடங்கிவிடுவார்கள். எப்படியும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி நேரம் ஆகும். அதற்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மறைத்து விடும். போலீஸ் வந்து பார்த்தால் சின்ன க்ளூ கூட கிடைக்காது. தானும் இந்த 12 மணி நேரம் வெளியில் இருப்பதற்கு ஆதாரம் தயார் செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்பர். மடமடவென காரியம் முடித்தான். நண்பனுடன் பார்ட்டி என்று மதுவுக்கு செய்தி அனுப்பிவிட்டு நண்பன் வீட்டுக்குச் சென்றுவிட்டான்.
இரவு அவனுக்கு நீளமானதாகக் கழிந்தது. நன்றாகக் குடித்திருந்த நண்பன் எழுந்திருக்க நேரமாகும். காலை 5 மணிக்கே புறப்பட்டான். அவள் சாவதைப் பார்த்து ரசித்துவிட்டு சத்தமில்லாமல் திரும்பிவிட வேண்டும். போலீஸ் கேட்டால் அவன் நண்பன்தான் சாட்சி.
மணி 5:56.
சத்தமில்லாமல் அவன் ஃப்ளாட்டை நெருங்கினான். 5:59:59 மணி வரை குண்டு பாயாது. சாகும் முன் கடைசியாக அவளை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது. 5:59:59க்கு முன் குண்டுக்கு வழிவிட்டு நகர்ந்து விட வேண்டும். அவள் செத்ததும் மறக்காமல் அந்தத் துப்பாக்கியையும் அகற்றி விட வேண்டும். அக்கம் பக்கம் பார்த்தான்.
மணி 5:58:45
மெல்ல காரிடார் தாண்டி சன்னலை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த விடிகாலையிலும் முன்தினம் பார்த்தது போல் அவள் அந்த கருப்பனுடன் கட்டிப்பிடித்து படுத்திருந்தாள்.
மணி 5:59:15
அடிப்பாவி, இன்றுமா?
அவனுக்கு ஏதோ வித்தியாசமாய்ப் பட்டது. இவர்கள் ஏன் நேற்று பார்த்த அதே போஸில் படுத்திருக்கிறார்கள். அதுவும் இம்மிகூட ஆடாமல் அசையாமல். சற்றே மனம் குழம்பியது. அதே நேரம் ஹாலில் யாரோ இருப்பது போல் தோன்ற அங்கே பார்த்தான்.
மது எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். எனில் இது யார்? மீண்டும் படுக்கையைப் பார்த்தான். மெல்ல விடிந்து கொண்டிருந்த நேரத்தில், மெல்ல பரவிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் அது தெரிந்தது.
அது வண்ணங்களால் வரைந்தெடுக்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. மது 3டி ஓவியங்கள் வரைவதில் கில்லாடி என்பது நினைவுக்கு
வந்தது. வெளிச்சம் பரவப் பரவ, அந்த ஓவியம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொண்டிருந்தது. இருவர், அரை நிர்வாணமாய். ஒன்று மது, மற்றொன்று, கருப்பனல்ல! வெளிச்சத்தில் அது தன்னைப் போலவே இருந்தது. இருளில் கருப்பாய் தெரிந்திருக்கிறது. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது. விரிப்பின் வலது ஓரம் பளிச்சிட்டது அந்த வாசகம் ‘ஹாப்பி பர்த்டே, சுனில்’. சுனிலின் மூளை நினைவடுக்குகளில் அவன் பிறந்த நாளை தேடிக்கொண்டிருந்த நேரத்தில்….
மணி 6:00….. ப்ளப்…
சுனில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தான், மண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வழியே ரத்தம் குபுகுபுவென வந்துகொண்டிருந்தது.
ராம்பிரசாத்
இதைத்தான் சொந்த செலவுல சூன்யம் வச்சிக்கறதுன்னு சொல்றதோ?!
சுனிலுக்கு இது தேவைதான்!
தீர விசாரிக்காமல் திடீரென்று எடுக்கும் முடிவு வேதனை தரும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
யாருக்கும் சொல்லாம உனக்கே ஆப்பு வெச்சுகிட்டியே டா சுனிலு…