வழுவியோன் முகமே போலத்
திசையெலாம் வனப்பி ழக்கும்
கழுத்தணி மணிகள் ஆடக்
கன்றுகள் தம்மை எண்ணிக்
குழலூதும் ஆயர் முன்னே
கூடியே மனையை நோக்கிப்
புழுதியைப் பரப்பித் தூய
பசுவினம் போம்வி ரைந்து
மூசுவான் புட்கள் கல்லா
மூடர்போல் ஆர்த்துச் செல்லும்
பூசுனைப் பழக்கீற் றென்னப்
பூத்தவோர் பிறையைக் கண்டு
காசினைக் கண்ட ஏழை
கண்ணென அல்லி யும்தன்
மாசிலா இதழ்வி ரித்து
மனத்தினில் மகிழ்வு கொள்ளும்
இரவுக்கு வணக்கங் கூறி
எழில்நிறை அந்தி செல்லப்
பிரிந்திடா அழகு பேணும்
பெண்களோ உடனே தங்கள்
கரமலர் விளக்கெ டுத்தும்
கனியிதழ் நகையெடுத்தும்
விருந்தென விரும்பி வந்த
வேளையை வரவேற் பாரே.