ஜெய், விஜயலக்ஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, புது இயக்குனர் எம்.பிரபு இயக்க ’அதே நேரம் அதே இடம்’ எனும் திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ப்ரேம்ஜி அமரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே, இரண்டு தமிழ்ப் படங்களுக்கும், ஒரு கன்னட திரைப்படத்திற்கும் இசையமைத்தவர். நான் சொல்லித்தான் உங்களுக்கு இது தெரிகிறதென்றால், மூன்றுமே ஃப்ளாப் ஆகிவிட்டது என்றுதானே அர்த்தம்! மனிதருக்கு இந்தத் திரைப்படம் எப்படி அமைகின்றது என்று பார்க்கலாம். திரைப்படத்தின் எல்லா பாடல்களையும் லலிதானந்த் எழுதியுள்ளார்.
டோஷிபா
என்ன வரிகள், என்ன வரிகள் – அப்பப்பா! டோஷிபா என்றொரு பெண் வந்து ஹலோ சொல்கிறாளாம், லவ்யூ சொன்னால், எஸ்கேப் ஆகிவிடுகிறாளாம். அதற்கு மேல் அற்புதம் ப்ரேம்ஜியின் குரல். போங்கய்யா..! சரியான டப்பாங்குத்து பாடல். சிலரை தாளம் போட வைக்கும். சிலர் “என்ன கொடுமை ஸார் இது!” என்று கேட்கலாம்.
முதல் முறை
இம்முறை நிஜமாகவே நல்ல பாடலைத் தந்திருக்கின்றனர் கவிஞரும் இசையமைப்பாளரும். காதல் வரிகள் அழகாய் சொக்க வைக்கின்றன. அதற்கேற்றாற்போல மெட்டும் அமைந்திருக்கிறது. கிடாரும் வீணையும் அழகாக விளையாடுகின்றன. ஹரிசரண் – ஹரிணி பாடும் நல்ல டூயட் பாடல். இரு ஸ்டான்ஸாக்களுக்கும் நடுவில் புல்லாங்குழலோடு ஹரிணி இணைந்து பாடும் இடம் அற்புதம். இப்படி ஒரு பாடலை தந்தால், முன்பு கேட்ட பாடல் மறந்து, ப்ரேம்ஜியின் இசையைப் பிடித்து விடும்.
வெண்ணிலவு
எத்தனையோ பெண் குரல்கள் கேட்கின்றன. என்ன மொழி என்று கூட புரியவில்லை. நல்ல வேளையாக விஜய் ஏசுதாஸ் சீக்கிரம் பாட ஆரம்பிக்கின்றார். கூடிய சீக்கிரத்தில் ஸைந்தவியும் சேர்ந்து கொள்ள, பாடல் முழுவதும் சுந்தரத் தமிழ் கேட்கின்றது. மீண்டும் நடுவில் அந்த பாஷை வருகின்றது. இசை பிரயோகிப்பைக் கேட்டால், ஒரு வேளை அராபிக் மொழியில் எல்லாம் பாடல் எழுத ஆரம்பித்து விட்டார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது!
அது ஒரு காலம்
அழகிய கிடாரோடு, மெல்லிய டப்பாங்குத்தையும் கலந்து தந்திருக்கிறார் ப்ரேம்ஜி. ஹரிசரணுடன் சேர்ந்து அவரும் பாடுகின்றார். காதலியைப் பிரிந்து தவிக்கும் நாயகனை, அவர் தோழன் தேற்றுவது போல பாடல் அமைந்திருக்கின்றது. சோகத்தை எல்லாம் அழகாய் காட்டுகிறார் ஹரிசரண்.
நம்ம ஊரு சென்னையில
நீண்ட ஷெனாய். “நல்லாருக்கும் போல” என்று நினைப்பதற்குள் டப்பாங்குத்து பாடலாக மாறிவிடுகின்றது. வெங்கட் பிரபு பாடலை பாடியிருக்கின்றார். “பச்சோந்தி பரவாயில்லை, பொண்ணுங்க மோசம்” என்ற "அற்புத" கருத்தோடு வருகின்றது! எப்பொழுது இப்படி எல்லாம் எழுதுவதை நிறுத்துவார்களோ!
மிகவும் சிரமப்பட்டு, விதவிதமான பாடல்களைத் தர வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார் ப்ரேம்ஜி அமரன். பரவாயில்லை. திறமை வாய்ந்த மனிதர் – ஹாஸ்யமும் இசையும் சரளமாக வருகின்றது. தமிழ் சினிமா இவரை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறதா என்று பார்ப்போம்.”