9.
விரலற்றுத் தொடுகிறாயென்
உயிர்ப்பரப்பை.
வெண்திட்டில் மிதக்கும் உன்
கருவிழி
அமிழ்து பொழிகிறதென்
பசித்த வயிற்றில்.
பளபளத்துக் குதிர்ந்த உன்
அனல்நெடி,
வெப்ப நதியாகி
சிலிர்த்தோடுதென்
முதுகுத்தண்டில்.
என் பின்னந்தலையில்
சிலீரெனப் பாயுதுன்
தீ நக மின்னல்.
என்னுள்
சுழல்களை நிகழ்த்தும்
சிகர உருகலாய்
பொழிகிறாய்
என் உடைகளைத்து
குளித்துக்கொண்டிருக்கிறேன்
நிர்வாணியாய்
உன்னுள் மூழ்கி.
10.
சதா எரிந்துகொண்டிருக்கிறதுன்
கூந்தல் பரப்பினின்றெழும்
அறியப்படாத ஜ்வாலை.
நீயோவெனில்-
இரைச்சல்களின் ஆதிக்கமற்று
கல்லாய்ச் சமைந்திருக்கிறாய்
உன் மௌனக்கூட்டில்.
உன்
குரலெனும் அணைதிறந்து
வெளிப்படாததால்
பிரித்தறியமுடிவதில்லை
மௌனமாய் நீயெழுப்பும்
கீதத்தின் மகிமையை.
என்றபோதும்-
உன்
அரூபாதீத மண்டலத்தினின்றெழும்
புதிரிசை
எனக்கேயானதொரு
நாதமழையாய்.
ஸ்தூலம் கடந்ததோர்
அரூப சக்தியில்
ஒளியாகியிருக்கிறோம்
நாம்
ஒரே மூலத்தில்.
(‘சாட்சியாக…’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“
என் உடைகளைத்து குளித்துக்கொண்டிருக்கிறேன் நிர்வாணியாய் உன்னுள் மூழ்கி. நன்று கவிவரிகள்.