அதிரூபவதிக்கு… (17)

எந்த விளையாட்டும்
விளையாடத் தெரியாத
உனக்கு
காதல் விளையாட்டை
அறிமுகப்படுத்தவே
நான்
பிறந்திருக்கிறேன்.

………………………..

நமது சந்திப்புகள்
காலித் தேநீர்க் கோப்பைகளோடு
கவலைகளை வைத்துவிட்டு
மனசு முழுக்க
காதலை நிரப்பிக்கொண்டு
நிறைவடைகின்றன!

…………………………………………

அந்த
பார்வையற்ற
தொழுநோயாளியின்
கரம் பிடித்து
சாலையைக் கடக்க
நீ உதவிய பொழுதுதான்
என் சந்தேகம்
உண்மையானது…
நான் காதலிப்பது
தேவதையைத்தான்.

…………………………………………………

அனு தினமும்
உன்னை
மனதிற்குள்
கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்
நீயோ
காதலர் தினத்தைக்
கொண்டாடாத
கல் என எனை
கேலி செய்கிறாய்!

About The Author