மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!
"என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார்.
1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர். பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட நேரம் அது! மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரான அவரது மண்டை ஓட்டில் ஒயினை ஊற்றிக் குடித்தால் எதிர்காலம் கூறும் பிரபல ஜோதிடர் ஆகலாம் என்று நம்பி அந்த மூன்று பேரும் கல்லறையைத் தோண்டியிருந்தனர்.
அதில் ஒருவன் மண்டையோட்டை எடுத்து பையில் இருந்த ஒயினை எடுத்து அதில் ஊற்றிக் குடித்து விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவனைத் துளைத்து அவன் உயிரைக் குடித்தது. புரட்சிக்காரன் ஒருவனின் குண்டுதான் அவனை இறக்க வைத்திருந்தது.
மற்ற இரண்டு பேரும் திரும்பி எலும்புக்கூட்டைப் பார்த்த போது எலும்புக்கூட்டின் மார்பில் ஒரு தாமிரத் தகடு கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தனர். அதில் மே 1793 என்று எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே 1793ம் ஆண்டு மே மாதம் தான் அந்த எலும்புக்கூட்டை அவர்கள் தோண்டி எடுத்திருந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் ஓடத் தொடங்கினர்.
தன் கல்லறையை எந்த வருடம் எந்த மாதம் தோண்டி தன் எலும்புக்கூட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துச் "சொல்லியிருந்தது" உலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!
இந்தியத் தலைவர்கள் பற்றிய அவரது ஆரூடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன
அவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில் அவர் இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ள வாசகங்கள் நம்மை அயர வைக்கும்!
"மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்"
எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும் 1984ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த சம்பவம்!
இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதை அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார்.
"நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்"
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாடல் பிரபல கன்னட வாரப் பத்திரிக்கையான ‘விக்ரம’ என்ற பத்திரிக்கையின் 28-4-1991 தேதியிட்ட இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுதான்! சரியாக மூன்று வாரங்கள் கழித்து அவர் கொல்லப்பட்டார்! இலங்கைப் போரில் அவர் துருப்புகளை ஈடுபடச் செய்ததையும் பின்னர் மூன்று தற்கொலைப் படையினர் சதி செய்து தமிழகத்தில் அவர் வருகை புரிந்த போது அவரைக் கொன்றதும் வரலாற்று உண்மை!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது; திகைக்க வைத்தது!
"கடவுளின் நகரம் மீது இடி இடிக்கும்! இரண்டு சகோதரர்கள் குழப்பத்தில் நாசம் அடைவர்! கோட்டை காக்கப்படும் போது பெரிய தலைவர் இறந்துபோவார். மூன்றாம் உலகப் போர் மூளும்!’
இன்னும் ஒரு பாட்டில், "ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்" என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில் அவர் கூறுவது:- "1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்"!
இந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டும் பாடலாகவே நாஸ்டர்தாமஸை வியந்து போற்றுவோர் கூறுவர்.
(அடுத்த இதழில் முடியும்)