ஆடம்பரமாக, அட்டகாசமான ஒரு காரில், கறுப்புக் கண்ணாடி, கோட் சூட் சகிதமாக வந்த அந்த ஆசிரியரைப் பத்தாவது வகுப்பு மாணவர்கள் கேலியாகப் பார்த்துத் தங்களுக்குள் மெதுவாகக் கிண்டலடித்துச் சிரித்துக் கொண்டார்கள். அதைக் கவனித்து விட்ட அந்த ஆசிரியர், பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் அவர்களைப் பற்றி முறையிட்டார்.
தலைமை ஆசிரியை என்ன செய்தார்?… அந்த மாணவர்களைத் திட்டினாரா?… இல்லை தண்டித்தாரா? அல்லது அவர்கள் பெற்றோர்களை அழைத்தாரா? இல்லை! பள்ளி விளையாட்டுத் திடலுக்கு அருகில், தனியாக நின்றிருக்கும் அந்த ‘அமைதி மர’த்தின் கீழ் அமரச் சொன்னார்.
பின், கோபத்தில் இருந்த அந்த ஆசிரியரையும் அவ்வாறே அந்த ‘அமைதி மர’த்தின் கீழ் அமரச் சொன்னார். ஒரு பதினைந்து நிமிடம் சென்ற பின், தலைமை ஆசிரியை அந்த ‘அமைதி மர’த்திற்குச் சென்றார். அவர் என்ன பார்த்தார்?… ஆசிரியரும் மாணவர்களும் தங்களுக்குள் சமாதானமாகி, அந்த மாணவர்கள் ஆசிரியரின் பாதங்களைத் தொட்டு வணங்கிக் கொண்டிருந்ததை! ஆசிரியரும் அவர்களைத் தோளில் தட்டிக் கொண்டிருந்தார்!
இது எப்படி நடந்தது? எங்கு நடந்தது?
தெற்கு தில்லி சாகேத்தில் உள்ள ஏ.பி.ஜே உயர்நிலைப் பள்ளியின்தான்! இதன் தலைமை ஆசிரியை அனிதா பாய் அவர்கள் கூறுகிறார்கள் – ஒரு கண்சிமிட்டலுடன் "இது, இந்த மாற்றம் அமைதி மரத்தின் பயனால்தான் நிகழ்ந்தது" என்று!
முற்போக்கான கருத்துக்களுடன் நடந்து வரும் இந்தப் பள்ளியில், மாணவர்களின் ஒழுங்கீனத்தையும், தவறான போக்குகளையும், அவர்களுக்குள் அவ்வப்போது ஏற்படும் சச்சரவுகளையும் சமாளிக்கப் புதுமையான ஒரு முறையைக் கையாளுகிறார்கள். பள்ளி வளாகத்திற்குள் எவரேனும் தவறு செய்தால் அவர்களைத் திட்டுவதுமில்லை, தண்டிப்பதுமில்லை. அதற்குப் பதிலாக, தவறு செய்தவரை ‘அமைதி மரம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அந்த மரத்திற்குக் கீழ் அமர வைக்கிறார்கள். அதன் கீழ் அமர்ந்து, தான் செய்தது தவறா சரியா என்று அமைதியாகச் சிந்திக்கச் சொல்கிறார்கள். தான் செய்தது தவறு என்று உணர்ந்து விட்டால் அவர், தான் தவறிழைத்தவரிடம் சென்று மன்னிப்பு கேட்கலாம். இது மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, அலுவலகப் பணியாளர்களுக்கு, ஏன்… தலைமை ஆசிரியருக்கு என எல்லோருக்கும் பொருந்தும்! தலைமை ஆசிரியை தன் மாணவர்களிடம் "நான் ஏதேனும் தவறு செய்துவிட்டால், என்னையும் நீங்கள் அந்த அமைதி மரத்தின் கீழ் பார்க்கலாம்" என்று கூறுகிறார்!
அந்தப் பள்ளியில் படிக்கிற சிவாதித்யா எனும் 10 வயது மாணவன் "நான் என் நண்பனுடன் ஏதேனும் சண்டை போட்டுவிட்டால், உடனே அந்த அமைதி மரத்தின் கீழ், அதன் நிழலில் ஐந்து நிமிஷங்கள் அமைதியாக உட்காருவேன். அது என் கோபத்தை அடக்கி சாந்தி அடையச் செய்கிறது" என ஒரு முனிவரைப்போலச் சொல்கிறான்!
"விளையாட்டிற்காக என்னுடைய பென்சிலை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்ட என் வகுப்பு நண்பனிடம் மிகவும் கோபமாகக் கை ஓங்கி அடிக்கச் சென்றேன். அப்போது என் ஆசிரியர், என்னை அந்த மரத்தின் கீழ் சென்று அமைதியாக அமரும்படிச் சொன்னார். அந்த மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது, அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் "மூடிய கைவிரல்களுடன் நீ நேசக்கரம் நீட்டிக் கைகுலுக்க முடியாது!" என்று எழுதியிருந்தது. அந்த வரிகள் எனக்குள் மந்திரம் போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின! ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்காக நான் ஆத்திரமடைந்தேன் என்பதை உணர்ந்து கொண்டேன். உடனே, நான் என் நண்பனிடம் சென்று மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்" என ரிசாத் எனும் மாணவன் கூறுகிறான்.
இந்த எண்ணம், எப்படி அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியைக்கு வந்தது?
அவர் சொன்னார் "சமூகத்தில் வன்முறையும் சண்டைகளும் மலிந்து விட்டன. ஆகவே, இன்றைய தலைமுறை மாணவர்களை அமைதிக்கும் சுமுகமான உறவுகளுக்கும் தயார் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். உடனே, என்ன பெயரென்று கூட எங்களுக்குத் தெரியாத அந்த மரத்தைத் தேர்வு செய்து அதற்கு ‘அமைதி மரம்’ என்று பெயரிட்டோம். அதை ஓம், சிலுவை, வளர்பிறை – ஒரு நட்சத்திரம் ஆகியவற்றால் அனைத்துச் சமய ஒருமைப்பாட்டின் அடையாளமாகவே அலங்கரித்தோம். மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரிவரப் புரிந்துகொண்டு, சமய வேற்றுமைகள் இல்லாமல் வளர வேண்டும் என்ற கருத்துடன் செய்தோம்" என்று.
இந்த மரத்தின் சிறப்பு என்ன?
"புத்தர் பிரானுக்கு ஒரு மரத்தின் கீழ்தானே ஞானோதயம் கிட்டியது?" என்று ஆசிரியர் ஒருவர் வேடிக்கையாகக் கூறுகிறார்.
"இயற்கை, மனதை அமைதிப்படுத்தும் தன்மை உடையது. பறவைகளின் கீச்சு கீச்சென்ற ஒலியுடன் அமைதியான நிழல் தரும் மரத்தின் கீழ் அமர்ந்தால் மனம் சாந்தி பெறுகிறது" எனக் கருணா எனும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கூறுகிறான்.
அதையே அங்குள்ள ஆசிரியர்களும், "நாங்கள் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அந்த மரத்தின் கீழ் அமர்ந்தவுடனேயே எங்களுக்கு மனம் அமைதி அடையத் தொடங்குகிறது" என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.
தெற்கு தில்லி ஏ.பி.ஜே பள்ளியின் இந்த அணுகுமுறை எவ்வளவு புதுமையாக இருக்கிறது! அடிப்பதாலும் திட்டுவதாலும் திருத்த முடியாதவர்களை இந்த இயற்கை வழிமுறையினால் திருத்தமுடியும் என்பது எவ்வளவு இனிய மாறுதல்!
-மூலம் ‘Speaking Tree’ கட்டுரை.
னல்ல முயர்சி