இன்ஜினியரிங் படித்து நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய (அட! ஒரு பேச்சுக்கு சொல்றேன்னு வச்சுக்கங்களேன்!) சம்பாதிக்கிறீர்கள். அப்பா, அம்மா சும்மா இருப்பாங்களா? உடனே ஒரு பட்டதாரிப் பெண்ணைத் தேடிப் பிடித்து நிச்சயம் செய்கிறார்கள். ஊரே அதிரும்படி கல்யாணம் முடித்து ஜோடியாக தேனிலவு போக வீட்டிலிருந்து வெளியே வருகிறீர்கள். வீட்டு வாசல் அருகில் ஒரு விதவைப் பெண் தற்செயலாகத் தென்படுகிறாள். உடனே உங்கள் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் உங்கள் இருவரையும் மறுபடி வீட்டுக்குள்ளே வரச் சொல்லி “ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு கிளம்புங்க, சகுனம் சரியில்ல” என்னும்போது நீங்கள் மறுக்க மாட்டீர்கள். நீங்கள் என்னதான் படித்திருந்தாலும் இது போன்ற திணிப்புகளைத் தவிர்க்க முடிவதில்லை.
நம்மூரில் மட்டும்தான் இது போன்ற மூட வழக்கங்கள் இருக்கிறது என்று நினைப்பவர்களாக இருந்தால் முதலில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். நாட்டுக்கு நாடு, மக்கள், கலாச்சாரம் மற்றும் தட்பவெப்பநிலைகேற்ப இவற்றில் வித்தியாசங்கள் இருக்கலாமே ஒழிய எல்லா இடத்திலேயும் மூட வழக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
‘ஐஸ்லாந்து’ வடக்கு ஐரோப்பிய தீவு. அதாவது வட அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் ‘கிரீன்லாந்து’ கடலுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பது. எப்போதும் குளிர், பனிப்பொழிவு என்று ஒரே ‘ஜில்’ பிரதேசம். அவர்கள் வாழ்வைக் கட்டுப்படுத்தும் மூட வழக்கங்களைப் பார்ப்போம்.
இலையுதிர் காலத்தில் மேய்ச்சலுக்குப் போகிற ஆடுகள் ‘நறநற’ வென்று பல்லைக் கடித்தால், தொடர்ந்து வரும் குளிர்காலம் ரொம்பக் கடுமையாக இருக்கும்.
குளிர்காலத்தில் முதலில் தாய் வயிற்றில் இருந்து வெளிவருகிற ஆட்டுக் குட்டி வெள்ளை நிறத்தில் இருந்தால் அந்தக் குளிர்காலம் ரொம்பக் கெட்டதாக இருக்கும்.
குளிர்காலப் பனிப் பொழிவு சீக்கிரமே வந்துவிட்டால் அந்த வருட குளிர்காலம் ரொம்ப நல்லதாக இருக்கும்.
யாராவது செத்த எலியைத் தூக்கி வீசினால் அந்த திசையில் இருந்து காற்று வீச ஆரம்பிக்கும் (அடப்பாவிகளா!! இது ரொம்ப ஓவர்டா!)
சனிக்கிழமை மழை பெய்ய ஆரம்பித்தால் ஞாயிற்றுக்கிழமை ‘சர்ச்’ வழிபாடு முடியும் வரை விடாது.
ஒரு மாடு மரத்தை நக்கினால் மழை வரும்.
உங்கள் தலையில் நமைச்சல் எடுத்தால் தட்ப வெப்பம் ஈரமாகப் போகிறது என்று அர்த்தமாம்! (மீரா சிகைக்காய் எல்லாம் வாங்க மாட்டார்கள் போல!).
குளிர்காலம் முடியப் போகிற சமயத்தில் வீட்டு வாசற்படியில் அமர்ந்து ஆடை பின்னல் வேலைகள் செய்தால் குளிர்காலம் மேலும் நீடிக்கிற ஆபத்து ஏற்படும்.
மீன் சுத்தம் செய்யும் போது தவறிக் கீழே விழுந்த கத்தி முனை கடலை நோக்கியபடி இருந்தால் அடுத்த முறை மீன் பிடிக்கச் செல்லும் போது நிறைய மீன்கள் கிடைக்கும்.
எதையாவது சிந்தினால் சிதறினால் ஒரு குடிகாரன் வீட்டுக்கு வருவான்.
ஒரு நோயாளி ஞாயிற்றுக் கிழமை மூன்று முறை தும்மினால் அது ஒரு ஆரோக்கிய அடையாளம்.
ஞாயிற்றுக் கிழமை காலை உணவுக்கு முன்னால் நீங்கள் மூன்று முறை தும்மினால் அந்த வாரத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு லாபம் கிடைக்கும்.
நீங்கள் வீடு மாற்றும் போது மழை பெய்தால் புதிய வீட்டில் உங்கள் வாழ்வு அமோகமாக இருக்கும்.
ஒன்பது மாடுகளும் ஒரு காளை மாடும் ஒரே பக்கத்தில் வரிசையாகப் படுத்திருக்கிற போது பார்த்தீர்களானால் உங்களுக்குப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
ஆள விடுங்கப்பூ! இப்பவே மூச்சு முட்டுது !!
நன்றி: இணையம்
“
நம்ம ஊரு சுப்ப்பருப்பு
>>ஒன்பது மாடுகளும் ஒரு காளை மாடும் ஒரே பக்கத்தில் வரிசையாகப் படுத்திருக்கிற போது பார்த்தீர்களானால் உங்களுக்குப் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
ஆசிரியர் கவனிக்க. இங்கேயும் முழுக்கருத்து பதியவில்லை. நான் எழுதியது கீழே.
உங்களுக்கு அதிர்ஷ்டமோ இல்லையோ, காளை மாட்டுக்குக் கொண்டாட்டம் தான்.