அதோ அஞ்சல் பெட்டி பார்
அணிந்த சிவப்புச் சட்டை பார்
தலைப்பகுதியில் வாயைப் பார்
தபால் போடும் வழியது
எடுக்கும் நேரம் காட்டிடும்
இரும்புத் தகடு கீழே பார்!
அஞ்சல் பெட்டி அனைத்திலும்
அள்ளிச் சேர்க்கும் கடிதங்கள்
அஞ்சலகம் சென்றிடும்
அங்கே முத்திரை குத்துவர்
நாடு நகரம் ஊர்கள் என்று
நம் கடிதம் பிரிந்திடும்!
வானில் ஏறிப் பறந்திடும்
வண்ண இரயில் ஏறிடும்
சொந்த ஊரைச் சேர்ந்ததும்
சுருக்குப் பையை அவிழ்த்ததன்
உள்ளே உள்ள கடிதத்தை
உரியோரிடம் சேர்ப்பரே!
அஞ்சல்தலை ஒட்டணும்
முகவரியும் எழுதணும்
அதோ கடிதம் எடுத்திட
அஞ்சல்காரர் வருகிறார்
ஓடிப்போய் நான் போடணும்
உன்னிடம் பிறகு பேசுவேன்!
( "முதல் வசந்தம்" என்னும் என் கவிதைத் தொகுப்பிலிருந்து-1997)