அசந்தர்ப்பம்

பிறந்தேன் பெண்ணாக
ஆண்டுகள் பலவற்றுக்கும் முன்னே
கனவுகள் கண்டேன் பலிக்காமலே
வாழ்கிறேன் முதிர்கன்னியாக

ஒவ்வொரு இரவும்
தலைக் குளியலின் முடிவாக
தலையணை நனைக்கும்
வற்றா நதியாக கண்ணீர்

விதவை கூட கொடுத்துவைத்தவள்
எம்முடன் ஒப்பிடும் பொழுது
விதி என்று விட்டுவிடுவர்
விளையாட்டுப் பொருளாய் ஆக்காது

எத்தனைதரம்தான் சிரிப்பது
தலைக்கு மை அடித்தும்
இன்னும் கழியாத பெண்மை
பார்ப்பவரை எல்லாம் கணவனாய்
வரித்து வாழ்ந்த பின்
தட்டிக் கழிக்கும் தபால்கள்

எத்தனையோ பார்த்தபின்
அரிதாரம் போட்டுக் கொண்டேன்
தலைகுனிந்து பலகாரம் கொடுத்தேன்
சேவித்தேன் அரைமனதாய்
நம்பிக்கை இல்லாமல்
பார்க்க விரும்பாத முகமாய்
மறந்து போன மாப்பிள்ளை
சென்று நாட்கள் ஆயின
வழக்கம் போலவே தபால்

கசக்காமல் பிரித்தேன்
‘பெண்ணைப் பிடித்திருக்கிறது
திருமண ஏற்பாடு செய்யவும்’
நம்பிக்கை இல்லாமலே மீண்டும்
மறுபடியும் படித்தும்
இன்னும் நினைவில் வரா
அந்த மாப்பிள்ளை முகம் தவிர
மறுத்த மற்றவர் முகம் எல்லாம்
வந்தன நினைவில்
அசந்தர்ப்பமாகவே..

About The Author

3 Comments

  1. karthik

    அருமை

    என்ன சொல்ல வரிகள் சதி செஅய்கிறது

    நல்ல அழகான அர்த்தமுள்ள வரிகள்

    நன்றி

Comments are closed.