‘வெயில்’ திரைப்படத்தை மறக்க முடியுமா? கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குபெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் ஆயிற்றே! அதனை இயக்கிய வசந்தபாலன், கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு எடுக்கும் படம் இது. மகேஷ் மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், வளர்ந்து வரும் இரு இசையமைப்பாளர்கள் – ஜி.வி. பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள். இருவருமே சில அற்புதமான மெட்டுகளுக்குச் சொந்தக்காரர்கள். வசந்தபாலனும் அழகிய மெலடிகளை விரும்புபவர். நா.முத்துகுமார் அத்தனை பாடல்களுக்கும் வரிகளை எழுதியுள்ளார். இவர்கள் அனைவரும் இணைந்தால் படத்தின் பாடல்கள் எப்படி இருக்கும்? கேட்டுவிடுவோம்.
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
மெல்லிய பியானோ, மனதை மயக்கும் புல்லாங்குழல், மெருகூட்டும் வயலின் – அத்தனை அழகிய ஆரம்பம். கதாநாயகன் தன் காதலியைப் பற்றிப் பாடும் பாடல். இதுவரை தமிழ் சினிமாவிலேயே நாம் கேட்டிராத ஒரு தத்துவம்! ஹா! படத்திற்குப் படம் இப்படி பாடல் இல்லையென்றால், இசைத்தட்டு விற்பனை ஆகாதோ! பாடலைப் பாடியிருக்கும் ரஞ்சித், வினீத் ஸ்ரீனிவாஸ், மற்றும் ஜானகி ஐயர் மூவரும் தங்கள் வேலையைச் சரியாக செய்துள்ளார்கள். தபலா தாலாட்ட வைத்தாலும், பாட்டின் மெட்டு என்னவோ கொஞ்சம் குழந்தைகள் பாடும் ரைம்ஸ் போலவே தெரிகிறது. இருந்தாலும் பரவாயில்லை, ஒரு வித்தியாசமான முயற்சி. வரிகளும் வித்தியாசமாகவே அமைந்துள்ளன. ஆங்காங்கே குழந்தைத்தனமாகவும், ஆங்காங்கே இயற்கையாகவும் தெரிகின்றன. பாடல் முழுவதையும் முகம் சுளிக்காமல் கேட்க முடிகின்றதே, அதுவே பெரிய விஷயம் அல்லவா!
கதைகளைப் பேசும்
இன்னும் ஒரு வித்தியாசமான மெலடி – பென்னி தயாள் மற்றும் ஹம்சிகா இணைந்து பாடும் டூயட். பாடல் முழுவதும் வரும் கீஸ், ஸ்ட்ரிங்ஸ், மௌத்-ஆர்கன் எல்லாமே அழகாய் அமைந்துள்ளன. இரு சரணங்களுக்கு நடுவில் வரும் இண்டெர்லூடில் இசையமைப்பாளரின் கற்பனை அழகாய் விளையாடுகிறது. மேற்கத்திய ட்ரம்ஸ், ஜாஸ், புல்லாங்குழல் எல்லாம் ஒன்றாய் இணைந்து கலக்குகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதற்கு இப்பாடலில் ஒன்றும் பெரிதாக இல்லை. சென்ற பாடலுக்குச் சொன்னதே இதற்கும் பொருந்தும்.
கண்ணில் தெரியும் வானம்
பிரகாஷ் குமாரின் சொந்தக் குரலில் – கண்ணில் தெரியுது வானம். மீண்டும் கிடார், மற்றும் கீஸின் அழகிய பிரயோகிப்பு. ஏழ்மையையும் போராட்டத்தையும் மையமாக வைத்து அற்புதமாக எழுதியுள்ளார் கவிஞர். பிரகாஷ் குமார் தன் உச்சரிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கவனித்துக் கேட்டால் ஒழிய முத்துகுமாரின் அழகிய வரிகள் ஒன்றும் புரியவில்லை. அப்படியே புரிந்தாலும், அவர் உச்சரிப்பு "கடவுலுக்கே" பொறுக்காது. மெட்டில் ஒன்றும் குறைச்சல் இல்லை. நல்ல கார்ட்ஸ் மாற்றங்கள், சுருதி மாற்றங்கள் – ஆனால் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாமோ என்றே தோன்றுகிறது.
உன் பேரைச் சொல்லும்
மெட்டை மட்டுமே நம்பி, வாத்தியங்களை தூக்கிப் போட்டு விட்டு ஒரு அற்புதமான மெலடியைத் தருகிறார் பிரகாஷ். மிக மிக மென்மையான பீட்ஸ், ஆங்காங்கே கொஞ்சம் வயலின், புல்லாங்குழல் – அவ்வளவுதான். பழைய பாடல்களைக் கேட்கும்பொழுது நம் மனதைக் கவரும் விஷயம் என்னவென்றால் சரணங்களுக்கு நடுவில் மட்டும்தான் இசைக் கருவிகளைக் கேட்கலாம். இப்பாடலிலும் அதுபோலத்தான்! மனதை வருடும் அழகிய மெட்டு. நா.முத்துகுமார் அற்புதமான காதல் வரிகளை எழுத, நரேஷ் ஐயரும் ஷ்ரேயா கோஷலும் கன கச்சிதமாகப் பாடியுள்ளார்கள். இது போன்ற பாடல்களெல்லாம் பிரபலமடையவில்லை என்பதை நினைத்தால், கொஞ்சம் வலிக்கின்றது. வேறென்ன சொல்வது இப்பாடலைப் பற்றி – நீங்களே கேளுங்கள்!
எங்கே போவேனோ
சரோட்? யாரது, இவ்வாத்தியங்களை எல்லாம் தமிழ் சினிமாவில் பிரயோகிப்பது? யாரங்கே, இசையமைப்பாளர்களுக்கு ஆயிரம் பொற்காசுகளைத் தரவும்!! பாடலில் ஆங்காங்கே வரும் ஹிந்துஸ்தானி வகை வரிகளும் அதையே நினைவூட்டுகின்றன. பென்னி தயாளின் குரலில் ஒரு சோகப் பாடல். எம்.கே.பாலாஜியும் ஜானகி ஐயரும் கைகொடுத்திருக்கிறார்கள். நல்ல பீட்ஸ், நல்ல மெலடி. மற்றபடி குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
கருங்காலி நாயே
கெட்ட வார்த்தையில் திட்டுகிறோம் என்று யோசிக்க வேண்டாம்! "நெல்லை பாய்ஸ்"ன் இசையமைப்பில் ஒரு வித்தியாசமான முயற்சி. கிராமத்து இளசுகள் பேசுவது போலவும், சண்டை போடுவது போலவுமான பாடல். கார்த்திக், மஹேஷ், ப்ளாக் பாண்டி, முத்துராஜ், செந்தில்குமார், ஸ்ரீகாந்த், சக்திநாராயணன், சதீஷ், விமல், தினேஷ் குமார், அபிராமி – என்றொரு பெரிய பட்டாளமே இப்பாடலுக்கு குரல் கொடுத்திருக்கிறது. கிராமிய மணம், கொஞ்சம் மேற்கத்திய வாசம் கலந்து வீசுகிறது!
நல்லதோர் இசைத்தட்டு. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், வாத்தியங்களை ரொம்பவும் அழகாகவும், நேர்த்தியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் "ஸௌண்ட் என்ஜினியர்" ஸ்ரீதர் அவர்கள் இப்படத்திற்காக சில வேலைகளைச் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. அதனால்தானோ என்னவோ, சப்தங்கள் எல்லாம் சங்கீதமாகவே ஒலிக்கின்றன. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ரஹ்மானுடன் உழைத்த ஸ்ரீதர், ஒரு வருடத்திற்கு முன் இயற்கை எய்தினார். ஸ்ரீதர் போன்ற ஒரு கலைஞன் கிடைப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ! ரஹ்மானைக் கேட்டால் , "ஸ்ரீதர் ஸ்ரீதர்தான், அவருக்கு நிகரேது?" என்பார். உண்மைதானே!
“
i like this song so much,because this is very melody