அக்னிப் பிரகாசம் (1)

ஆனந்த், தன்னுடைய ஆஃபீஸ் அறைக்குள்ளே சந்தடியில்லாமல் பிரவேசித்ததைப் பார்த்த அப்பாவுக்கு ஆச்சர்யம். அதோடு ஒரு குறுகுறுப்பும். விஷயமில்லாமல் இந்தப் பயல் இந்தப் பக்கம் தலைவைத்துக்கூடப் படுக்க மாட்டானே!

“வாடா மகனே, என்னது இது திடீர் ஆஃபீஸ் பிரவேசம்? என்ன விசேஷமோ?”

அப்பா எதிரில் ஆனந்த் நுனி நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

“ஒண்ணுமில்ல டாடி, ஒங்க சொமயக் கொஞ்சம் கொறைக்யலாம்னு ரொம்ப நாளாவே யோசிச்சிட்டிருந் தேன். இன்னிக்கித்தான் டைம் கெடச்சது.”

“என் சொமயக் கொறைக்யப் போறியா? நாளைலயிருந்து கம்ப்பெனிப் பொறுப்ப நீ எடுத்துக்கிட்டு என்ன ரிலீவ் பண்ணப் போறேங்கற. நா இன்னிக்கே ரெடி. வா வந்து இந்தச் சேர்ல ஒக்காரு.”

“அட, அந்த சொமயில்ல டாடி. இது வேற சொம.”

“வேற என்னடா சொம எனக்கு?”

“அதாவது டாடி, என்ன ஒரு நல்ல எடத்ல கல்யாணம் பண்ணிக்குடுத்துக் கரையேத்தணுங்கற பொறுப்பு ஒங்களுக்குகில்லியா. அது சொம இல்லயா டாடி?”

“ஓ, நீ அங்க வர்றீயா? இது ஒங்க அம்மாவோட டிப்பாட்மென்ட்டாச்சே!”

“மம்மி ஒரு போர் டாடி. நாலு பொண்ணு பாத்து வச்சிருக்காங்களாம்.”

“நாலு பத்தாதுங்கிறியா?”

“அதில்ல டாடி, வந்து…. அஞ்சாவதா நா ஒண்ணு பாத்து வச்சிருக்கேன்.”

“அவ்ளோ தான? கவலய வுடு முடிச்சிருவோம். பொண்ணு யாரோ?”

“லாவண்யா.”

“மொட்டையாச் சொன்னா?”

“கமர்ஷியல் டாக்ஸ் ஆஃபீசர் பொண்ணு.”

“அப்பா ஸி.டி.ஓ. வா. ஓக்கே.”

“அப்பா இல்ல டாடி, அம்மா.”

“அம்மாவா!”

அப்பாவின் முகம் திடீரென்று பிரகாசங்குன்றிப் போனது. நெற்றியில் இருந்திருந்தாற்போல சில கூடுதல் கோடுகள் விழுந்தன.

“பேர் தெரியுமா?” என்றார்.

“அம்மா பேரா டாடி? தெரியாதே!”

“எந்த ஸர்க்கிள்னு தெரியுமா?”

சொன்னான்.

அப்பாவின் முகம் முன்னிலும் இறுகியது.

அப்பாவின் முக மாற்றம் ஆனந்துக்கு லேசாய்க் கிலி கொடுத்தது.

“ஏன் டாடி, ஒங்களுக்கு அவங்களத் தெரியுமா?”

“தெரியும்னே வச்சுக்கோயேன். நம்ம ஸர்க்கிள் தான். நீ அவங்களப் பாத்திருக்கியோ?”

“இல்ல டாடி. “

“பாக்கறியா?”

“பாக்கறியான்னா?”

“ஓக்கே சொல்லு. அரேஞ்ஜ் பண்றேன்.”

“எப்படி டாடி?”

“ஸஸ்பென்ஸ் ஒண்ணுமில்லடா. நம்ம அக்கவுன்ட் டன்ட் ரஹீம் சார் ஸேல்ஸ் டாக்ஸ் ஆஃபீஸ்க்குக் கிளம்பிட்டிருக்கார். நீயும் அவர் கூடப் போய்ட்டு வா. லாவண்யா அம்மாவப் பாக்கலாம்.”

ஆனந்த் தன்னோடு வருவதில் அக்கவுன்ட்டுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். தன்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்.

“ரொம்ப புண்ணியந் தம்பி ஒங்களுக்கு ஒங்க தயவுல ஜம்ன்னு ஒங்க கூடக் கார்ல வர்றேன். இல்லன்னா பஸ்ல அடிச்சுப்புடிச்சி ஏறி இடிச்சிக்கிட்டே வரணும்.”

“ஏன், ஆட்டோல வர்றது தான, ரஹீம் சார்.”

“வரலாந் தம்பி. எம்.டி. அப்படித்தான் சொன்னார். பஸ்ல வந்தாக்கூட ஆட்டோ சார்ஜ் க்ளெய்ம் பண்ணிக்கலாம். ஆனா மனசு கேக்கணுமே. மத்த பிஸினஸ்மேன்களப் போல கள்ளக் கணக்கு எழுதறவங்க, கருப்புப் பணம் வச்சிருக்கறவங்கன்னா, அங்க வேல செய்றவங்களுக்கும் அந்தப் புத்திதான் இருக்கும். ஆனா ஒங்கப்பா அந்த மாதிரி குறுக்குப் புத்திக்காரர் இல்லியே தம்பி. நேர்மை, நாணயத்துக்கு மரியாத தர்றவர். பிஸினஸ்ல தர்மஞாயம் பாக்கறவர். கோடியில ஒருத்தர். அவருக்கு விஸ்வாசக் கொறையா நடக்க யாருக்குத் தம்பி மனசு வரும்!”

ஆனந்துக்கு அப்பாவைக் குறித்து மிகவும் பெருமையாயிருந்தது. அவருடைய கள்ளங்கபடமில்லாத உள்ளம் வியாபாரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் கூடத்தான். இவனுக்கு விவரந் தெரிந்த நாள் முதல் இன்றுவரை அப்பா இவனுக்குத் தந்தை கம் சிநேகிதன். சின்ன வயசில் அப்பா இவனைக் கை நீட்டியோ கடிந்து கொண்டோ தன்னுடைய தந்தை ஸ்தானத்தை நிலை நாட்டிக் கொண்டதாய் இவனுக்கு நினைவில்லை.

(தொடரும்)

ந‎ன்றி : க்ருஹஷோபா, அக்டோபர் 2003
(சுட்டும் விழிச்சுடராய்)

About The Author