ஃபெயில் காலம் (2)

பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்து அவன், அம்மா வேலை செய்கிற துலுக்க வீட்டில் வெராண்டாவில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருக்க வேண்டியது, அம்மா ஸ்டேஷனிலிருந்து திரும்பி வந்து அவனைக் கூட்டிக் கொள்ள வேண்டியது என்று ஏற்பாடு.

சொன்ன மாதிரியே நாலு மணிக்குப் பெரியப்பா ஆஜராகி விட்டார். தாயும் மகளும் பெரியப்பாவோடு திருநவேலி ஜங்ஷன் போவதற்கு மூணாம் நம்பர் டவுன் பஸ்ஸில் ஏறினார்கள். பெண்கள் ஸீட்டில் அம்மாவோடு உட்கார்ந்த செல்லம்மாவுக்கு, அம்மாவை யாரோ மாதிரி இருந்தது.

மகளுடைய அந்நியமாதல் அம்மாவுக்கு உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். அவள் பக்கவாட்டில் கையைச் செலுத்தி மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அம்மாவை ஏறிட்டுப் பார்த்த செல்லம்மா, தன்னுடையதைப் போலவே அம்மாவின் கண்களும் பனித்திருப்பதைப் பார்த்து, பாசத்தோடு அம்மாவோடு ஒட்டிக் கொண்டாள்.

"அம்மா" என்று மெல்லக் குரல் கொடுத்தாள்.

"என்ன செல்லம்மா?" என்று அவள் முகத்தை நிமிர்த்தினாள் அம்மா.

"அம்மா, நா மெட்ராஸ்க்குப் போகலம்மா. நா பள்ளிக் கோடத்துக்குப் போய்ப் படிக்கேம்மா."

"நீதான் பெயிலாய்ட்டியேட்டி செல்லம்மா."

"இனிமே பெயிலாக மாட்டேம்மா."

"தம்பி நல்லாப் படிக்காம்லா. அவனப் பெரிய படிப்புப் படிக்க வக்யணும்ன்ட்டி. அம்மாக்கு ஒடம்புக்கு முடியல. மருந்து சாப்புடுதேன், ஒரு வருசத்ல சீக்கெல்லாம் போயிரும். நீ ஒரேயொரு வருசம் மெட்ராஸ்ல போய் இரி. அம்மாக்கு ஒடம்பு சரியானவொடன நீ திரும்பி வந்துரலாம்."

"என்ன இங்ஙனயே பாளையங்கோட்டயில ஒரு வூட்ல சேத்து வுடேம்மா."

"இங்ஙன என்னட்டி சம்பளம் குடுப்பாவ, மிஞ்சிப் போனா ஒனக்கு முன்னூறு ரூவா குடுப்பாவ. மெட்ராஸ்ல ரெண்டாயிரம் ரூவாயில்லட்டி! அந்த வூட்ல ஒரு ஒண்ற வயசுக் கொளந்த இருக்காம். நீ அதப்பாத்துக்கணுமாம். பெறவு, வூடு பெருக்கச் சொல்லுவாவ. பாத்தரம் களுவச் சொல்லுவாவ. நம்ம வூட்ல செய்யலியா நீ, அதத்தான மெட்ராஸ்ல போய்ச் செய்யப் போற! ஒண்ணும் வருத்தப்பட்டுக்கிராத செல்லம்மா."

வருத்தத்தையன்றி வேறு உணர்ச்சிகள் செல்லம்மாவிடம் இல்லை. மகளை அணைத்தபடியே அம்மா அறிவுரைகள் வழங்கினாள்.

"ஒனக்குன்னு ஒரு தட்டு, தம்ளர் எல்லாம் தருவாவ, அதுலயே நீ சாப்டுக்க, தண்ணி குடிச்சிக்க. அவிய ஏனங்கள நீ பொளங் காதட்டி. அது அவியளுக்குப் புடிக்காது. நாக்காலில்லல்லாம் ஒக்காராத. கீள தரையிலதான் ஒக்காரணும். என்ன?"

"ஆட்டும்மா, டி.வி.யெல்லாம் பாக்க வுடுவாகளாம்மா?"

"அவியப் பாக்கும் போது நீயும் கீள ஒக்காந்து பாரு. அதுக்கென்ன, நீ கண்ண மூடிக்கட்டின்னா சொல்லப் போறவ? ஆனா, டி.விப் பொட்டியயெல்லாம் நீ தொடப்படாதுட்டி. பெரியவுக போட்டாவன்னா நல்ல புள்ளயாக் கீள ஒக்காந்துப் பாக்கணும், என்ன?"

"லீவுல்லாம் கெடயாதாம்மா?" என்று செல்லம்மா பாவமாய்க் கேட்டதற்கு,

"பள்ளிக்கோடமாட்டி அது, லீவு வுடதுக்கு! கேக்கதப் பாறேன்!" என்று அம்மா சிரிக்கப் பார்த்தாள். ஆனால் உதடுகள் சிரிக்க மறுத்தன.

ஜங்ஷனில் மூணு பேரும் இறங்கிக் கொண்டு ஸ்டேஷனுக்குள் பிரவேசித்தார்கள். தாயைப் பிரியும் வேளை நெருங்கி விட்டது என்பது செல்லம்மாவின் சோகத்தை அதிகப்படுத்தியது.

அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டு, "தம்பியும் நீயும் என்னப் பார்க்க மெட்ராஸ்க்கு வருவீகளாம்மா?" என்று தாயின் முகத்தைத் தவிப்போடு பார்த்தாள்.

"மெட்ராஸ்க்குப் பேய்ட்டு வாறதுக்கு ஆளுக்கு ஐநூறு ரூவாய்க்கிட்ட ஆயிருமேட்டி" என்று சமாளித்தாள் அம்மா.

"பெரியப்பா அப்பப்ப வந்து ஒன்னியப் பாத்துக்குவாக. என்னமும் வேணும்னா நீ பெரியப்பாட்ட கேட்டு வேங்கிக்க, என்ன? ஒரேயொரு வருசந்தானட்டி செல்லம்மா, சொடக்குப் போடதுக்குள்ள வருசம் விர்ர்ன்னு ஓடிரும்."

"பொறவு, நா பாளையங்கோட்டக்கித் திரும்பி வந்துரு வேனாம்மா?"

"ஆமா செல்லம்."

"நா திரும்பி வந்த பெறவு என்ன இஸ்கூல்ல போடுவியாம்மா?"

"கட்டாயம் போடுவேன். நீ மெட்ராஸ்ல போயி, நல்ல்ல்ல புள்ளன்னு பேர் வேங்கிட்டு வரணும்ட்டி செல்லம்."

"ஆட்டும்மா" என்று தாயிடம் விடை பெற்றுக் கொண்டாள் செல்லம்மா. பிறகு, சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாய் அம்மாவைப் பார்க்கத் திரும்பினாள்.

"அம்மா, யூனிஃபாம் ரெண்டும் கிளிஞ்சி போச்சும்மா, புதுசா தக்யணும்."

"நீதான் சம்மாரிக்கப் போறியே செல்லம்மா, புதுசு புதுசா தச்சிருவோம்" என்று அவளுடைய தலையை வருடி அம்மா வழியனுப்பி வைத்தாள்.

ரயிலின் வால்ப் பகுதியிலிருந்த பெண்கள் பெட்டியில் அவளை ஏற்றி விட்டுப் பெரியப்பா, ரெண்டு பெட்டிகளுக்கு முந்தியிருந்த அன்ரிஸர்வ்டு கோச்சில் ஏறிக் கொண்டார்.

ரயில் கிளம்புவதற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டதும், ப்ளாட்ஃபாமிலிருந்த அம்மா, பெண்கள் பெட்டியின் ஜன்னலை நெருங்கி, உள்ளேயிருந்த மகளைப் பார்த்து "வழியில எங்ஙனயும் எறங்கப்படாதுட்டி" என்று எச்சரித்தாள்.

"விடியக்காலம் மெட்ராஸ்ல வண்டி நின்னப் பெறவு பெரியப்பா வந்து கூப்புடுவாவ, அப்பத்தேன் எறங்கணும் என்ன?"

சரியென்று தலையசைத்தாள் செல்லம்மா. ரயில் நகரத் தொடங்கியதும் வேகமாய் ஜன்னலை நெருங்கி வந்தாள் செல்லம்மா.

ஜன்னல் கம்பியைப் பற்றிக் கொண்டு, கொஞ்சங் கொஞ்சமாய் விலகிப் போய்க் கொண்டிருந்த அம்மாவின் உருவத்தைக் கண்ணீரின் ஊடே பார்த்துக் கூவினாள்.

"அம்மா அம்மா, இனிமே நா பெயிலாகவே மாட்டேம்மா."

(ஸண்டே இண்டியன், 28 ஜனவரி – 3 ஃபிப்ரவரி )
(இலையுதிர் காலம்)

About The Author

7 Comments

  1. shree

    படித்து முடிக்கையில் மனதின் கனத்தை விவரிக்க வார்த்தைகளில்லை. நல்ல வேளையாக அந்தக் குழந்தை போகிற இடத்தில் கஷ்டப்படுவதை எல்லாம் விவரிக்காமல் கதை முடிந்ததே என்று இருந்தது. இப்போது அந்த வீட்டில் அவளை அருமையாக வைத்திருந்ததாகவும், ஒரு வருடத்திற்குப் பிறகு அக்குழந்தை அம்மாவிடம் மீண்டு விட்டதாகவும் கற்பனை செய்து ஆறுதலடைகிறேன்!

    இரண்டு கைகளாலும் வாழ்த்துகளை வாங்கிக் கொள்ளுங்கள் ஐயா… மனதின் கனம் வாழ்த்திலும் உள்ளது.

  2. kalayarassy

    உருக்கமான கதை. தாய்க்கும் மகளுக்குமான உரையாடல் மிகவும் இயல்பாக உள்ளது.

  3. parameswari

    பசியுடன் இருக்கையில் இதைமட்டும் படித்துவிட்டு பிரகு சாப்பிடலாம் என்ட்ரு அவசர அவசரமாக படித்தேன்.மீன்டும் நிதானமாக படித்தேன். இப்பொழுது பசி போன இடம் தெரியவிலை மனம் கனத்துப் போனதால்.

  4. Sivaramkumar

    மிக அருமையான கதை. நல்ல நடை. நெல்லை பாஷை படிக்கும் போது ஊருக்கு சென்ற ஒரு திருப்தி.இது போல் இன்னும் நெறைய படைப்புகளை எதிர் பார்க்கிறோம்.

  5. Rishi

    நண்பர் சிவராமுக்கு நெல்லைப் பக்கம் எந்த ஊருன்னு தெரிஞ்சிக்கலா?

  6. P.Balakrishnan

    திரு நெல்வேலிச் சீமைப் பேச்சு வழக்கில் ஒரு கனமான கதை!

  7. mubassir

    /அருமையான கதை மிகவும் உருக்கமாக இருந்தது வாசிக்க முடியவில்லை.மனதை நெருடச் செய்தது.

Comments are closed.