1968ல் வெளிவந்த ஷிகார் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பர்தே மெய்ன் ரெஹ்னே தோ’ என்ற
ஆஷா போஸ்லேவின் பாடலை 1997ல் ரீமிக்ஸ் செய்து வெளியிட்டபோது அது பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலின் இசையைப் போலவே பாடலின் படமாக்கமும் மிகுந்த சுவாரஸ்யமாய் அமைந்திருப்பது சுவையை இரட்டிப்பாக்குகிறது.
படக்காட்சியில் ஆஷா பாடலைப் பாடிக் கொண்டே விமான நிலையத்தில் தன் பயணத்தைத் துவங்குகிறார். பின்புலத்தில் நாயகனும் நாயகியைத் தேடித் தன் பயணத்தை மேற்கொள்கிறார். பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆஷா கையால் பின்னிக் கொண்டிருக்கும் ஸ்வெட்டர் துணியில் இடம்பெறும் காட்சிகள் நாயகனுக்கு நாயகி இருக்கும் இடத்திற்கான குறிப்பைத் தருகின்றன.
நாயகன் தேடிச் செல்லும் இடங்களில் அவரது விசாரிப்புகளுக்கு மற்றவர்கள் காட்டும் அதிர்ச்சியும் தயக்கமும் கதையின் விறுவிறுப்பைத் தூண்டுகின்றன. இறுதியில் இளவரசியின் பின்னல் மூலம் கோட்டை ஏறி அவரை விடுவித்து அழைத்துப் போகிறார் நாயகன். சின்னஞ் சிறுவர்களின் ஒரு வரிக் கதையை பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் படமாக்கியிருக்கும் விதத்திற்கு ஒரு ஓ! இசையையும் காட்சிகளையும் வெகு பாந்தமாய்ப் பொருத்தி நமது கண்களுக்கும் செவிக்கும் ஒருங்கே விருந்தளித்திருபதற்கு மற்றொரு சபாஷ்!
கதையில் வரும் மற்ற பாத்திரங்களெல்லாம் உணர்ச்சிகளை நாடக பாணியில் சற்று அதிகமாய் வெளிப்படுத்த, நாயகனின் முகம் உணர்ச்சியற்றிருப்பது கொஞ்சம் உறுத்தலாக இருக்கிறது. வருடங்கள் ஆக ஆக ஆஷாவின் இனிமையான குரல் இளமையாகிக் கொண்டே வருவதையும், அவரது புன்னகை முகம் திரையையும் நம்மையும் ஆக்கிரமித்துக் கொள்வதையும் சற்று ஆச்சரியத்தோடு கவனிக்கத் தோன்றுகிறது.
நல்லாருக்கு
ஆகா …….ஆஷா…!