ஓம் சச்சிதானந்த பரபிரம்மா
புருஷோத்தமா பரமாத்மா
ஸ்ரீபகவதி சமேத
ஸ்ரீ பகவதே நமஹ
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீபகவன் மற்றும் ஸ்ரீ அம்மா பகவானால் அளிக்கப்பட்ட இந்த மூலமந்திரத்தின் பொருள் புரியாமல் ஜெபித்தாலே பல நன்மைகள் அடையலாம் என்றும் பொருள் புரிந்து ஜெபித்தாலோ நன்மைகள் பலமடங்காகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் ஆன்மிகத்தில் நாட்டமில்லாதவர்களைக் கூட கவர்ந்து இழுத்துக் கொள்ளும் வசீகரம் டி லீவாவின் இசைக்கும் குரலுக்கும் இருக்கிறது. அலட்டலில்லாத அற்புதமான இசையும் உருக்கமான குரலும் நம் நெஞ்சில் நிலைத்துவிடுகின்றன. கூடவே அர்த்தம் நிறைந்த, வர்ணங்கள் செறிந்த வரைகலை நம் கற்பனையை நிறைக்கிறது. பாடலைக் கேட்டுக் கொண்டு இந்த படத்தொகுப்பைப் பார்க்கையில் நம்மையறியாமல் ஏதோ ஒரு வித அமைதி மனதை நிறைப்பதை உணரமுடிகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் அனைவருக்கும் ஒரே போலிருக்கும் என்று சொல்லமுடியாதல்லவா? அதனால் மேலும் இது குறித்து எழுதி எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதை விட, படத்தொகுப்பைப் பார்த்து நீங்களே உணர்ந்து கொள்ளும்படி விட்டுவிடுகிறேன். வரைகலையுடன் திரையில் ஓடும் மந்திரத்தைக் கவனித்து விருப்பமுள்ளவர்கள் உடன் பாடலாம்.
அறிந்து கொள்ள விரும்புவோர்க்காக மூலமந்திரத்தின் பொருள் கீழே தரப்பட்டிருக்கிறது:
http://www.youtube.com/watch?v=0Y9zLIbmKqI
ஓம்:
ஓம் என்ற வார்த்தைக்கு மட்டும் பலநூறு வகையான விளக்கங்கள் உண்டு. இந்த வார்த்தையிலிருந்துதான் பிரபஞ்சமே உருவாகியதென்ற நம்பிக்கையும் உண்டு. ஓம் என்ற இந்த தெய்வீக ஒலிக்கு உருவாக்கவும், காக்கவும் அழிக்கவும் வல்லமை உண்டு
சத்:
சத் என்பது இருப்பைக் குறிக்கிறது. இப்பிரபஞ்சத்தின் உடலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சத் அசையாத் தன்மை கொண்டது
சித்:
அறிநிலை (Consciousness). பிரபஞ்சத்தின் பிரக்ஞை என்று கூடச் சொல்லலாம். இதன் மூலம்தான் ஆற்றல் வெளியாகிறது. சத் என்ற உடலை அசைக்கும் உயிர்தான் சித் என்று விளங்கிக் கொள்ளலாம்
ஆனந்தா:
பிரபஞ்சத்தின் இருப்பையோ அல்லது ஆற்றலையோ முழுமையாக அனுபவிக்கும்போது ஏற்படும் உணர்வே ஆனந்தம். இதுவே பிரபஞ்சத்தில் இயற்கை நிலை.
சத்+சித்+ஆனந்தா மூன்றும் சேர்ந்ததே பிரபஞ்சம். எனவேதான் இறையை சச்சிதானந்தா என அழைக்கிறோம்.
பரபிரம்மா:
உருவமுள்ளதும் உருவமற்றதுமான இறை – இடம், பொருள், காலம் போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்த நிலையிலிருக்கும் படைப்பாற்றலே பரபிரம்மா
புருஷோத்தமா:
இறைவன் மனிதருடன் தொடர்பு கொண்டு வழிநடத்தும்போது அவனை புருஷோத்தமா என அழைக்கிறோம்.
பரமாத்மா:
இறை ஒவ்வொரு உயிரிலும் பொருளிலும் வெளிப்படுவதால் அதனை பரமாத்மா என்கிறோம்
ஸ்ரீபகவதி:
இறையின் பெண்மை, தாய்மை, சக்தி நிலை.
சமேத:
ஒருங்கிணைந்து (ஆண்மையும் பெண்மையும் இணைந்த)
ஸ்ரீ பகவதே
இறையின் ஆண்மை நிலை.
நமஹ:
வணக்கம்
மூலமந்திரத்தின் முழுமையான பொருள்:
எங்கும் நிறைந்துள்ள, மாறாத அதே சமயம் மாறக்கூடிய, மனித உருவிலும் அரூபமாயும் இருக்கும், ஒவ்வொரு உயிரிலும் வெளிப்படும், பெண்மையும் ஆண்மையும் ஒருங்கிணைந்த எல்லையற்ற அறிவே உனக்கு வணக்கம்.
ஸ்ரீ ஸ்ரீ கல்கி பகவானின் அருளைப் பெறுவோம் என்ற நூலில் தரப்பட்டுள்ள விளக்கத்துக்கு இங்கே சொடுக்கவும்.
மூலமந்திரத்தின் வெவ்வேறு இசை வடிவங்களைக் கீழ்க்கண்ட முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்:
http://www.onenessmovementflorida.org/Srimurthi.htm
உமா மோகனின் குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வடிவம் நம்மை மோன நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
அடுத்த வாரம் மீண்டும் ஃபிலிம் காட்டுவோம்…
“